முன்பெல்லாம் புதியதாக காரை வாங்குபவர்கள் அதன் விலைகளையும், அது வழங்கும் மைலேஜையும் தான் மிக முக்கியமாக ஆராய்ந்து பார்ப்பர். ஆனால் தற்போது இந்திய வாடிக்கையாளர்களும் காரில் சவுகரியமான மற்றும் பாதுகாப்பான பயணத்திற்கு தேவையான அனைத்து அம்சங்களும் உள்ளனவா என எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.
அதுமட்டுமின்றி மத்திய அரசாங்கமும் சில பாதுகாப்பு அம்சங்களை கட்டாயமாக்கி வருவதால், மலிவான ஆரம்ப நிலை ஹேட்ச்பேக் காரில் கூட குறிப்பிடத்தக்க அளவில் பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்படுகின்றன. ஆனால் நாம் இந்த செய்தியில் ரூ.10 லட்சம் அல்லது அதற்குள்ளாக கிடைக்கும் பாதுகாப்பான கார்களை பற்றி பார்க்கவுள்ளோம். வாருங்கள் செய்திக்குள் போவோம்.
டாப் 5 பாதுகாப்பில் முதலாவது இடத்தை பிடித்துள்ளது கார் டாடா பஞ்ச்.
உலகளாவிய என்சிஏபி மோதல் சோதனையில் மிகவும் பாதுகாப்பான இந்திய காராக டாடா மோட்டார்ஸின் சமீபத்திய அறிமுகமான பஞ்ச் எஸ்யூவி மாடல் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த மோதல் சோதனைகளின் முடிவில் டாடா பஞ்ச் கார் பெற்ற மொத்த மதிப்பெண்கள் 16.45 புள்ளிகளாகும். தற்போதைக்கு 1.2 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் ரெவோட்ரான் பெட்ரோல் என்ற ஒற்றை என்ஜின் தேர்வில் மட்டுமே இந்த டாடா கார் விற்பனை செய்யப்படுகிறது.
இதனுடன் 5-ஸ்பீடு மேனுவல் & 5-ஸ்பீடு ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் (ஏஎம்டி) தேர்வுகள் வழங்கப்படுகின்றன. கூடுதலாக ஏகப்பட்ட வசதிகளுடன் 4 ட்ரிம் நிலைகளில் சந்தைப்படுத்தப்பட்டு வரும் டாடா பஞ்ச்சின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.5.49 லட்சத்தில் இருந்து ஆரம்பிக்கின்றன.
இரண்டாவது இடத்தை பிடித்துள்ள கார் மஹிந்திரா எக்ஸ்யூவி300
டாடா பஞ்சிற்கு அடுத்து மஹிந்திரா எக்ஸ்யூவி300 16.42 புள்ளி மதிப்பெண்களுடன் இந்த வரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ளது. மஹிந்திராவின் இந்த பாதுகாப்பான காம்பெக்ட் எஸ்யூவி கார் 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு மற்றும் 1.5 லிட்டர் டீசல் என மொத்தம் இரு விதமான என்ஜின் தேர்வுகளில் விற்பனை செய்யப்படுகிறது.
இதில் டீசல் என்ஜின் தேர்வுடன் ஆட்டோமேட்டிக் & மேனுவல் என இரு விதமான டிரான்ஸ்மிஷன் தேர்வுகளும், பெட்ரோல் என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் தேர்வு மட்டும் வழங்கப்படுகிறது. 4 ட்ரிம் நிலைகள் மற்றும் 5 விதமான நிறத்தேர்வுகளில் வழங்கப்படும் எக்ஸ்யூவி300-இல் பின் இருக்கை வரிசை நன்கு அகலமானதாக வழங்கப்படுகிறது. இந்த எஸ்யூவி காரின் ஆரம்ப விலை ரூ.7.95 லட்சமாகும்.
மூன்றாவது இடத்தை பிடித்துள்ள கார் டாடா அல்ட்ராஸ்
டாடாவிக் அல்ட்ராஸ் மாடல் பிரீமியம் ஹேட்ச்பேக் காராகும். இதனால் இந்தியாவிலேயே மலிவான & பாதுகாப்பான ஹேட்ச்பேக் காராக அல்ட்ராஸ் விளங்குகிறது. 18 வயது மேற்பட்டோர்க்கான பாதுகாப்பில் முழு ஐந்து நட்சத்திரங்களையும், குழந்தைகள் பாதுகாப்பில் 4 நட்சத்திரங்களையும் அல்ட்ராஸ் பெற்றுள்ளது.
உலகளாவிய என்சிஏபி சோதனைகள் முடிவில் டாடா அல்ட்ராஸ் பெற்ற மதிப்பெண்கள் 16.13 புள்ளிகள் ஆகும். மொத்தம் 3 விதமான என்ஜின் தேர்வுகளில் இந்த பிரீமியம் ஹேட்ச்பேக் கார் விற்பனை செய்யப்படுகிறது. இந்த காரில் உள்ள ஒரே குறை என்னவென்றால், 5-ஸ்பீடு மேனுவல் என ஒரே ஒரு டிரான்ஸ்மிஷன் தேர்வு மட்டும் வழங்கப்படுவதாகும். அல்ட்ராஸின் விலைகள் ரூ.5.90 லட்சத்தில் இருந்து தற்சமயம் துவங்குகின்றன.
நான்காவது இடத்தை பிடித்துள்ள கார் டாடா நெக்ஸான்
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கார் முதல்முறையாக உலகளாவிய-என்சிஏபி அமைப்பில் இருந்து முழு 5 நட்சத்திரங்களை பெற்றது என்கிற பெருமைக்கு உள்ளானது டாடா நெக்ஸான் ஆகும். இதனாலேயே இதன் விற்பனை தற்போதுவரையில் சிறப்பானதாக இருந்து வருகிறது. அதிலிலும் குறிப்பாக, கடந்த சில மாதங்களாக நெக்ஸானின் விற்பனை புதிய உச்சங்களை தொட்டு வருகிறது.
இந்த சப்-காம்பெக்ட் எஸ்யூவி காரில் 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் என்ஜின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இவற்றுடன் 6-ஸ்பீடு மேனுவல்/ 6-ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.7.30 லட்சத்தில் இருந்து ஆரம்பிக்கின்றன.
ஐந்தாவது இடத்தை பிடித்துள்ள கார் ஃபோக்ஸ்வேகன் போலோ
இந்தியாவில் ஃபோக்ஸ்வேகனின் ஹேட்ச்பேக் காரான போலோ முதன்முதலாக கடந்த 2010இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும் இப்போதும் தரமான கார்களின் வரிசையில் போட்டி மாடல்கள் பலவற்றிற்கு சிம்ம சொப்பனமாக போலோ விளங்கி வருகிறது. பயணிகள் பாதுகாப்பில் 4 நட்சத்திரங்களை பெற்றிருந்த இந்த ஃபோக்ஸ்வேகன் கார் உலகளாவிய என்சிஏபி சோதனைகளில் 12.54 புள்ளிகளை பெற்றுள்ளது.
போலோவில் தற்சமயம் 1.0 லிட்டர் மற்றும் 1.0 லிட்டர் டிஎஸ்ஐ என இரு விதமான பெட்ரோல் என்ஜின் தேர்வுகள் இந்தியாவில் வழங்கப்படுகின்றன. இந்த ஃபோக்ஸ்வேகன் ஹேட்ச்பேக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.6.16 லட்சத்தில் இருந்தே ஆரம்பிக்கின்றன.
மொத்தத்தில் பாதுகாப்பு அம்சத்தில் டாடா பிராண்ட் கார்கள்தான் தற்போது முன்னணியில் இருக்கிறது. இந்த நிலவரம் வரும் காலங்களில் மாறலாம். இந்தியாவின் பாதுகாப்பான கார்கள் பற்றிய விவரங்கள் அடங்கிய இந்த வீடியோ உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நம்புகின்றேன். இதுபோல் வேறு ஒரு மோட்டார் தகவலில் சந்திக்கும்வரை உங்களிடமிருந்து விடைபெறுவது டிரைவ் தமிழன். நன்றி வணக்கம்.