44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி | மதுரை பள்ளி மாணவ, மாணவியர்கள் பங்கேற்பு | கலெக்டர் பார்வை
44th International Chess Olympiad | Students of Madurai School participated Collector's View

தமிழகத்தில் நடைபெறவுள்ள 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்திடும் நோக்கில் மதுரை மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பாக பள்ளி மாணவ, மாணவியர்களிடையே நடத்தப்பட்ட செஸ் போட்டியை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் நேரில் பார்வையிட்டார்.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் மரு.எஸ்.அனீஷ் சேகர் தெரிவித்ததாவது:- தமிழகத்தில் முதன்முறையாக சர்வதேச அளவிலான 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வருகின்ற 28-தேதி தொடங்கி அடுத்த மாதம் 10-ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளது.
இப்போட்டியில் 186 நாடுகளைச் சார்ந்த 2,000-க்கும் மேற்பட்ட சர்வதேச சதுரங்க விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். தமிழ்நாடு அரசின் மூலம் இதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள் அனைத்தும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு முதலமைச்சர் இம்முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டு அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்கள். மேலும், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தொடர்பாக விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, மதுரை மாவட்டத்தில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான லோகோ அடங்கிய விளம்பரப் பதாகைகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், டாக்டர் எம்.ஜி.ஆர்.பேருந்து நிலையம் (மாட்டுத்தாவணி), மதுரை விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மைதானம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய இடங்களில் மக்கள் பார்க்கும் வகையில் வைக்கப்பட்டுள்ளன.
இதன் தொடர்ச்சியாக, மாவட்டத்தில் உள்ள 1,323 அரசு பள்ளிகளிலும் 13.07.2022 முதல் 15.07.2022 வரையிலான 3 நாட்கள் மாணவ, மாணவியர்களுக்கு பள்ளி அளவில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை, 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை, 9 முதல் 10-ஆம் வகுப்பு வரை மற்றும் 11 முதல் 12-ஆம் வகுப்பு வரை என நான்கு பிரிவாக செஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இப்போட்டிகளில் 15,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் ஆர்வமுடன் பங்கேற்றுள்ளனர். தொடர்ந்து வட்டார அளவில் வரும் 20-ஆம் தேதியும், மாவட்ட அளவில் 25-ஆம் தேதியும் செஸ் போட்டிகள் நடத்தப்படுகிறது.
இதில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான பிரிவை தவிர்த்து மீதமுள்ள 3 பிரிவுகளிலும் பள்ளி அளவில் முதல் இரண்டு இடங்களைப் பெறும் மாணவ, மாணவியர்கள் மட்டும் வட்டார அளவிலான செஸ் போட்டிகளில் பங்கு பெறுவர். அதனைத் தொடர்ந்து, வட்டார அளவில் நடைபெறும் போட்டிகளில் பிரிவுகள் வாரியாக முதல் 3 இடங்களைப் பெறக்கூடிய மாணவ, மாணவியர்கள் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்கவுள்ளனர்.
மாவட்ட அளவில் முதல் 2 இடங்களை பெறக்கூடியவர்கள் மாநில அளவில் நடைபெறும் 5 நாள் பயிற்சி முகாமில் பங்கேற்பர். இம்முகாமில் உள்ள மாணவ, மாணவியர்கள் சர்வதேச சதரங்க ஒலிம்பியாட் வீரர்களுடன் கலந்துரையாடவும், செஸ் ஒலிம்பியாட் போட்டியினை பார்வையிடவும் வாய்ப்பு வழங்கப்பட உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் தெரிவித்தார்.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர்பான விளம்பர ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பள்ளி வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்வுகளின் போது, மாநகராட்சி மேயர் திருமதி.இந்திராணி பொன்வசந்த், மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் ஜீத்சிங் காலோன், மாநகராட்சி துணை மேயர் தி.நாகராஜன், வட்டாடரப் போக்குவரத்து அலுவலர்கள் ஏ.செல்வம், எம்.சிங்காரவேலு, ஆர்.சித்ரா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.