தெருக்கள்மதுரை

மேலக் கோபுரத் தெரு – 02

Madurai Street 02

மதுரையில் உள்ள ஒவ்வொரு தெருவுக்கும் ஒவ்வொரு வரலாறு உள்ளது. வேறு எந்த ஊருக்கும் இந்தப் பெருமை கிடையாது. அப்படிப்பட்ட மதுரையில் உள்ள தெருக்களையும், அதுகுறித்த வரலாற்றுக் குறிப்புக்கள் மற்றும் தெருக்களின் பெயர்களுக்கான காரணங்கள் குறித்து அலசி பார்க்கப் போகின்றோம். இங்குள்ள சில தெருக்களின் பெயர்கள் மதுரைக்கும் தமிழுக்கும் உள்ள நெருங்கியத் தொடர்பைக் காட்டுகின்றன. இத்தெருப் பெயர்கள் சங்ககால மதுரையை நமக்குப் படம் பிடித்துக் காட்டுகின்றன. அத்தோடு சங்க கால இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள மக்களின் வாழ்க்கை முறையை நம் கண் முன் கொண்டு வருகின்றன.

நவதானியக் காரத் தெரு, பச்சரிசிக்காரத்தெரு, வெங்கலக்கடைத்தெரு போன்ற பெயர்கள் ஒரே இடத்தில் குறிப்பிட்ட பொருட்கள் விற்பனை நடந்ததைக் காட்டுகிறது. இன்றும் சில குறிப்பிட்ட தெருக்களில் ஒரே கடைகள் அமைந்திருக்கும் சிறப்பை மதுரையில் காண முடிகிறது. கிழக்குச் சித்திரை வீதியிலும், தெற்குச் சித்திரை வீதியிலும் பெரும்பாலும் துணிக்கடைகள் அமைந்துள்ளன. தெற்கு ஆவணி மூல வீதியில் பொன்நகை முதலியவற்றின் வாணிகம் ஒரு தொகுப்பாக அமைந்திருப்பதைக் காணலாம்.

எல்லாவற்றையும் விட இங்குள்ள பல தெருக்களின் பெயர்கள் கோயில்களின் திருப்பெயரால் அழைக்கப்படுவது மதுரையின் மற்றுறொரு தனிச்சிறப்பாகும். ஆகவே நாம் முதன் முதலாக மீனாட்சி அம்மன் கோயில் கோபுரங்கள் பற்றியும் அதன் தெருக்கள் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்… வாங்க… தெருவுக்குள் நடக்கலாம்…

மீனாட்சி அம்மன் மேலக் கோபுரம் தெருவினை தெரிந்து கொள்வதற்கு முன்னதாக கோபுரம் என்றால் என்ன என்பதை தெரிந்து கொண்டு தெருவுக்குள் நுழையலாம்… கோயில் வாசல்களில் அமைந்துள்ள மிக உயரமான கட்டிட அமைப்பு கோபுரம் எனப்படுகிறது. இக் கோபுரங்களே கோயிலுக்குப் பேரழகு தருவனவாய் அமைந்துள்ளன.

மதுரை மீனாட்சி கோயிலில் 12 கோபுரங்கள் உள்ளன. இவற்றுள் கோயிலின் வெளி மதிலில் அமைந்துள்ள நான்கு கோபுரங்கள் வெளிக் கோபுரங்கள் என்றழைக்கப்படுகின்றன. ஒவ்வொரு வெளிக் கோபுரங்கள் 60 அடி உயரமுள்ள ஒரே கல்லினால் செய்யப்பட்ட வாயில் தூணோடு தொடங்கி படிப்பபடியாக பல அடுக்குகளைக் கொண்டு அமைக்கப்பட்டு உள்ளது நான்கு வாசல்களும் உயர்ந்த உறுதியான கதவுகளை உடையன.

கோயில் கோபுரங்களின் அடிப்பகுதி கருங்கல்லினால் ஆனது. இவற்றின் உபபீடம் அதிட்டானம், பாதம் ஆகிய பகுதிகளில் காணப்படும் சிற்ப வேலைப்பாடுகள் காண்போரை வியக்க வைக்கின்றன. கருங்கல் பகுதிக்கு மேலுள்ள சிகரப்பகுதி பல நிலைகளைக் கொண்டுள்ளது. இப்பகுதி செங்கல், சாந்து ஆகியவற்றால் உருவானவை. மேல்நிலைகளில் சுதைச் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இச்சுதைச் சிற்பங்கள் புராணங்களில் வரும் தெய்வங்களின் உருவங்களையும் புராண நிகழ்ச்சிகளையும் கொண்டுள்ளன.

கோபுரங்கள் அனைத்தும் தோற்றத்தில் ஒன்றுபோல் தோன்றினாலும், அவற்றிடையே வேலைபாட்டில் மிகுந்த வேறுபாடுகள் உண்டு. மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள 12 கோபுரங்களில் நான்கு வெளிக் கோபுரங்களும் உயரமானவை. இவை நான்கு திசைகளிலும் அமைந்துள்ளன. இவை அமைந்துள்ள திசைப் பெயரையே இக்கோபுரங்கள் பெற்று கிழக்கு கோபுரம், மேற்கு கோபுரம், வடக்கு கோபுரம், தெற்கு கோபுரம் என அழைக்கப்படுகிறது. முதலில் நாம் மேலக் கோபுரம் குறித்து தெரிந்து கொள்வோம்.

மீனாட்சி அம்மன் கோயிலின் மேற்கு வாசலின் மேலே அமைக்கப்பெற்றுள்ள கோபுரம் மேலக் கோபுரம் ஆகும். இக்கோபுரத்தை சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் (கி.பி.1315 – 1347 ) மன்னன் கட்டினான். 50 மீட்டர் உயரமுள்ள கோபுரமாகும். இந்த கோபுரம் கி.பி.1323 ஆம் ஆண்டில் கட்டிமுடிக்கப்பட்டது. இம் மேற்கு கோபுரத்தில் 1124 சுதைச் சிற்பங்கள் உள்ளன. புராணக் கதைகளைக் காட்டும் பல்வேறு உருவங்கள் இக்கோபுரத்தில் கண்டு ஆனந்தம் கொள்ளலாம். மேற்கு கோபுரத்திற்கு எதிரில் அமைந்துள்ள தெரு மேலக் கோபுரத் தெரு என்றழைக்கப்படுகிறது.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now
Source
Image

டி. தேவராஜ்

மதுரை எழுத்தாளர்கள் பட்டியலில் முக்கியமாக அறிய வேண்டிய நபர்களில் டி.தேவராஜ் அவர்களும் ஒருவர். மிகச் சிறந்த நூல்களை படைத்துள்ளார். மதுரை குறித்து பல நூல்களை வெளியிட்டிருந்தாலும், மதுரை நகர தெருப் பெயர்கள் எனும் தலைப்பில் வெளியிட்டுள்ள இவரது நூல் மதுரைக்கு பெருமை சேர்க்க கூடியது. அந்த நூலின் தொகுப்பினைத்தான் நாம் இங்கு பார்க்கின்றோம். இவர் பசுமலை உயர்நிலைப் பள்ளியின் முன்னாள் ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.
Back to top button
error: