மதுரைவரலாறு

மறைந்துபோன மாட்டுத்தாவணி – மனதில் வாழும் மதுரை 04

Living in the mind Madurai 04

மதுரையின் பிரமாண்ட கண்மாய்களில் ஒன்றான வண்டியூர் கண்மாயின் வடமேற்கு பகுதியில் ஒவ்வொரு வாரமும் கூடும் மாட்டுச் சந்தை தென் மாவட்டங்களில் மிகவும் பிரசித்தம். பெரும்பாலும் உழவு மாடுகள், வண்டி மாடுகள், மற்றும் குறைந்த அளவில் கறவை மாடுகள், கன்றுகள் விற்பனைக்கு வரும் அந்த சந்தைக்கு உழவு மாடுகள் வாங்க பார்த்திபனூரில் இருந்து வரும் எனது சித்தப்பாவுடன் சில நாட்களில் நானும் சென்றது உண்டு.

காளை மாடுகள், கன்றுந்தாய் (பசுவும், கன்றும்) என தனித்தனி நுழைவுக் கட்டணம் செலுத்தியே சந்தையில் விற்பனை செய்யமுடியும். இந்த நுழைவுக் கட்டணம் டேவணி தொகை என்று ரசீதில் குறிப்பிடப்பட்டு இருக்கும். இந்த மாட்டு டேவணிச் சந்தை என்பதே மருவி மாட்டுத்தாவணி என வழக்கத்திற்கு வந்தது.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனைக்கு வரும். மாடுகள் நீர் அருந்த பெரிய தண்ணீர் தொட்டிகள் இருந்தது. கயிறு விற்கவும், வைக்கோல், பருத்திக் கொட்டை, பிண்ணாக்கு விற்கவும், உணவகமாகவும் தற்போது விறகு மண்டி உள்ள இடத்திற்கு அருகில் தற்காலிக கடைகள் இருக்கும். தரகர்கள் விற்பனையில் முக்கிய பங்காற்றுவார்கள்.

மாடு கட்டி போரடித்தால் மாளாது செந்நெல் என்று யானைகட்டி போரடித்த அழகான தென்மதுரை என புகழ்பெற்ற விவசாய பூமி மதுரை என்பதற்குரிய ஆதாரங்களில் ஒன்றுதான் மாட்டு வணிச் சந்தை என்னும் மாட்டுத்தாவணி.  இன்று அதன் பெயர் மாறி எம்.ஜி.ஆர்.  பேருந்து நிறுத்தமாக 2019ல் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. ஆயினும் மக்கள் மனதில் மாட்டுத்தாவணி பெயர் மாறாமல் உள்ளது.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
1

Share Now

சுப. செல்வம்

சுப.செல்வம் என்ற நான், மதுரை மீது எனக்கிருக்கும் பிரியத்தை மனதில் வாழும் மதுரை என்ற தலைப்பில் எழுத்துக்கள் வாயிலாக உங்களை வந்தடைவதில் மகிழ்ச்சி கொள்கிறேன். தொடர்ந்து எழுத உங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள். அது என்னை இன்னும் ஊக்கப்படுத்தும் என்பது நிச்சயம்.
Back to top button
error: