
மதுரை மாவட்டம், லேடி டோக் பெண்கள் கல்லூரியில் செஸ் ஒலிம்பியாட் தொடரபான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை (20.07.2022) மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.எஸ்.அனீஸ் சேகர், தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
தமிழகத்தில் முதன்முறையாக சர்வதேச அளவிலான 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வருகின்ற 28-தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 10-ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது.
இப்போட்டியில் 187 நாடுகளைச் சார்ந்த 2,000-க்கும் மேற்பட்ட சர்வதேச சதுரங்க விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். மிகச் சிறப்பு வாய்ந்த சர்வதேச அளவிலான இந்த போட்டியை தமிழகத்தில் நடத்தப்படுவது நம் அனைவருக்கும் பெருமைக்குரிய விசயமாகும்.
தற்போது, சென்னை மாமல்லபுரத்தில் நடைபெறும் ஒலிம்பியாட் செஸ் போட்டியினை உலகமே தெரிந்து கொள்ள வேண்டும் என்ற வகையில் முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது.
மதுரையில் மாவட்ட நிர்வாகத்துடன் பள்ளி, கல்லூரி மற்றும் தனியார் அமைப்புகள் இணைந்து செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. லேடி டோக் கல்லூரியில் இளைய தலைமுறையினரை கவரும் வகையில் செல்பி பூத், முகவர்ணம், வினாடி- வினா மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான மாணவிகள் கலந்து கொண்டனர்.
மேலும், ஒலிம்பியாட் ஜோதி வருகின்ற 25.07.2022-அன்று கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து நமது மதுரை மாவட்டத்திற்கு வருகை தர உள்ளது. இதனை சிறப்பான முறையில் வரவேற்கும் விதமாக கலைநிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான முன்னேற்பாடுகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிகழ்ச்சியில், மதுரை மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் ஜீத் சிங் காலோன், லேடி டோக் பெண்கள் கல்லூரி முதல்வர்/செயலர் மரு.கிறிஸ்டியானா சிங், மதுரை கல்லூரி கல்வி இணை இயக்குநர் டாக்டர்.பி.பொன்முத்துராமலிங்கம், பிராந்திய முதுநிலை மேலாளர் (தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்) ஜெ.பியூலா ஜேன் சுசீலா, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் (தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்) டாக்டர்.கே.ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.