மழை நீரில் நிரம்பிய மதுரை டவுண்ஹால் ரோடு தெப்பக்குளம்
மாநகராட்சி சார்பில் 280 இடங்கள், 412 ஆழ்துளை கிணறுகளில் மழை நீர் சேகரிப்பு

மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள நீர்நிலைகளை அபிவிருத்தி செய்யும் பொருட்டு நீர்நிலைகளான குளங்கள், ஊரணிகள் தூர்வாரப்பட்டு மழைநீர் தேக்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் 40 ஆண்டுகளுக்கு பிறகு மாரியம்மன் தெப்பக்குளத்தில் வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு நிரப்பப்பட்டது.
அதே போன்று தல்லாகுளம் திருமுக்குளத்தில் மழைநீர் சேகரிப்பு செய்வதற்காக மழைநீர் வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு சுற்றுப் பகுதிகளில் சாலைகளில் தேங்கும் மழைநீர் தடையின்றி சென்று திருமுக்குளத்தில் சேகரிக்கவும், டவுண்ஹால் ரோடு தெப்பக்குளத்தில் மழைநீரினை சேகரிக்கும் வகையில் ரயில்வே நிலையம், கட்டபொம்மன் சிலை வடக்கு புறம், தங்கரீகல் தியேட்டர் முன்புறம் உள்ளிட்ட பகுதிகளில் தேங்கும் மழைநீர் சாலைகளில் தேங்காமல் குழாய்கள் மூலம் டவுண்ஹால் ரோடு தெப்பக்குளத்திலும் செல்வதற்கு வழிவகை செய்யப்பட்டது. இதனால் நேற்று பெய்த கனமழையினால் காரணமாக சாலைகளில் மழைநீர் தேங்காமல் டவுண்ஹால் தெப்பக்குளத்திலும், தல்லாகுளம் திருமுக்குளத்திலும் மழைநீர் சேகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 33 ஊரணிகள் உள்ளன. இவற்றில் முதற்கட்டமாக கோசாக்குளம் ஊரணி, சிலையனேரி ஊரணி, கோட்டங்குளம் ஊரணி, கம்பன் ஊரணி, உத்தங்குடி ஊரணி, முத்துப்பட்டி கல்தார் ஊரணி, சூராவளிமேடு ஊரணி, மானகிரி ஊரணி, திருப்பாலை வண்ணான் ஊரணி, அனுப்பானடி சொக்காயி ஊரணி, மாட்டுத்தாவணி சாத்தையாறு ஊரணி, மிளகரணை ஊரணி, உலகனேரி குட்டம் ஊரணி, மஸ்தான்பட்டி ஊரணி ஆகிய ஊரணிகள் தூhர்வாரப்பட்டு நேற்று பெய்த மழைநீர் சேகரிக்கப் பட்டுள்ளது.
அதே போன்று மதுரை மாநகராட்சி பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கும் இடங்களாக 280 இடங்கள் கண்டறியப்பட்டு அனைத்து இடங்களிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைக்கப்பட்டும், உபயோகமற்ற நிலையில் இருந்த 412 ஆழ்துளை கிணறுகள் கண்டறியப்பட்டு அனைத்திலும் மழைநீர் சேகரிப்பு உட்கட்டமைப்பு அமைக்கப்பட்டும் மழைநீர் சேகரிக்கப்பட்டு வருகிறது. மேற்கண்ட நடவடிக்கையினால் மதுரை மாநகராட்சி பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து ஆழ்துளை கிணறுகளில் தங்குதடையின்றி தண்ணீர் கிடைப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.