தமிழ் சினிமா நேயர்கள் அனைவருக்கும் வணக்கம். இன்றும் தமிழ் சினிமா மட்டுமின்றி அரசியல் உலகிலும் அசைக்க முடியாத சிங்கமான புரட்சித் தலைவர் எம்ஜிஆர் வளர்த்த சிங்கம் பற்றித்தான் இந்த வீடியோவில் தெரிந்து கொள்ள போகின்றோம்.
நாய்களை வளர்க்கும் நடிகர்களுக்கு மத்தியில் இரண்டு சிங்கங்களை ஏன் எம்ஜிஆர் வளர்த்தார். அது எப்படி சாத்தியமானது என்ற கேள்விக்கு மிருகங்களிடம் எம்ஜிஆர்க்கு இருந்த அன்பே அதற்கு காரணம். எம்ஜிஆர் சிங்கள் மட்டுமல்ல கரடி குட்டியும், நாய்களும் வளர்த்துள்ளார்.
கரடிக் குட்டி தினமும் காலையில் அவர் கையால்தான் ஃபீடரில் பால் குடிக்கும். தன் வீட்டில் வளரும் மிருகங்களை கவனிக்க தனியே ஒரு மருத்துவரையும் நியமித்திருந்தார். கரடிக்கு மூக்கில் சங்கிலி இணைக்க வசதியாக மருத்துவரின் உதவியுடன் துளையிட முயன்றபோது அது இறந்துவிட்டது. எம்.ஜி.ஆர். மிகவும் வேதனைப்பட்டார். அதன் பிறகு கரடி வளர்க்கும் எண்ணத்தை கைவிட்டார்.
எம்ஜிஆர் விலங்குகள் மீது மிகுந்த அன்பு கொண்டவர். தன்னுடன் சண்டைக் காட்சிகளில் நடிக்கும் நடிகர்களுக்கு அடிபட்டு விடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பார். அதேபோல, விலங்குகளுக்கும் ஆபத்து ஏற்படக் கூடாது என்பதில் அதிக கவனம் எடுத்துக் கொள்வார்.
முக்கியமாக சினிமா காட்சிகளில் டூப் போட்டு நடிப்பதில் எம்ஜிஆர் விருப்பமாட்டார். பெரும்பாலும், எவ்வளவு கடினமான காட்சியாக இருந்தாலும், தானே நடிப்பதை விரும்புவார்.
அப்படித்தான் 1968ல் அவரது சொந்தப் படமான அடிமைப் பெண் படத்தில் எம்ஜிஆர் சிங்கத்துடன் சண்டைபோடும் காட்சி.
இதற்கு டூப் போட்டு எடுத்துக் கொள்ளலாம் என்று படக் குழுவினர் முடிவெடுத்திருந்தனர். ஆனால், எம்ஜிஆர் அதற்கு சம்மதிக்கவில்லை. தானே நடிக்க உள்ளதாக தெரிவித்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். அதற்காகவே திட்டமிட்டு முன்னமே இரண்டு சிங்கங்களை தன் வீட்டில் வளர்த்து வந்ததாக கூறப்படுகிறது. இது உண்மையாகவும் இருக்கலாம்.
ஒன்றின் பெயர் ராஜா. பெண் சிங்கத்தின் பெயர் ராணி. சென்னை ராயப்பேட்டை லாயிட்ஸ் ரோடில் வசித்தபோதும், பின்னர் ராமாவரத் தோட்டத்தில் வசித்தபோதும் இந்த சிங்கங்களை எம்ஜிஆர் வளர்த்தார். வீட்டிலேயே கூண்டு இருக்கும்.
அதை கவனிக்க ஆட்கள் இருப்பார்கள். இவ்விரு சிங்கங்களையும் எம்.ஜி.ஆர் மிகவும் பாசமாக வளர்த்தார். சில சமயம் இச்சிங்கங்கள் எம்.ஜி.ஆரின் கையை நக்கிக் கொடுக்கும். இந்த இரு சிங்கத்தின் மீதும் அளவுகடந்த ப்ரியம் வைத்திருந்தார் எம்ஜிஆர்.
அடிமைப்பெண் படப்பிடிப்பில் நடிப்பதற்காக பாம்பேயில் இருந்து வாங்கி வந்த இந்த இரண்டு சிங்கங்களுக்கு, சத்யா ஸ்டியோவில் ஒரு பெரிய அளவில் கூண்டு அமைத்து, அதில் மாலை மற்றும் இரவு நேரங்களில் பயிற்சி எடுத்துக் கொண்டார் எம்.ஜி.ஆர்.
இதில் ராஜா என்ற சிங்கத்துடன்தான் ‘அடிமைப் பெண்’ படத்தில் கிளைமாக்ஸில் எம்.ஜி.ஆர். மோதுவார். அந்தக் காட்சியை அற்புதமாக படமாக்கினார். அது ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த பரபரப்பான சண்டையில் சிங்கத்தின் வாயை பிளப்பதுபோல் ஒரு காட்சி பதிவு வேண்டும். இதற்கு சிலர் பயத்தில் ‘‘சிங்கத்தின் வாயை தைத்து விடலாம்’’ என்று யோசனை கூறியபோது, அதற்கு எம்.ஜி.ஆர். அது ஒருபோதும் நடக்காது என்று மறுத்துவிட்டார்.
அதேபால் தைரியமாக சிங்கத்தின் வாயை பிளக்கும் காட்சியை மிக அற்புதமாக நடித்துக் காண்பித்தார் எம்ஜிஆர். ஆனால் அந்த காட்சி எடுக்கும்போது கேமரா மேன் உட்பட அத்தனை பேர் இதயமும் திக் திக் தான். மாறாக எம்ஜிஆருக்கு சக்சஸ்தான். ராணி சிங்கம் ‘அடிமைப் பெண்’ படம் எடுக்கும் முன்பே இறந்துவிட்டது.
அடிமைப் பெண்ணில் சிங்கம் தொடர்பான காட்சிகளை படமாக்கி முடித்ததும், தொடர்ச்சியாக தான் வளர்ப்பதற்கு சட்ட சிக்கல்கள் இருந்த காரணத்தால், சென்னை மிருகக் காட்சி சாலைக்கு இந்த சிங்கத்தை நன்கொடையாக வழங்கினார் எம்.ஜி.ஆர்.
அந்த சிங்கத்திற்கு தேவையான சாப்பாட்டு செலவுக்கான பணத்தை மாதாமாதம் மிருகக் காட்சி சாலைக்கு வழங்கி வந்தார். எம்ஜிஆர் வளர்த்த சிங்கத்தை பார்ப்பதற்காகவே தினமும் கூட்டம் அலைமோதும், எம்ஜிஆர் அரவனைப்பில் வாழ்ந்த அந்த சிங்கம், பின்னாளில் தனிமையில் எம்ஜிஆர் நினைவாகவே இருந்ததாக கூறப்படுகிறது. பலரும் ராஜா என்று அழைக்க திரும்பி பார்க்க, பின் யார் ராஜா என்று அழைத்தாலும் திரும்பி பார்க்காமல் இருந்துள்ளது.
எம்ஜிஆர் குரலில் சிலர் அழைத்துப் பார்த்தும் அதற்கு பலன் இல்லை. இந்நிலையில்தான் 80-களில் ஒருநாள் எம்.ஜி.ஆர் தான் வளர்த்த ராஜா சிங்கத்தை ஜூவுக்கு வந்து பார்த்துவிட்டுப் போனார். அதன் பிறகு எம்ஜிஆர் வரவே இல்லை. ஆனாலும் தனது நெருங்கிய நண்பர்களிடமும், வீட்டில் உள்ளவர்களிடமும் தினமும் ஏதாவது ஒரு வேளையாவது தனது சிங்கத்தை பேசாமல் இருக்கவே மாட்டார் எம்ஜிஆர்.
பிறகு, அந்த சிங்கம் முதுமை காரணமாக 1974ல் இறந்து விட்டது. சிங்கம் இறந்த தகவலை உடனடியாக மக்கள் திலகத்திற்கு தெரியப்படுத்தினார்கள். இந்தச் செய்தியை கேட்டவுடன் மிருகக் காட்சி சாலைக்கு மக்கள் திலகம் சென்று பார்த்தார். பிறகு உடனே அந்த சிங்கம் உயிரோடு இருக்கும் போது எப்படி இருந்ததோ அதே போலவே “பாடம்” செய்து தர வேண்டும்.
அதற்கு எவ்வளவு செலவு ஆனாலும் பரவாயில்லை என்று மக்கள் திலகம் அவர்கள் கேட்டுக் கொண்டதின்படி, அந்த சிங்கத்தை பாம்பேயில் இருந்து நல்ல நிபுணர்களை வரவழைத்து, அவர் விரும்பியபடியே மிகப் பிரமாதமாக அமைத்துக் கொடுத்தனர்.
உயிர் இல்லாத அந்த சிங்கத்தை தனது ராமாபுரம் தோட்டத்து வீட்டில் ஒரு பெரிய கண்ணாடிக்குள் அந்த சிங்கத்தை வைத்து மக்கள் திலகம் அவர்கள் மாடிக்குச் செல்லும் வழியின் கீழ்ப்பகுதியில் வைத்திருந்தார். மக்கள் திலகம் அவர்கள் வெளியே போகும் போதும், வரும் போதும் அவருடைய பார்வைக்குப்படும் படியாகவும் வைத்திருந்தார்.
பின்னர் மக்கள் திலகம் அவர்கள் மறைவுக்குப் பின்னர் அந்த சிங்கம் உட்பட தோட்டத்து வீட்டில் இருந்த எல்லா பொருட்களும் அவரது நினைவு இல்லத்தில் வைக்கப்பட்டது. எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்தும் எம்.ஜி.ஆரின் கருணை உள்ளத்துக்குச் சான்றாய், அவரது நினைவு இல்லத்தில் கண்ணாடிப் பேழைக்குள் இன்றும் கம்பீரமாக நிற்கிறான் ‘ராஜா’.
புரட்சித்தலைவரின் வேறு ஒரு தகவலுடன் உங்களை சந்திக்கும் வரை உங்களிடமிருந்து விடைபெறுவது உங்கள் சினிமா ரசிகன். நன்றி வணக்கம்.