வரலாறு

விடுதலை வீரர் அழகுமுத்துக்கோன் (1728 – 18.11.1757)

Freedom fighter king warrior Alagumuthukone (1728 - 18.11.1757)

ஜூலை-11, மன்னர் வீரஅழகுமுத்துக்கோன் (1728-18.11.1757) அவர்களின் பிறந்தநாள் என்று தமிழகஅரசால் அறிவிக்கப்பட்டு மாநில அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது.

இந்திய வரலாற்று ஏடுகளில் 1857-ல் தான் முதல் விடுதலை போர் நடந்ததாக கூறப்பட்டுள்ளது. அதற்கு 100 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவின் முதல் விடுதலை போர் தமிழகத்தில் நடந்துள்ளது. போரை நடத்திய தமிழன் கட்டாலங்குளம் மன்னர் வீரஅழகுமுத்துக்கோன்.

முதல் விடுதலை வீரர் மன்னர் வீரஅழகுமுத்துக்கோன் வரலாறு

பெயர் : வீரஅழகுமுத்துக்கோன்

பிறப்பு : கி.பி.1728

வீரமரணம் : கி.பி. 18.11.1757

பெற்றோர் : மன்னர் அழகுமுத்துக்கோன்,ராணி அழகுமுத்தம்மாள்

குலம் : ஆயர் (யாதவர்)

கோத்ரம் : கிருஷ்ணகோத்ரம்

குடும்பப்பட்டங்கள் : வானரவீரர்,வானாதிராயர்,மிலாடுடையர்,சேர்வைக்காரர்

பிறப்பிடம் : கட்டாலங்குளம் அரண்மனை,திருநெல்வேலிசீமை (தற்போது தூத்துக்குடி) தமிழ்நாடு

சிறப்பு : கட்டாலங்குளம் அரசர், முதல் விடுதலைப்போராட்ட வீரர்

வாழ்க்கை வரலாறு

வீரஅழகுமுத்துக்கோன் கட்டாலங்குளம் சீமையின் அரசராக இருந்தவர். மன்னர் வீரஅழகுமுத்துக்கோனுக்கு ஜெகவீரராமபாண்டிய எட்டப்பன் என்கிற எட்டயபுரம் மன்னர் சிறந்த நண்பராக விளங்கினார். இந்தியாவின் முதல் விடுதலை போர் 1857 என்று அறியப்படுகிறது. ஆனால், அதற்கு முன்பே இந்தியாவின் பல இடங்களில் போர் நடந்துள்ளது. அதில் முதன்மையானவர் மன்னர் வீரஅழகுமுத்துக்கோன்.

பிறப்பு

தந்தை மன்னர் அழகுமுத்துக்கோன் 1725-ம் ஆண்டு கட்டாலங்குளம் மன்னராக முடி சூட்டி கொண்டார். இவருக்கும் ராணி அழகுமுத்தம்மாளுக்கும் 1728-ம் ஆண்டு நமது விடுதலை வீரர் வீரஅழகுமுத்துக்கோன் பிறந்தார். 1729-ம் ஆண்டு தம்பி சின்னஅழகுமுத்துக்கோன் பிறந்தார்.

மன்னராக

1750-ல் தந்தை மன்னர் அழகுமுத்துக்கோன் அனுமந்தகுடி போரில் வீர மரணம் அடைந்தார். தந்தை இறந்த அதே ஆண்டு 1750-ல் அண்ணன் வீரஅழகுமுத்துக்கோன் தன்னுடைய 22-ம் வயதில் மன்னராக முடி சூட்டி கொண்டார்.

சின்ன அழகுமுத்துக்கோன்

1755-ல் அண்ணன் வீரஅழகுமுத்துக்கோன் தலைமையில் நடந்த முதல் விடுதலை போரில் தம்பி சின்னஅழகுமுத்துக்கோன் பெருமாள்கோயில் வாசலில் வைத்து சுடப்பட்டு வீரமரணம் அடைந்தார்.

ஆங்கிலேயர்களை எதிர்த்து

முதன் முதலாக ஆங்கிலேயர்களை எதிர்த்தும், பாளையக்காரர்கள் ஆங்கிலேயர்களுக்கு கப்பம் கட்டுவதை தடுக்கவும் செய்தார், மன்னர் வீரஅழகுமுத்துக்கோன். இதனால் கோபமுற்ற ஆங்கிலேய அரசு பிரிட்டிஷ் ஜெனரல் ஜான்கைலாட்(JohnCaillaud), முகம்மது யூசுப் கான்(கான் ஷா கெப்) தலைமையில் ஆங்கிலேய படைகளை அனுப்பி வைத்தது. மன்னர் வீரஅழகுமுத்துக்கோனுக்கும் ஆங்கிலேயபடைகளுக்கும் பெத்தநாயக்கனூர் கோட்டையில் போர் நடந்தது.

