மதுரை மேயர் வ.இந்திராணி பொன்வசந்த் தேசியக்கொடியினை ஏற்றி வைத்து சிறப்புரை
Madurai Mayor V. Indrani Ponvasant hoisted the national flag and delivered a speech

மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாண்புமிகு மேயர் வ.இந்திராணி பொன்வசந்த் (15.08.2022) தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
இவ்விழாவில் மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளும், விழிப்புணர்வு குழு நடனங்களும் நடைபெற்றது. தொடu;ந்து, கலைநிகழ்ச்சி மற்றும் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களைமேயர், ஆணையாளர் ஆகியோர் வழங்கினார்கள்.
மேயர் உரை: “மூவண்ணக் கொடியை போற்றுவோம்” அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள். 75-வது சுதந்திர தின அமுதப் பெருவிழா நிகழ்வு நமக்கு கிட்டிய மிகப் பெரிய வாய்ப்பாகும். பவளவிழா சுதந்திர திருநாளை கொண்டாடும் தலைமுறையில் நாம் இருப்பதை எண்ணி உவகை கொள்ளலாம். அடுத்து வரும் 100 சுதந்திர தின விழாவை நாம் கட்டாயம் சிறப்பிப்போம்.
இந்தியாவின் வளம் அளப்பரியது வடக்கே வெள்ளிப் பனிமழை முதல் தெற்கே வான்புகழ் வள்ளுவன் கோலொச்சும் குமரி முனை வரை இதன் வளத்தையும், செல்வத்தையும் நாம் சொல்லிக்கொண்டே செல்லலாம். இந்த இடைப்பட்ட நிலப்பரப்பில், பல மொழி, பண்பாடு, கலாச்சாரம் பேணிக்காக்கும் பல்வேறு இனக் குழுக்களால் ஆனது நம் நாடு. நம்மில் பல்வேறு மொழி, இனம், பண்பாடு, கலாச்சாரம், உணவு, உடை இருந்தாலும் உணர்வில் நாம் அனைவரும் இந்தியர்களாகவும், பல்வேறுபட்ட கலாச்சாரங்களை பேணிக் காக்கும் மனிதர்களாக வாழ்கின்றோம்.
வேற்றுமையில் ஒற்றுமை என்ற ஒற்றைக் கோட்பாட்டில் மதச்சார்பற்ற ஜனநாயக மரபுகளைக் கட்டிக் காக்கும் மிக சிறந்த நாடாகும் சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளில் மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சியைப் பெற்று உலக நாடுகளில் வளர்ந்து வரும் நாடுகளுக்கெல்லாம் எடுத்துக்காட்டாகவும் முன் உதாரணமாகவும் திகழ்கின்றோம். இந்த வளர்ச்சிக்கு மிக முக்கியமாக நான் கருதுவது இறையாண்மை மிக்க ஒன்றிய அரசும், இறையாண்மை மிக்க மாநில அரசுகள் என்ற கூட்டாச்சி கருத்தியலை முன்னெடுக்கும் நமது அரசியல் சாசன சட்டம் தான்.
இந்தியாவின் பன்முகத் தன்மையையும், ஒருமைப்பாட்டையும், நாம் கடைபிடிக்கும் கூட்டாச்சி தத்துவம் இருக்கும் வரை எவராலும் நம்மை சிதைத்து விட முடியாது. இந்நேரத்தில் மத்தியில் கூட்டாச்சி, மாநிலத்தில் சுயாட்சி என்று முழங்கிய தத்துவ பேராசான் மூப்பில்லா தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்றுத் தந்த முத்தமிழ் வித்தகர் ஐயா கலைஞர் அவர்களை நாம் நினைவில் போற்றுவோம்.
இந்த நாள் இனிய நாள் 75-வது சுதந்திர தின பவளவிழா நாளில் அண்ணா மாளிகையில் மதுரை மேயராக மூவண்ணக் கொடியை ஏற்றி வைத்ததை என் வாழ்நாள் மகிழ்ச்சியாகப் பார்க்கின்றேன். இந்த அரிய வாய்ப்பை பெற்றுத் தந்த தமிழகத்தின் மாண்புமிகு நிதி அமைச்சர் அண்ணன் அவர்களை நான் வணங்குகின்றேன். பல்லாயிரக்கணக்கானவர்களின் தியாகத்தால் பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம்.
தியாகிகளின் நினைவைப் போற்றுவோம். இன்று பல சாதனைகள் படைத்து பாராட்டுச் சான்றிதழும், பரிசுகளும் பெற்ற மாணவ-மாணவிகள் அனைவருக்கும் என் பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.. அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் என்று தெரிவித்தார்.
இவ்விழாவில் ஆணையாளர் சிம்ரன்ஜீத் சிங், தெற்கு சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன், துணை மேயர் டி.நாகராஜன், துணை ஆணையாளர் முஜிபூர் ரகுமான், மண்டலத் தலைவர்கள் சரவணபுவனேஸ்வரி,பாண்டிச்செல்வி, முகேஷ் சர்மா, சுவிதா, வாசுகி, கல்விக்குழுத் தலைவர் ரவிச்சந்திரன், நகரப்பொறியாளர் லெட்சுமணன், நகர்நல அலுவலர் மரு.வினோத்குமார், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உதவி நகர்நல அலுவலர் மரு.தினேஷ்குமார், உதவி ஆணையாளர்கள் சேகர், அமிர்தலிங்கம்,மனோகரன், சுரேஷ்குமார், திரு.சையத் முஸ்தபா கமால், உதவி ஆணையாளர் (கணக்கு) விசாலாட்சி, கல்வி அலுவலர் நாகேந்திரன், உதவிப்பொறியாளர்கள், சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மாணவ, மாணவிகள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.