
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட, மேலக்கால் ஊராட்சியில், மேலக்கால் கச்சிராயிருப்பு கீழ மட்டையான் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய 9 வார்டுகள் உள்ளது. இதில், ஊராட்சி மன்றத் தலைவியாக மேலக் காலை சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த முருகேஸ்வரி இருந்து வருகிறார்.
இவர், ஊராட்சி மன்றத் தலைவராக பொறுப்பேற்ற நாள் முதல் வார்டு உறுப்பினர்களும், ஊராட்சி செயலாளரும் தன்னை பணி செய்ய விடாமல் நடப்பதாகவும் தொடர்ந்து லஞ்சம் வாங்க வலியுறுத்துவதாகவும், கடந்த வருடம் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் செய்து தர்ணாவில் ஈடுபட்டார்.
அதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவரின் அறிவுறுத்தலின் பேரில், வாடிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர், வார்டு உறுப்பினர்கள், மற்றும் ஊராட்சி மன்றத் தலைவரை நேரில் வரவழைத்து பேசி சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.
அதன் பிறகும், தற்போது வரை மேலக்கால் ஊராட்சியில் எந்த ஒரு திட்டங்களையும் தன்னை செயல்படுத்தவிடாமல் வார்டு உறுப்பினர்கள் சிலர் தடுப்பதாகவும், இதனால், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாகவும் கண்ணீருடன் கூறுகிறார்.
இதுகுறித்து, பலமுறை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதனால், கடும் மன உளைச்சல் ஏற்பட்டதால், ஊராட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக கூறுகிறார்.
அதனால், தற்போது ஊராட்சி மன்ற சாவி மற்றும் பேனா ஆகியவற்றை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் ஒப்படைத்துவிட்டு வந்ததாகவும்,
அடுத்து, மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுக்கப் போவதாகவும் கூறினார்.
மேலும், இதுகுறித்து தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத்தில் புகார் கொடுக்க போவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் கூறுகையில்: அரசின் எந்த ஒரு திட்டத்திற்கும் வார்டு உறுப்பினர்கள் சிலர் லஞ்சம் கேட்டு தன்னை மிரட்டுவதாகவும், இல்லை என்றால் ஊராட்சி மன்றத்தில் எந்த ஒரு பணியும் நடக்க விடமாட்டோம் என்று மிரட்டி வருவதாகவும், தேசிய கிராமப்புற வேலை திட்டத்தில் பணியாளர்களை சேர்க்க தன்னிடம் கேட்காமலேயே சுமார் 200 பேருக்கு மேல் போலியாக பணியாட்களை தயார் செய்து, அந்த பணத்தை வார்டு உறுப்பினர்கள் சிலர் எடுத்து கொண்டதாக புகார் தெரிவிக்கின்றார்.
ஆகையால், இது குறித்து, மதுரை மாவட்ட ஆட்சியர் நேரில் விசாரித்து தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.