
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் அருகே உள்ளது வடபழஞ்சி ஊராட்சி.
இவ்வூராட்சியில் மதுரை – போடி இரயில்வே இருப்பு பாதைசெல்கிறது. பொதுமக்களின் வசதிக்கேற்ப ரயில்பாதையை கடந்து செல்ல ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு உள்ளது.
ஆனால், நான்கு வருடங்களுக்கும் மேலாக இந்த சுரங்கப்பாதை முழுவதும் நீர் தேங்கி பொதுமக்கள் பயன்பாடின்றி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
இதனால் பொதுமக்களும் வேலைக்குச் செல்பவர்கள், பாதசாரிகளும் வாகன ஒட்டிகளும் ஆபத்தை உணராமல் தினமும் திக்திக் என்று ரயில்பாதையை கடந்து செல்லும் நிலையில் உள்ளனர்.
மேலும் தற்பொழுது சமீப காலமாக மதுரை – தேனி வரை ரயில்போக்குவரத்து பயன்பாட்டில் இருந்து வருகிறது. இதுகுறித்து வடபழஞ்சி பகுதி மக்கள் பலமுறை புகாரளித்தும், அரசு அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லாததால் விரக்தியும் வேதனையுடன் உள்ளனர்.
எனவே பொதுமக்கள், வேலைக்குச் செல்பவர்கள் வாகன ஒட்டிகளின் பாதுகாப்பைகருத்தில் கொண்டும் சுகாதாரத்தை பாதுகாத்து ரயில்வே சுரங்கப் பாதையை சீரமைத்து விரைவாக பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது.