
கடந்த முறை மேலக்கோபுரம் பற்றியும், தெரு பற்றியும் விரிவாகப் பார்த்தோம். இந்த முறை வடக்கு கோபுரத் தெரு குறித்து சுருக்கமாக காணப்போகின்றோம். மதுரையில் நாயக்கர் அரசைத் தோற்றுவித்த விசுவநாத நாயக்கரின் (1529 – 1564) மகன் முதலாம் கிருஷ்ணப்பர் 1564 முதல் 1572 வரை மதுரையை ஆண்டார். சிறந்த ஆட்சி நடத்திய இவர் மீனாட்சி கோயிலில் பல திருப்பணிகள் செய்தார். மீனாட்சி கோயில் வடக்கு கோபுரத்தை முதலாம் கிருஷ்ணப்பர் கட்டினார்.
சுந்தரேசுவரர் சன்னிதி முன்னுள்ள கம்பத்தடி மண்டபம், இதனருகில் உள்ள திருஞானசம்பந்தர் மண்டபம், இரண்டாம் பிரகாரத் திருச்சுற்று மண்டபம், அம்மன் கோயில் நடுப்பிரகார மண்டபம் ஆகியவை இம்மன்னர் கட்டியனவையே ஆகும்.
இவரது ஆட்சிக் காலத்தில்தான் அரியநாத முதலியார் ஆயிரங்கால் மண்டபத்தை 1570ல் கட்டி முடித்தார். வடக்கு கோபுரத்திற்கு மொட்டை கோபுரம் என்றொரு பெயரும் உண்டு. மற்றைய கோபுரங்களோடு ஒப்பிடுகையில் இக்கோபுரத்தில் மிகக் குறைந்த அளவில் சிற்பங்கள் இருப்பதால் இப்பெயர் பெற்றது என்பர்.
இதில் 404 சுதை வடிவங்கள் உள்ள. இக்கோபுரம் நீண்ட காலமாக முற்றுப்பெறாமல் இருந்ததால் மொட்டைக் கோபுரம் என்ற பெயர் வந்தது என்பாரும் உண்டு. முதலாம் கிருஷ்ணப்பர் கட்டிய இக்கோபுரம் நீண்ட காலம் உச்சிப்பகுதியின்றி மொட்டையாகக் காட்சியளித்தது. இம்மொட்டைக் கோபுரத்திற்கு சிகரம் வைத்து கோபுர அமைப்பை வயிநாகரம் குடும்பத்தினர் 1878ல் கட்டி முடித்தனர்.
49 மீட்டர் உயரமுள்ள இக்கோபுரம்தான் வெளிக் கோபுரங்களில் குறைந்த உயரமுடையதாகும். இது ஒனபது நிலை உடைய கோபுரம். வடக்கு கோபுரத்திற்கு எதிரில் உள்ள தெரு வடக்கு கோபுரத் தெரு என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. அடுத்த முறை கிழக்கு கோபுரம் – தெற்கு கோபுரம் குறித்து காணபோம்.