
இந்திய தேர்தல் ஆணையம், வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தும் நோக்கில், வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி 01.08.2022 முதல் நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் விரும்பும் பட்சத்தில் தங்களது ஆதார் எண்ணை கீழ்க்கண்ட வழிமுறைகளில் வாக்காளர் பட்டியலுடன் நேரடியாக இணைத்துக் கொள்ளலாம்.
அதற்காக www.nvsp.in என்ற இணையதளம் மூலமாகவும், Voter Helpline கைப்பேசி செயலியினை பதிவிறக்கம் செய்தும், www.voterportal.eci.gov.in என்ற இணையதளம் மூலமாகவும், நேரடியாக ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம்.
மேலும் இப்பணிக்காக அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் இதர தேர்தல் பணியாளர்கள் வாக்காளர்களின் இல்லங்களுக்கு நேரடியாகச் சென்று ஆதார் எண்ணை பெற்று இதற்கென பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட படிவம் 6டீ அல்லது கருடா கைப்பேசி செயலி மூலமாக இணைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேற்கண்ட பணிகளுக்கு அனைத்து வாக்காளர்களும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைக்கும் பணிக்கான விழிப்புணர்வு முகாம் வாக்காளர்கள் பயன்பெறும் விதமாக எதிர்வரும் 21.08.2022 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை சம்மந்தப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில்; நடைபெற உள்ளது.
பொதுமக்கள் தங்களது ஆதார் எண் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை எண் விபரங்களுடன் தொடர்புடைய வாக்குச்சாவடி மையங்களுக்குச் சென்று வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் படிவம் 6டி பூர்த்தி செய்தோ அல்லது இணைய வழியிலோ வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்து பயன்பெறுமாறு மதுரை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக்கொள்கிறார்.