
மதுரை, உலகத் தமிழ்ச் சங்கத்தில் 25.06.2022 அன்று வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பாக மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தலைமையில், வணிகவரி & பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி முன்னிலையில், மதுரைமண்டல அளவிலான 5 மாவட்டங்களைச் சார்ந்த உழவர் உற்பத்தியாளர் குழு விவசாயிகளுக்கு வேளாண் விளை பொருட்களை மதிப்பு கூட்டு செய்து வணிகப்படுத்துதல் தொடர்பான பயிற்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் பேசியதாவது:- தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் விவசாயிகள் நலனுக்காக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.
அந்த வகையில்விவசாயிகள்தாங்கள் உற்பத்தி செய்யும் விளைபொருட்களைதாங்கள்வணிகம் செய்கிறார்ஊக்குவிக்கும் வகையில்சிறு-குறு விவசாயிகளை ஒருங்கிணைத்து உழவர் உற்பத்தியாளர் குழு ஏற்படுத்தவும், 10 உழவர் உற்பத்தியாளர் குழுக்களை ஒருங்கிணைத்து 1000 சிறு குறு விவசாயிகள் பங்களிப்பு செய்திடும் வகையில் ஒரு உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் ஊக்கம் அளிக்கப்படுகிறது.
இதன் மூலம் விவசாயிகளை தொழில் முனைவோராக உயர்த்திட இத்திட்டம் வாய்ப்பளிக்கிறது. வேளாண் தொழிலில் ஈடுபடும் இளைஞர்கள், சுய உதவிக் குழுக்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மற்றும் வேளாண் விளை பொருட்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்ய முன்வரும் தொழில் முனைவோருக்கு திட்ட செலவில் 35 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூபாய் 10 லட்சம் மானியம் வங்கிகள் மூலம் வழங்கிட வழிவகை செய்யப்படுகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறைக்கு தனி பட்ஜெட் அறிவித்துள்ளார்கள். தமிழகத்தில் 903 உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. நடப்பாண்டில் புதிதாக 50 உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
விவசாயிகள் தங்களது விளை பொருட்களை நேரடியாக விற்பனை செய்வதைவிட அதனை மதிப்புக் கூட்டு செய்து விற்பனை செய்யும் போது கூடுதல் லாபம் பெற முடியும். அதனடிப்படையில் உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு இதுபோன்ற பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதுவரை கடலூர், தஞ்சாவூர் ஆகிய இடங்களில் இரண்டு பயிற்சிகள் நடத்தப்பட்டு மூன்றாவது பயிற்சியாக மதுரை மண்டலத்திற்கு உட்பட்ட மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களைச் சேர்ந்த உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு பயிற்சி நடத்தப்படுகிறது. விவசாயிகள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் பேசினார்.
இந்நிகழ்ச்சியில்வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்திபேசியதாவது:- தமிழ்நாடு முதலமைச்சர், விவசாயப் பெருங்குடி மக்கள் பொருளாதாரத்தில் ஏற்றம் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.
மதுரை மாவட்ட விவசாயப் பெருங்குடி மக்கள்பயன்பெறும் வகையில் உரிய நேரத்தில் பாசனத்திற்காக வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதாலும், பருவமழை போதிய அளவு பொழிந்தததின் காரணமாக விவசாயப் பயிர்களுக்கான தண்ணீர் போதுமான அளவு கிடைக்கப்பெற்று நெல் உற்பத்தியில் நல்ல மகசூல் கிடைக்கப் பெற்றுள்ளது.
அதேபோல தோட்டக்கலை பயிர்கள் சாகுபடிக்கும் முக்கியத்துவம் வழங்கி விவசாயிகள் கவனம் செலுத்த வேண்டும். ஏழை, எளியோர்களின் உணவாக இருந்து வந்த கேழ்வரகு, கம்பு, திணை, குதிரைவாலி முதலான உணவு தானியங்கள், தற்போது வசதி வாய்ப்பு படைத்தவர்களும் உண்ணும் உணவாக மாறியுள்ளது. இதனால், சிறுதானிய உணவுகளின் தரம், சத்துக்கள் மற்றும் மருத்துவ குணங்கள் பற்றிய விழிப்புணர்வு அனைத்து மக்களிடையேயும் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது என வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி பேசினார்.
இக்கூட்டத்தின் போது, வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலர் சி.சமயமூர்த்தி, வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத்துறை இயக்குநர் முனைவர்.எஸ்.நடராஜன், வேளாண்மை துறை இயக்குநர் அ.அண்ணாத்துரை, மாவட்ட ஆட்சியர் மரு.எஸ்.அனீஷ்சேகர்., தோட்டக்கலைத்துறை இயக்குநர் (சென்னை) முனைவர்.இரா.பிருந்தா தேவி, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆ.வெங்கடேசன் (சோழவந்தான்), மு.பூமிநாதன் (மதுரை தெற்கு) உட்பட வேளாண்மைத்துறை சார்ந்த அலுவலர்கள் மதுரை, தேனி, திண்டுக்கல், இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களைச் சேர்ந்த உழவர் உற்பத்தியாளர் குழு விவசாயிகள் கலந்து கொண்டனர்.