மதுரைவரலாறு

தல்லாகுளம் கருப்பணசாமி, மொட்டைக் கோபுரம் முனீஸ்வரன், பாண்டிமுனி – மனதில் வாழும் மதுரை 02

Living in the mind Madurai 02

மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் நீரைசேகரித்து வைக்கும் குளம் தல்லாகுளம் என வழங்கப்பட்டது. தற்போது குளம் இல்லை அவ்விடத்தில் மதுரை மாநகராட்சி அலுவலகம் அமைந்துள்ளது. தல்லாகுளம் தமுக்கம் மைதானத்தின் வடமேற்கு மூலையில் உள்ளதுதான் கருப்பணசாமி கோவில். மதுரை வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் பதிவாகும் பெரும்பாலான வாகனங்கள் இங்கு முதல் பூஜை செய்தபின்னரே பயணத்தைத் தொடங்குகின்றன. சித்திரைத் திருவிழாவின் முக்கிய விழாக்களில் ஒன்றான கள்ளழகர் பூப்பல்லக்கு வைபவம் இந்த கோவிலில்தான் நடைபெறும். பூப்பல்லக்கில் கள்ளழகர் பவனி வரும் கண்கொள்ளாக்காட்சி உலகப் பிரசித்தி பெற்றதாகும்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வடக்கு கோபுரவாசலில் அமைந்துள்ளதுதான் முனீஸ்வரன் கோவில். மீனாட்சி அம்மன் கோவில் வடக்கு கோபுரம் கட்டப்படுவதற்கு முன்னரே இந்த முனீஸ்வரன் அங்கு இருந்ததாகவும் கோவில் கட்டுமானப் பணிகளில் பெரும்தடங்கல்கள் ஏற்பட்டு வந்ததாகவும், இக்கோபுரத்தின் அடியிலுள்ள தன்னைத்தவிர பிற தெய்வச்சிலைகள் இக்கோபுரத்தின் அமைக்கக் கூடாது என சிற்பியின் கனவில் முனீஸ்வரன் தோன்றி சொன்னதாகவும் கர்ணபரம்பரைச் செய்தி உண்டு. அதனாலேயே வடக்குக் கோபுரம் மொட்டைக் கோபுரம் என வழங்கப்படுகிறது. முனீஸ்வரன் அம்மன் சன்னதி வழியாக பரிவாரங்களுடன் காவல் காக்கச் செல்லும் வழிதான் முனிச்சாலை ஆகும். அது தற்போது கேட்டுக்கதவு என்பது போல முனிச்சாலை ரோடு என்றாகி விட்டது.

மதுரையின் பெரிய கண்மாய்களில் ஒன்றான வண்யூர் கண்மாயின் கிழக்குக் கரையில் காவல் தெய்வமாக உள்ள பாண்டி முனிதான் மதுரையின் பெரும்பாலான பூர்வகுடிகளின் குலதெய்வம். மதுரையில் பெரும்பாலும் வழங்கிவரும் பாண்டி என்னும் பெயர் பாண்டிமுனியின் சக்திக்குச் சான்றாகும். மதுரையில் மீனாட்சி என்பதைப் போல் பாண்டியம்மாள், பாண்டீஸ்வரி என்ற பெண் பெயர்களும் பிரசித்தம். தற்போது வண்டியூர் கண்மாய்கரையையும் பாண்டி கோவிலையும் ரிங் ரோடு பிரித்தாலும் பாண்டிகோவிலின் பிரசித்திக்கு வலுசேர்ப்பதாகவே உள்ளது.

இங்கு தினமும் பலியிடப்படும் ஆடு, சேவல் ஆகியவற்றை கோவில் எல்லை மேலமடை தாண்டி கொண்டு செல்லக்கூடாது என்பது ஐதீகம். ஆதலால் அறிந்தவர், அறியாதவர் அனைவரையும் அன்போடு அழைத்து உணவிடுவதை இந்த பாண்டி முனீஸ்வரன் கோவிலில் காணமுடியும். பிற ஊர்களைப் போலன்றி அனைத்து ஜாதியினரும் வணங்குவதுதான் இம்மூன்று கோவில்களின் சிறப்பு, மதுரையின் பெருமை.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Share Now
Back to top button
error: