
முருகனுக்கு ஆறுபடை வீடு இருப்பது எல்லாருக்கும் தெரியும். ஆனா அவரு அண்ணன் விநாயகருக்கும் ஆறுபடை வீடிருக்கு தெரியுமா… ஆமாங்க பிள்ளையாருக்கு இருக்க ஆறுபடை வீடுகள் எந்தெந்த ஊர்ல இருக்குன்னு இப்ப தெரிஞ்சுக்கப்போறோம்
முதல்படைவீடு: திருவண்ணாமலை
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில்ல இருக்குற விநாயகர் தாங்க. இந்த விநாயகரின் பெயரு அல்லல் போம் விநாயகர். ஆலய நுழைவாயிலுக்கு பக்கத்திலேயே வடக்கு நோக்கிய சந்நதியில அருள்பாலிக்கிறாரு இந்த விநாயகரைக் குறித்து போற்றப்படும் பாடலே அல்லல் போம் வல்வினை போம். அன்னை வயிற்றில் பிறந்த தொல்லை போம். இவரை வழிபட அல்லல்கள் தீரும் என்பது நம்பிக்கை. இந்த கோவில் பிரகாரங்கள்ல பல விநாயகர் சன்னதிகள் இருந்தாலும், அல்லல் போம் விநாயகருக்கே முதல் படைவீடு விநாயகராக கருதப்படுகிறார்.
இரண்டாம் படை வீடு: விருத்தாசலம்
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் கோயில்ல இருக்குற விநாயகர் தான் இரண்டாம் படை வீடு விநாயகர். இந்த விநாயகர ஆழத்து பிள்ளையார்னு சொல்றாங்க. பெயருக்கு ஏத்தமாதிரி கோயிலின் முதல் வெளிப்பிராகாரத்தில், சுமார் பதினெட்டு அடி ஆழத்துல சன்னதி இருக்கு. இந்த விநாயகரை வணங்கினால் செல்வமும், கல்வியும் மற்றும் சீரான வாழ்வும் நம்மை வந்து சேரும்னு நம்பிக்கை இருக்கு. சிவன் ஆலயத்தில சன்னதி இருந்தாலும், இவருக்குத் தனிக் கொடிமரமும், தனியாக விழாவும் நடத்தப்படுவது கூடுதல் விசேசம்.
மூன்றாவது படைவீடு-திருக்கடவூர்
நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கடவூர் அமிர்தகடேஸ்வரர் கோவில்ல இருக்குற கள்ள வாரணப் பிள்ளையார் தான் மூன்றாம் படைவீடு விநாயகர். சிவன் சந்நதியின் நந்திக்கு வலதுபுறத்துல, இந்தப் பிள்ளையார் சந்நதி இருக்கு. இந்த கள்ள வாரணப்பிள்ளையார் தன்னோட துதிக்கையில் அமிர்தகலசம் ஏந்தியபடி காட்சியளிக்கிறாரு. மகாவிஷ்ணுகிட்ட இருந்து அமிர்தகலசம் பெற்ற தேவர்கள், தம்மை வழிபட மறந்ததால, அதை மறச்சு விளையாடினதால கள்ளவாரணப் பிள்ளையார் எனப்பெயர் வந்துச்சுன்னு புராண கதைகள்ல சொல்றாங்க. செல்வவளம், ஆயுள், திருமணவரம், குழந்தைவரம், கல்வி, போன்றவற்றை அருளும் கருணாமூர்த்தியாக, இந்த கள்ள வாரணப்பிள்ளையார் அருள்பாலிக்கிறாரு.
நான்காம்படை வீடு – மதுரை
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில்ல இருக்குற சித்தி விநாயகர் தான் நான்காம்படை வீடு விநாயகர். மீனாட்சி அம்மன் சன்னதிக்குள்ள நுழையுற முன்னாடி இவரின் தரிசனத்தைப் பெறலாம். நாம விரும்புற காரியங்கள நிறைவேற்றித்தருபவராக இந்த சித்தி விநாயகர் திகழ்கிறார். மாணிக்கவாசகர் பாண்டிய மன்னருக்காக குதிரை வாங்கப் போகும் போது இந்த சித்தி விநாயகரையே வணங்கிட்டு போனதா திருவிளையாடல் புராணங்கள் சொல்லுது. சகல காரியங்களிலும் வெற்றியளிக்கும் சித்திவிநாயகராக வணங்கினால் புகழும், பெருமையும் சேரும்னு, அது மட்டும் இல்லாம நமக்கு வந்த அவப்பெயர் நீங்கும்னு நம்பிக்கையும் இருக்கு.
ஐந்தாவது படை வீடு – பிள்ளையார்பட்டி
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பக்கத்துல இருக்குற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் தான் ஐந்தாம் படை விநாயகர். 1,600 வருசத்துக்கு முன்னாடி கட்டப்பட்ட குடவரை கோயிலாகவும் பிள்ளையார்பட்டி திகழுது. கஜமுகாசுரனை கொன்ற பாவம் போக விநாயகர், சிவனுக்கு பூஜை செய்த தலமாகவும் பிள்ளையார்பட்டி விளங்குறதா புராணங்கள்ல சொல்றாங்க. காசியில் இருக்கும் துண்டி ராஜ கணபதி, தீட்சா கணபதியாக இருந்து, ஞானத்தை வாரி வழங்குறாரு. காசிக்கு செல்ல முடியாதவர்களுக்கு அதே பலனைப் இந்த கற்பக விநாயகர் கிட்ட பெறலாம்னு சொல்றாங்க. சிவலிங்கத்தை கையில ஏந்தி சிவபூஜை செய்பவராகத் திகழும் இந்த கற்பக விநாயகர வணங்கினா தீட்சையும் ஞானமும் கிடைக்கும் என்பது முன்னோர்களோட நம்பிக்கை.
ஆறாம்படை வீடு – திருநாரையூர்
கடலூர் மாவட்டம் திருநாரையூர் சவுத்தர்யேஸ்வரரர் கோவில்ல அருள்பாலிக்கும் பொள்ளாப் பிள்ளையார் தான் ஆறாவது படைவீடு விநாயகர். சவுந்தர்யேஸ்வரர் ஆலயத்தின் இடது பக்கம் உள்ள சந்நதியில் அருள்கிறார் இந்த பொல்லாப்பிள்ளையார். அப்பரும் சம்பந்தரும் பாடிய இத்தலத்தில் இவரை வழிபட புதிய முயற்சிகளில் கை மேல் வெற்றி பலன் கிடைக்கும்னு சொல்றாங்க. நம்பியாண்டார்நம்பி மூலம், ராஜராஜசோழனுக்குத் தேவாரத் திருமுறைகள் கிடைக்கச் செய்தது இந்தப் பிள்ளையார் தான்னும் சொல்றாங்க. இவரை வணங்கிட, கல்வியும், ஞானமும் மேம்படும் என்பது ஐதீகம்.
வீடியோவுல தரிசிச்ச விநாயகரை நேர்லயும் தரிசிக்கனும்னு உங்களுக்கு ஆசை வந்துருச்சு தானே… உடனே கிளம்பிராதீங்க. நோட் பண்ணி மட்டும் வச்சுக்கங்க. இப்ப இருக்கற சூழ்நிலை மாறி கணபதிராயன் கடைக்கண் காட்டும் வரை கொஞ்சம் காத்திருங்க. மறந்துராதீங்க … எங்க போனாலும் மாஸ்க் போட்டுக்கங்க… பொது இடங்கள்ல சமூக இடைவெளிய கண்டிப்பா கடைபிடிங்க… இன்னுமொரு சிறப்பான டூரிஸ்ட் ஸ்பாட்டோட வேகமாவே உங்கள சந்திக்கிறோம்… அதுவர எல்லாருக்கும் டாடா சொல்லிக்கிறோம்.
வீடியோவாக பார்க்கலாம் வாங்க