
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள சார்பு பத்திரப்பதிவு அலுவலகம், கடந்த 180 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. அமைக்கப்பட்ட நாள் முதல் அக்கட்டிடம் ஓட்டு கட்டிடமாகவே இருந்ததால், நாளடைவில் மிகுந்த சேதம் அடைந்து விரிசல் ஏற்பட்டதுடன், மழைக்காலங்களில் தண்ணீர் ஒழுகி ஏராளமான ஆவணங்கள் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதனை பாதுகாத்திடவும், அலுவலகத்தை புதுப்பித்து தரவும் பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். முக்கியமாக இக்கட்டிடத்தின் சுற்றுச்சுவர்கள் மிகுந்த விரிசல் ஏற்பட்டுன்னதால், பழங்கால கட்டிடத்தில் அமைக்கப்பட்ட மர ஜன்னல்கள், கதவுகள் இவைகள் அனைத்தும் உடைந்த நிலையில் சேத்துடன் உள்ளது.
இனி மழைக்காலம் என்பதால், எப்போது வேண்டுமானாலும் இக்கட்டிடம் இடிந்து விழும் அபாயமும் உள்ளது. குறிப்பாக, எந்தவித பாதுகாப்பு இல்லாத நிலையில் கட்டிடமும், கட்டிடத்தில் புதைந்துள்ள ஆவணங்களும் இருக்கின்றன. மேலும், இக்கட்டிடம் இடப் பற்றாக்குறையாக இருப்பதால், மாற்று இடத்தில் புதிய கட்டிடம் அமைத்துக் கொடுக்க அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உடனடியாக மதுரை நிர்வாகம் இதில் தலையிட்டு, பழமையான கட்டிடம் மழை காலத்தில் இடிந்து விழுந்து, ஆவணங்கள் சேதம் அைடவதற்கு முன்பாக வருமுன் காப்போம் என்ற அடிப்படையில் மாற்று இடம் தேர்வு செய்து அதில் புதிய கட்டிடம் கட்டிக் கொடுத்தால், பத்திர ஆவணங்கள் பத்திரமாக இருக்கும்.