மன்னர் திருமலைநாயக்கருக்கு விரைவில் வெண்கலச்சிலை; பிறந்தநாள் விழாவில் அமைச்சர் தகவல்
Madurai News

மதுரை மாவட்டம் மாமன்னர் திருமலைநாயக்கர் 438-வது பிறந்த நாள் விழா நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன் தலைமையில் கூட்டுறவுத்துறைஅமைச்சர் செல்லூர் கே.ராஜூ மற்றும் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ ஆகியோர் (28.01.2021) மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
இந்நிகழ்ச்சியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் தெரிவிக்கையில்: மன்னர் திருமலை நாயக்கர் பிறந்த நாள் விழாவினை அரசு விழாவாக கொண்டாடிட கோரிக்கை வைத்தனர். அக்கோரிக்கையினை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஏற்று மன்னர் திருமலைநாயக்கர் பிறந்தநாள் விழா, அரசு விழாவாக கொண்டாடப்படும் என 2016-ம் ஆண்டு ஆணையிட்டார்.
அதனை தொடர்ந்து 2016-ம் ஆண்டு முதல் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் மூலம் விழா நடத்தப்பட்டு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. தென் இந்தியாவில் உள்ள பண்டைய அரண்மனைகளில் மிகவும் எழில் வாய்ந்த அரண்மணையான மன்னர் திருமலைநாயக்கர் மஹால் வளாகத்தில் அமைந்துள்ள அன்னாரது சிலையினை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் -தான் நிறுவினார்.
கூட்டுறவுத்துறை அமைச்சர் இச்சிலையினை வெண்கலச் சிலையாக மாற்ற முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்தார். உடனடியாக இக்கோரிக்கையினை ஏற்று விரைவில் மன்னர் திருமலைநாயக்கர் முழு உருவவெண்கலச் சிலையை நிறுவ தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்கள் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மதுரைமாநகராட்சிஆணையாளர் எஸ்.விசாகன், தெற்கு சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.சரவணன், செய்திமக்கள் தொடர்பு அலுவலர் சே.ரா.நவீன்பாண்டியன் ,உதவிமக்கள் தொடர்பு அலுவலர்(செய்தி) வா.பெ.வினோத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.