ஹலோ மதுரை நேயர்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம். மீண்டும் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். நாம் இந்த வீடியோவில் 3000 முறை பாம்புக்கடி வாங்கி 6 முறை ஐசியூவில் இருந்து மீண்டு வந்த வாவா சுரேஷ் பற்றிதான் பார்க்கப் போகின்றோம்.
கோட்டயத்தில் பாம்பு பிடிக்க சென்றவரின் காலில் பாம்பு கடித்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, உயிருக்கு போராடி வந்த பிரபல பாம்பு பிடிக்கும் வல்லுனர் வாவா சுரேஷ் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி, உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
உயிரோடு வீடு திரும்பி உள்ள வாவா சுரேஷை பார்க்க பலரும், அவரின் வீடு முன் நாள்தோறும் கூடி வருகின்றனர். கடந்த ஒரு வாரமாக வாவா சுரேஷ்தான் தேசிய அளவில் வைரல் டாப்பிக்.
ஆஸ்திரேலியாவில் முதலைகளை பிடித்து உலகம் முழுக்க பிரபலம் அடைந்த ஸ்டீவ் இர்வீனுக்கு இணையாக புகழ் பெற்ற நபர்தான் வாவா சுரேஷ்.. தேசிய அளவில் ஊடகங்களின்.. மக்களின் கவனத்தை ஈர்த்து இருக்கும் இந்த வாவா சுரேஷ் யார் என்று தெரிந்துகொள்ளலாம்.. வாங்க!
ஸ்னேக் மாஸ்டர் என்று அழைக்கப்படும் வாவா சுரேஷ் மிக மிக வறுமையான குடும்ப பின்னணியை கொண்டவர். திருவனந்தபுரம் அருகே ஸ்ரீகார்யம் என்ற டவுனில் பிறந்து வளர்ந்தவர்.
இவருக்கு சின்ன வயதில் இருந்தே பாம்பு என்றால் தீவிர ஆர்வம். 12 வயதிலேயே இவர் தனது பள்ளிக்கு செல்லும் வழியில் முதல்முறையாக கிங் கோப்ரா பாம்பு ஒன்றை பிடித்தார். அதை வெறும் கையால் பிடித்ததோடு வீட்டிற்கும் கொண்டு வந்து இருக்கிறார்.
15 நாட்கள் அந்த பாம்பை கண்ணாடி பாட்டில் ஒன்றில் வளர்த்துவிட்டு பின்னர் காட்டில் விட்டு இருக்கிறார்.. அப்போது தொடங்கியது இவருக்கும் பாம்பிற்கும் இடையிலான நண்பேன்டா ஸ்டோரி..!
அதன்பின் படிப்பை முடித்துவிட்டு பாம்பு பிடிப்பதை தன்னுடைய தொழிலாக மாற்றிக்கொண்டார் வாவா சுரேஷ். கடந்த 30 வருடமாக பாம்பு பிடிக்கும் பணியைத்தான் இவர் செய்து வருகிறார். இவரின் சர்வீஸை அங்கீகரிக்கும் வகையில் கேரள வனத்துறை இவருக்கு அரசு வேலையும் கொடுத்தது.
ஆனால் அரசு வேலைக்கு சேர்ந்தால் சுயமாக சேவை செய்ய முடியாது என்பதால் அந்த வேலையை உதறினார். ஆனாலும் கேரள வனத்துறைக்கு இவர் தொடர்ந்து உதவி செய்து வருகிறார். கேரள வனத்துறைக்கு பாம்பு பிடிக்க சொல்லிக்கொடுத்தவரே வாவா சுரேஷன்தான்.
இவர் பாம்பு பிடிக்கும் வீடியோ யூ டியூப் முழுக்க பிரபலம். கொக்கி இல்லாமல், பாம்பை அடிக்காமல், கம்பி இல்லாமல் மிக எளிமையாக பாம்பை பிடிப்பார். முக்கியமாக பார்த்தாலே வயிற்றை கலக்கும் அதி பயங்கரமான மிகப் பெரிய ராஜ நாகப் பாம்பை மிகச் சாதாரணமாக பிடித்து அதனுடன் விளையாடுவார்.
அதோடு பாம்பை இவர் கொலை செய்வதும் கிடையாது. ஸ்னேக் மாஸ்டர் என்ற நிகழ்ச்சியை மலையாள சேனல் ஒன்றில் இவர் நடத்தி வந்ததும் குறிப்பிடத்தக்கது. மக்கள் காடுகளில் வீடு கட்ட தொடங்கிவிட்டனர்.
காடுகளின் அளவு சுருங்கிவிட்டது. இதனால் பாம்புகள் வீட்டிற்குள் வருகிறது. இது பாம்புகளின் தப்பு என்று கூறுகிறார் வாவா சுரேஷ்.. இதுவரை 20 ஆயிரம் பாம்பு முட்டைகளை காப்பாற்றி.. அதை காட்டுக்குள் வளர்ந்த பின் விட்டு இருக்கிறார்.
அவரின் வீடே குட்டி பாம்பு பார்க்தான். இதுவரை 30 ஆயிரம் பாம்புகளை பிடித்து இருக்கும் இவர் 3 ஆயிரம் முறை பாம்புகள் மூலம் கடி பட்டு இருக்கிறார். அதில் 396 பாம்புகள் அதிக விஷம் கொண்ட கொடூரமான பாம்புகள்.
இதுவரை 5 முறை ஐசியூ, 2 முறை வெண்டிலேட்டர் உதவியுடன் இவர் சிகிச்சை பெறும் அளவிற்கு நிலைமை மோசமாகி உள்ளது. இப்போது கடைசியாக ஐசியூ சென்றதையும் சேர்த்தால் 6 முறை! இவர் இதற்கு முன் இதே பாம்பு கடி 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கடித்தது.
அப்போது கல்லரா பகுதியில் பாம்பு பிடிக்க போய் வைபர் வகை பாம்பு இவரை கடித்தது. கவனமாக இவர் பாம்பை பாட்டிலில் போட்ட பின் அப்பகுதி மக்கள் பாம்பை பார்க்க வேண்டும் என்று கூற, பாட்டில் மூடியை திறந்தவரை பாம்பு கடித்துள்ளது. இதனால் 7 நாட்களுக்கு மேல் ஐசியூவில் இருந்து போராடி உயிர் பிழைத்தார்.
இவர் மருத்துவமனையில் இருந்த போது இவருக்காக மக்கள் பலர் கேரளாவில் நாகராஜா கோவில்களில் பூஜை செய்தனர். நாகர்கோவிலில் மலையாளிகள் பலர் நாகராஜா கோவிலில் வழிபாடு நடத்தினர். சர்ச், மசூதிகளில் இவருக்காக வேண்டுதல் கூட்டங்கள் நடந்தன.
2012ல் இவருக்கு பாம்பு கடி விஷம் முன்பே ஏறி ஒரு விரல் எடுக்கப்பட்டுவிட்டது. பாம்பு விஷம் உடல் முழுக்க பரவாமல் இருக்க விரல் நீக்கப்பட்டது. ஆனாலும் இவர் தொடர்ந்து இந்த பணியை செய்து வருகிறார்.
மருத்துவர்களின் அறிக்கைபடி, இவரின் உடலியேயே பல பாம்புகளின் விஷங்களுக்கு எதிராக ஆண்டிபாடி உள்ளது. இவர் பல முறை பாம்பால் கடிக்கப்பட்டதால் இந்த அதிசய ஆண்டிபாடி உடலில் தானாக உருவாகி உள்ளது.
இது வேறு யாருக்கும் இல்லை. இதனால்தான் இவர் பாம்பு கடித்தும் அவ்வளவு ஈசியாக சாகாமல் இருக்கிறார் என்று ஆச்சர்யமான தகவலை கூறியுள்ளனர்.
இந்த நிலையில்தான் கோட்டயத்தில் உள்ள குறிச்சியில் கடந்த ஜனவரி 31ம் தேதி இவர் பாம்பு பிடிக்க போன போது அவரின் காலில் ராஜ நாகப் பாம்பு கடித்தது. அந்த பாம்பை அவர் பிடித்து வனத்துறை அதிகாரிகளிடம் கொடுத்துவிட்டார்.
ஆனாலும் பாம்பு விஷம் உடலில் ஏறிவிட்டது. இதையடுத்து உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர் ஐசியூவில் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். இவருக்கு 65 ஆண்டி வேனம் மருந்துகள் கொடுக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்கு பின் மீண்டு வந்துள்ளார். பிப்ரவரி 7ந் தேதி இரவு சிகிச்சையிலிருந்து மீண்டு வந்துள்ளார்.
இவர் மீண்டு வந்ததே ஆச்சர்யமான விஷயம் என்று மருத்துவர்கள் கூறி உள்ளனர். சாதாரண பாம்பு கடிக்கு கொடுக்கப்படும் மருந்துகளை விட மூன்று மடங்கு மருந்து இவருக்கு கொடுத்துள்ளனர்.
தனக்கு ஏற்பட்ட பாம்பு கடி சம்பவங்களிலேயே இதுதான் மோசம் என்று வாவா சுரேஷ் கூறியது குறிப்பிடத்தக்கது. இவர் பொதுவாக பாம்பு பிடிக்க அதிக பணம் வாங்க மாட்டார் என்கிறார்கள். அப்படியே வாங்கும் பட்சத்தில், இவர் அதை மக்களுக்கு உதவ பயன்படுத்துவார்.
பலரின் படிப்பு செலவிற்கு இவர் உதவி வருகிறார். யூ டியூப் வருமானம் மூலம் மக்களுக்கு சேவை செய்து வருகிறார் என்று அப்பகுதி மக்கள் இவரை பாராட்டி உள்ளனர். ஆனால் இவர் பாம்பு பிடிக்கும் முறை சரி இல்லை என்று வனத்துறை அதிகாரிகள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
சமீப காலமாக வனத்துறை இவரை எதிர்த்து வரும் நிலையில், தனக்கு எதிராக சில வனத்துறை அதிகாரிகள் பொய்யான புகார்களை கொடுப்பதாகவும். பாம்பு பிடிக்க அவர்களுக்கு கற்றுக்கொடுத்ததே தான்தான் என்று வாவா சுரேஷ் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் தற்போது உயிரோடு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள வாவா சுரேஷை பார்க்க பலரும் அவரின் வீடு முன் கூடி விடுகின்றனர்.
பாம்பு கடியிலிருந்த மீண்டும் மீண்டு வந்துள்ள வா வா சுரேஷ், வதந்திகளை கண்டு நான் அஞ்சப்போவதில்லை. யார் தடுத்தாலும் நிறுத்தப்போவதில்லை. என் உயிர் உள்ளவரை நான் பாம்புகளை மீட்பேன். இனி பாம்புகளை மீட்கும்போது இன்னும் அதிக கவனமாக செயல்படுவேன்” என்று மீடியா முன்னிலையில் கூறியுள்ளார்.
இதையே நம்மூரு ஸூடைலில் கூறுவதென்றால் பிடிக்க கொத்த செத்த ரிப்பீட்டு, பிடிக்க கொத்த செத்த ரிப்பீட்டு… மாநாடு படம் பார்ப்பதுபோல்தான் வா வா சுரேஷின் வாழ்க்கை. வேறு ஒரு தகவலில் உங்களை சந்திக்கும் வரை உங்களிடமிருந்து விடைபெறுவது ஹலோ மதுரை ரமேஷ் நன்றி வணக்கம்.