மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிகள் | மதுரை மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ்
District Level Chess Tournaments | Certificate for Madurai students

தமிழகத்தில் நடைபெற உள்ள 44-வது சர்வதேச ஒலிம்பியாட் செஸ் போட்டி தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் மதுரை மாவட்டத்தில் மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச ஒலிம்பியாட் செஸ் போட்டி வருகின்ற 28-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில், 187 நாடுகளைச் சேர்ந்த 2,500 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விளையாட்டுப் போட்டி தொடர்பான முன்னேற்பாடு பணிகளை நேரடியாக ஆய்வு மேற்கொண்டு அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்கள்.
இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 44-வது சர்வதேச ஒலிம்பியாட் செஸ் போட்டி தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள ராஜன் பள்ளியில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடத்தப்பட்டது.
போட்டியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டப்பட்டது. இப்போட்டிக்கான முன்னேற்பாடு பணிகள் அனைத்தும் மதுரை மாவட்ட விளையாட்டு அலுவலகம், மதுரை மாவட்ட சதுரங்க கழகம் மற்றும் திருப்பரங்குன்றம் வட்ட அளவிலான சதுரங்க கழகம் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்பட்டன.