மருத்துவக் கல்வி பயில தேர்வாகியுள்ள பானாமூப்பன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாணவிக்கு மதுரை கலெக்டர் நேரில் வாழ்த்து
Greetings from the Madurai Collector

அரசுப் பள்ளியில் பயின்று, உள் இடஒதுக்கீட்டில் மருத்துவ கல்வி பயில தேர்வாகியுள்ள உசிலம்பட்டி வட்டம் பானாமூப்பன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாணவி செல்வி.தங்கப்பேச்சி-யை மாவட்ட ஆட்சியர் மரு.எஸ்.அனீஷ் சேகர், அன்னாரது வீட்டில் நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்.
உசிலம்பட்டி அருகே உள்ள பானாமூப்பன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சன்னாசி-மயில்தாய் ஆகியோரது மகள் செல்வி.தங்கப்பேச்சி. இவர் விக்கிரமங்கலம் அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2020-ஆம் ஆண்டில் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றார்.
தொடர்ந்து, நீட் தேர்வில் வெற்றி பெற்று உள் இடஒதுக்கீடு கலந்தாய்வில் தனியார் மருத்துவக் கல்லூரியில் படிக்க இடம் கிடைத்துள்ளது. குடும்ப சூழ்நிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மருத்துவ கல்வியில் சேர இயலாத மாணவி, நடப்பாண்டில் மீண்டும் நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்றார். இதனையடுத்து, அரசு உள் இடஒதுக்கீட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மருத்துவக் கல்லூரியில் பயில இடம் கிடைத்துள்ளது.
மாவட்ட ஆட்சியர் இன்றைய தினம் பானாமூப்பன்பட்டி கிராமத்தில் உள்ள மாணவி வீட்டிற்கு நேரடியாக சென்று செல்வி.தங்கப்பேச்சி மற்றும் அவரது பெற்றோர் ஆகியோரை நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார். மேலும், ஸ்டெத்தஸ்கோப், மருத்துவர்கள் அணியும் அங்கி (Coat) ஆகியவற்றை மாணவிக்கு வழங்கி சிறந்த மருத்துவராக உயர்ந்து சமுதாயத்திற்கு பல சேவைகள் புரிய வேண்டும் என வாழ்த்தினார்.
மேலும், மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில்:- மிகவும் பின்தங்கிய கிராமத்தில், எளிய குடும்பத்தில் பிறந்த மாணவி செல்வி.தங்கப்பேச்சி சாதித்துள்ள செயல் சாதாரண விசயம் அல்ல. அவரைப் போன்ற எண்ணற்ற ஏழை-எளிய மாணவ, மாணவியர்களை மருத்துவ கல்வி பயில உத்வேகம் அளிக்கும் உன்னதமான செயல்.
தமிழ்நாடு முதலமைச்சர் மாணவி செல்வி.தங்கப்பேச்சியின் மருத்துவக் கல்வி சேர்க்கை குறித்து கேட்டறிந்து, உரிய நடவடிக்கை மேற்கொண்டு உதவிட அறிவுறுத்தியுள்ளார்கள். மருத்துவக் கல்வி பயில்வது தொடர்பான எந்த விதமான உதவிக்கும் மாவட்ட நிர்வாகத்தை எப்போது வேண்டுமானாலும் அனுகலாம் என மாவட்ட ஆட்சியர் மரு.எஸ்.அனீஷ் சேகர் மாணவியிடம் தெரிவித்தார்.
இந்த நிகழ்வின் போது, உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் ம.சங்கரலிங்கம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இரா.சுவாமிநாதன் உட்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தார்கள்.