சினிமாவீடியோ

முதல் தமிழ் படம் எடுத்த ஆர்நடராஜ முதலியார்

amil Cinema Legend 🎞 தமிழ் சினிமா 360

தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம். இன்றைக்கு நாம் பார்க்கப்போகும் நபர் தமிழ் சினிமாவின் பிதாமகன் ஆவார். தென்னிந்தியாவில் முதன் முதலாக சினிமாவை எடுத்து, திரையிட்டு காண்பித்தவர். இன்றைக்கு தமிழ் சினிமா எத்தனையோ மாற்றங்கள் பெற்றாலும், அதற்கான முதல் விதையை விதைத்தவர் ஆர்.நடராஜ முதலியார். இவரது வாழ்க்கை வரலாறு பற்றி தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

1885 ல் வேலூரில் பிறந்த இவர், சென்னையில் தனது உறவினரான தர்மலிங்க முதலியார் என்பவருடன் இணைந்து “வாட்சன் & கம்பெனி” என்ற பெயரில் ஒரு இறக்குமதி நிறுவனத்தை துவக்கி வெளிநாடுகளில் இருந்து சைக்கிள்களை இறக்குமதி செய்து ரூ.15 முதல் ரூ.25 வரையுள்ள சைக்கிள்களை விற்பனை செய்து வந்தார்.

பின்னர் 1911 ல் “ரோமர் டான் & கம்பெனி” என்ற கம்பெனியை விலைக்கு வாங்கி அமெரிக்காவிலிருந்து கார்களை இறக்குமதி செய்து ரூ.800 முதல் ரூ.1000 வரையுள்ள கார்களை விற்பனை செய்துவந்தார்.

மஹாராஷ்ட்ராவில் தாதாசாகேப் பால்கே தயாரித்த இந்தியாவின் முதல் திரைப்படமான 1913 ல் வெளியான ராஜ ஹரிச்சந்திரா -வை சென்னை கெயிட்டி தியேட்டரில் 1914-ல் பார்த்தபின், இவருக்கு திரைப்படம் எடுக்கும் ஆசை வந்தது.

அன்றைய பிரிட்டிஷ் இந்தியாவின் கவர்னர் ஜெனரல் மற்றும் வைஸ்ராய் – லார்ட் கர்சன் பிரபுவைப்பற்றி ஆவணப்படம் எடுத்த ஸ்டீவர்ட் ஸ்மித்- ன் நட்பு இவருக்கு கிடைத்தது. அவரிடம் உதவியாளராக பணிபுரிந்து திரைப்பட நுணுக்கங்களை கற்றுக்கொண்டார். இதன் காரணமாக தனது கம்பெனியை சென்னை சிம்சன் கம்பெனிக்கு விற்றுவிட்டு, திரைப்படத் தயாரிப்பில் இறங்கினார். 1117

1917ல் சென்னை புரசைவாக்கம் மில்லர்ஸ் ரோட்டில் “India Film Company” அதாவது இந்திய திரைப்பட நிறுவனம்” என்ற ஸ்டூடியோவை உருவாக்கி தென் இந்தியாவில் தனது முதல் திரைப்படமாக கீசக வதம் என்ற பேசதா தமிழ் திரைப்படத்தை எடுத்து எவாலாஜா ரோட்டுக்கு அருகில் இருந்த எல்பின்ஸ்டோன் தியேட்டரில் 1918ஆம் ஆண்டு ஜனவரி முதல் திங்களில் வெளியிட்டார்.

ரூ.35,000 முதலீட்டில் உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் ரூ.50,000 வசூலை ஈட்டியது. இதற்காக லண்டனில் இருந்து ஃபிலிமை இறக்குமதி செய்து, பெங்களூரில் இவரே ஃபிலிம் லேபரட்டரி ஒன்றை உருவாக்கி படத்தை பிரிண்ட் எடுத்தார்.

இத்திரைப்படத்தில் இவரும், ராஜ முதலியார் மற்றும் ஜீவரத்தினம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரமேற்று நடித்தனர். இயக்கம், தயாரிப்பு, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு உள்பட அனைத்தும் இவரே. கதை மட்டும் சி.ரங்கவடிவேலு என்பவருடையது. இது மௌனப்பட மென்பதால் தற்போது ஆங்கிலப்படங்களுக்கு காட்டப்படும் சப் – டைட்டில் போல், அன்று தனி புரஜெக்டர் மூலமாக திரையில் தெரிவதற்கு வசதியாக தமிழ், மற்றும் ஆங்கிலத்தில் சப் டைட்டில் காட்டப்பட்டது.

இதை எழுதியவர்கள் சென்னையின் பிரபல மருத்துவர் குருசாமி முதலியார் மற்றும் பேராசிரியர் திருவேங்கட முதலியார். ஹிந்தி சப் – டைட்டில் எழுதியவர் மஹாத்மா காந்தியின் மகன் தேவதாஸ் காந்தி, இவர் மூதறிஞர் ராஜாஜியின் மருமகனாவார். இதன் பின்னர் ஆர்.நடராஜ முதலியார் திரௌபதி வஸ்திராபரணம், மயில் ராவணா, லவ குசா, காலிங்க மர்தனம், ருக்மணி சத்யபாமா மற்றும் மார்க்கண்டேயர் போன்ற திரைப்படங்களை எடுத்தார். தென்னிந்தி சினிமா உலகில் கொடிக்கட்டி பறந்த நிலையில், 1923ம் ஆண்டு இவரது ஸ்டூடியோ எதிர்பாராதவிதமாக தீயில் அழிந்ததில் பெரும் நஷ்டமடைந்தார்.

பின்னர் தயாரிப்பாளர்களின் ஆதரவு கிடைக்காததால் திரைப் படத்துறையிலிருந்து வெளியேறினார். 1970ம் ஆண்டில் அன்றைய தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி தலைமையில் சென்னை ராஜாஜி ஹாலில் நடைபெற்ற பாராட்டு விழாவில், இவரின் சாதனைகளைப் பாராட்டி இவருக்கு வெள்ளிப் பதக்கம் அணிவிக்கப்பட்டது.

சினிமா துறையில் கொடிகட்டிப்பறந்த நிலையில், எதிர்பாராமல் அவரது மில்லர்ஸ் சாலை ஸ்டூடியோவில் ஏற்பட்ட தீவிபத்து, அதன் பின் அவரது ஒரே மகன் அகால மரணம் என சினிமாவையே வெறுத்தார். தமிழ் சினிமாவின் முதல் தயாரிப்பாளர், இயக்குநர், விநியோகஸ்தரான முதலியார் ஸ்டூடியோவை விற்றுவிட்டு அந்தத் தொழிலிலிருந்து வெளியேறினார்.

அதன்பிறகு அவர் சினிமாவுக்குத் திரும்பவே இல்லை. 1971ம் ஆண்டு மே மாதம் சிறுநீரக பாதிப்பு நோயினால் சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு காலமானார். தென்னிந்தியாவில் முதன் முதலாக பேசாத தமிழ் திரைபடத்தை இயக்கி, தயாரித்து வெளியிட்ட ஆர்.நடராஜ முதலியாரை சினிமா உலகம் உள்ள வரை பேசிக் கொண்டிருக்கும்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

Hello Madurai

மதுரை குறித்த பயனுள்ள செய்திகள், கட்டுரைகள், வீடியோக்கள் ஆகியவை அடங்கிய வலைதளம். கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக Hello Madurai App பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செய்திகள் மற்றும் விளம்பரங்கள் பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் - 9566531237.
Back to top button
error: