மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கு மடிக் கணி | சிவகங்கை கலெக்டர் வழங்கினார்
Laptop for medical college students | Presented by Sivagangai Collector

தமிழக அரசின் உத்தரவின்படி, மருத்துவப் படிப்பிற்கான அரசு பள்ளியில் பயின்று 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டின் மூலம் சிவகங்கை அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரியில் பயின்று வரும் மாணவியர்களுக்கு சிறிய மடிக்கணினியை சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் ப.மதுசூதன் ரெட்டி, வழங்கி தெரிவித்ததாவது,
தமிழக அரசின் சிறப்பு வாய்ந்த சட்டமான மருத்துவப் படிப்பிற்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டினை பெற்ற சிவகங்கை மாவட்ட அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் பயின்று வரும் எஸ்.காஞ்சனா (திருப்பூர் மாவட்டம்) ஆர்.சுவீதா (விழுப்புரம் மாவட்டம்) டி.மாதீஸ்வரி (பார்த்திபனூர், சிவகங்கை மாவட்டம்), எஸ்.முனிரெத்தினம் (தர்மபுரி மாவட்டம்) ஜெ.சுவாதி (புதுக்கோட்டை மாவட்டம்) எஸ்.பிரியா (சேலம் மாவட்டம்) ஆகிய 6 மாணவியர்களுக்கு, தமிழக அரசின் உத்தரவின்படி, வழங்கப்பட்டுள்ளது.
அரசு பள்ளியில் சிறப்பாக பயின்று, மருத்துவப் படிப்பிற்கென அரசால் ஒதுக்கப்பட்ட 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டினை பெற்று, தற்சமயம் மருத்துவக் கல்லூரியில் பயிலுவதற்கான வாய்ப்பினை பெற்றுள்ளீர்கள்.
தங்களது குடும்பச்சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, தங்களது படிப்பில் முழுக்கவனம் செலுத்தி, உயிர் காக்கும் சேவையான மருத்துவச் சேவையை திறம்பட செய்வதற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், சிவகங்கை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி முதல்வர் சி.ரேவதி, துணை முதல்வர் என்.ஷர்மிளா திலகவதி, மருத்துவத்துறைத் தலைவர்கள் ஜி.பாஸ்கரன், ஜெ.ரவிச்சங்கர், மருத்துவக்கல்விப் பிரிவு கண்காணிப்பாளர் ஜெ.தேன்மொழி; உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் மாணவியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.