மன்னர் வீரஅழகுமுத்துகோனின் குதிரை சுடப்பட்டது மற்றும் அவரது வலது கால் சுடப்பட்டது. இருப்பினும் 3 மணி நேரம் போர் தொடர்ந்தது. இறுதியில் மன்னர் வீரஅழகுமுத்துக்கோனும் அவருடைய 6 தளபதிகள் மற்றும் 248 போர் வீரர்களும் சூழ்ச்சியால் கைது செய்யப்பட்டு இரும்பு சங்கிலியில் பிணைக்கப்பட்டு நடுக்காட்டூர் என்னும் இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

மன்னிப்பு கேட்க மறுப்பு

பீரங்கி முன் நிறுத்தப்பட்டு வரி செலுத்துமாறு வற்புறுத்தப்பட்டனர். மன்னிப்பு கேட்டால் உயிர் மிஞ்சும் என்று கேட்டும் மன்னர் வீரஅழகுமுத்துக்கோன் ஆங்கிலேய அரசாங்கத்திடம் மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார்.

வீரமரணம்

பிறகு 248 வீரர்களின் வலது கரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டன. பீரங்கி முன் நின்ற மன்னர் வீரஅழகுமுத்துக்கோனும் அவருடைய 6 தளபதிகள்

1. கெச்சிலணன்கோனார்

2. முத்தழகுக்கோனார்

3. வெங்கடேஸ்வரஎட்டுக்கோனார்

4. ஜெகவீரரெட்டுக்கோனார்

5. முத்திருளன்கோனார்

6. மயிலுபிள்ளைகோனார்
மார்பில் சுடப்பட்டு வீரமரணம் அடைந்தனர்.

 

சிறப்புகள்

பீரங்கி முன் நின்று சாகும் தருவாயிலும் தன்னைச் சேர்ந்தவர்களை காட்டிக்கொடுக்க மாட்டேன் என்று கூறிய நெஞ்சுரம் மிக்கவர் மன்னர் வீரஅழகுமுத்துக்கோன் என்பது குறிப்பிடத்தக்கது!

மன்னர் அழகுமுத்துக்கோன் வம்சத்தில் பலரும் போர்களத்திலேயே வீரமரணம் அடைந்த மாவீரர்கள்!

கட்டாலங்குளத்தை கடந்து செல்லும் எவரும் குதிரை, யானை, பல்லக்கில் அமர்நது செல்லக்கூடாது!

தென்னகத்தின் சிறந்த குதிரைபடையை உடையவர்கள், குதிரைகளை போருக்கு பழக்குவதில் வல்லவர்கள் மன்னர் அழகுமுத்துக்கோன் வம்சத்தினர்!

பாளையங்கள் உருவாவதற்கு முன்பே பாண்டிய மன்னர்களுக்கு கட்டுப்பட்டு நெல்லைசீமையை ஆட்சி செய்தவர்கள் மன்னர் வீரஅழகுமுத்துக்கோன் முன்னோர்கள்!

ஆங்கிலேயரால் நியமிக்கப்பட்ட பூதலபுரம்எட்டப்பனை ஏற்றுக்கொள்ளாமல் பெருநாழிகாட்டில் மன்னர் வீரஅழகுமுத்துக்கோன் அறிவித்த ஜெகவீரராமபாண்டிய எட்டப்பனின் மகன் வெங்கடேஸ்வர எட்டப்பனையே மக்கள் எட்டயபுரத்தின் பாளையகாரனாக ஏற்றுக்கொண்டனர்.

காராம் பசும்பாலில் செய்த சத்தியத்திற்கு கட்டுப்பட்டு எட்டப்பன் மீதுள்ள பகையை மறந்து நட்பாகி, நட்புக்காக உயிரையே கொடுத்த வம்சத்தினர்!

இத்தகைய சிறப்புகளை கொண்ட இந்த மாவீரரின் வீரவரலாறு பல ஆண்டுகளாக மறைக்கப்பட்டும், திரிக்கப்படும் இருந்தன. விருதுநகரை சார்ந்த ஆராய்ச்சியாளர் திரு.சுபாஷ்சேர்வை அவர்கள் பல ஆண்டுகளாய் களஆய்வு செய்து வீரவரலாறை வெளிகொண்டுவந்துள்ளார். இதற்காக தமிழ்உலகம் அவருக்கு நன்றி செலுத்த கடமைப்பட்டுள்ளது.

நாட்டின் விடுதலைக்காக போராடி வீரமரணம் அடைந்தவர்களின் நினைவை போற்றுவதே சிறப்பு!

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
3
+1
1
+1
1
+1
1
+1
1
+1
1
+1
0

Share Now

மதுரை கா.ராஜேஷ்கண்ணா

விடுபட்ட, மறைக்கப்பட்ட, மறுக்கப்பட்ட வரலாற்று தேடல்கள் நெடும் பயணம் என்றபோதும், அதை தொடர்ந்து செய்து வருகின்றேன். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கம். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: