
மதுரை மாவட்டம், விரகனூர் ஊராட்சி ஒன்றிய கட்டிட அனுமதி பெற்று 2005ம் ஆண்டுகளில் கட்டப்பட்ட 70 வீடுகளில் சுமார் 500 நபர்கள் வசித்து வருகின்றனர். ஐராவதநல்லூர் மாநகராட்சியாகவும், விரகனூர் பஞ்சாயத்திற்கு உட்பட்டு உள்ளதால், இதுவரை அடிப்படை வசதி எதுவும் இப்பகுதியில் இல்லை.
விரகனூர் ஊராட்சி ஒன்றியத்தில் வீட்டு வரி, மின்சார வரி முறையாக செலுத்தி வருகிறோம். மின்வாரிய அலுவலகத்தின் மூலமாகவும் அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு மற்றும் சாலை வசதி தெரு விளக்குகள் அமைக்கப் பட்டுள்ளது.
விரகனூரில் உள்ள மயானம் ஆற்றை ஒட்டி அமைந்திருந்த நிலையில், தற்போது இடம் மாற்றம் செய்யப்பட்டு குடியிருப்பு பகுதியின் அருகிலேயே உள்ளதால், அங்கிருந்து வரும் புகையானது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை நோய்தொற்று ஏற்படும் நிலையும், காற்று மாசும் ஏற்பட்டுள்ளது.
கடந்த 20 வருடங்களாக இப்பகுதியில் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் இணைப்பு வசதி எதுவும் இல்லை. எனவே, அப்பகுதி குடியிருப்போர்கள் வீட்டுக் கழிவுநீரை மாதம் மாதம் பணம் செலுத்தி, கழிவு நீரேற்றம் வாகனம் மூலம் கழிவு நீரை வெளியேற்றி வருகின்றனர்.
வீடுகளில் அமைக்கப்பட்டுள்ள போர்வெல் மூலம் வரும் தண்ணீரில் கழிவுநீர் கலந்து வருவதால், இந்த நீரையும் அவர்களால், பயன்படுத்த முடியாத சூழ்நிலையில் உள்ளனர். இதனால், மக்களின் அன்றாட அடிப்படைத் தேவையான குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
பாதாள சாக்கடை வசதி, மற்றும் குடிநீர் இணைப்பு குழாய் அமைத்து தர வேண்டும் என்று ஊராட்சி மன்ற தலைவரிடம் பலமுறை கோரிக்கை மனு அளித்தும் , நேரில் சந்தித்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லையாம்.
இந்நிலையில், விரகனூர் ஊராட்சி ஒன்றியத்தில் கழிவு நீர் கால்வாய் மற்றும் குடிநீர் இணைப்புக் குழாய் அமைப்பதற்கான போதிய நிதி இல்லாததால், இத்திட்டத்தினை செயல்படுத்த முடியாது என்று ஊராட்சி ஒன்றிய தலைவர் தெரிவித்துள்ளதாக அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். அடிப்படை வசதிகளுக்காக விரகனூர் ஊராட்சி மன்றம் உள்ளடக்கிய மதுரை திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினரிடமும் கோரிக்கை மனு அளித்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
எனவே, எங்களது கழிவுநீரை வெளியேற்றக்கூடிய வசதியான பாதாளச் சாக்கடை திட்டத்தினையும், தற்சமயம் செயல்பட்டு வரும் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வசதியினையும் ஏற்படுத்தித் தரும்படி மனுவை பெற்றுக் கொண்ட மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அதற்குரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்தார்.