மதுரை மீனாட்சி அம்மன் கோவில் | புதிய துணை கமிஷனர் பதவியேற்பு
Madurai Meenakshi Amman Temple | Inauguration of the new Deputy Commissioner

தமிழகத்தில் உள்ள கோவில்களில் பணியாற்றும் நிர்வாக அதிகாரிகள் பலர் கடந்த சில நாட்களுக்கு முன்பு இடம் மாற்றம் செய்யப்பட்டனர். அதில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இணை கமிஷனர் செல்லத்துரை மதுரை மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனராக நியமிக்கப்பட்டார்.
தென்காசி மாவட்டம் பண்மொழி திருமலைக்குமார சுவாமி கோவிலில் உதவி கமிஷனர் அருணாசலம் பதவி உயர்வு பெற்று துணை கமிஷனராக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு நியமிக்கப்பட்டார்.
மீனாட்சி அம்மன் கோவிலுக்கு இதுவரை இணை கமிஷனர் அந்தஸ்தில் அதிகாரிகள் நியமிக்கப்பட்ட நிலையில் திடீரென்று துணை கமிஷனர் அந்தஸ்தில் அதிகாரி நியமிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
அது தொடர்பாக இந்து அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கண்டனம் தெரிவித்தனர். அதை தொடர்ந்து மீண்டும் மீனாட்சி கோவிலுக்கு இணை கமிஷனர் அந்தஸ்தில் அதிகாரி நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகின.
இந்த நிலையில் பழைய உத்தரவுப்படி பல்வேறு கோவிலுக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் பதவி ஏற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
அதன்படி தென்காசி மாவட்டம் பண்மொழி திருமலைக்குமார சுவாமி கோவிலில் அதிகாரி அருணாசலம் பதவி உயர்வுடன் துணை கமிஷனராக நேற்று காலை மீனாட்சி அம்மன்கோவிலில் பதவி ஏற்று கொண்டார்.
அவரிடம் முன்னாள் இணை கமிஷனர் செல்லத்துரை பொறுப்புகளை ஒப்படைத்தார்.
புதிதாக பதவி ஏற்பட்ட அருணாசலம் கடந்த 2012-ம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறையில் உதவி கமிஷனராக நியமிக்கப்பட்டார்.
அதை தொடர்ந்து கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, சங்கரன்கோவில் ஆகிய கோவில்களில் உதவி கமிஷனராக பணியாற்றினார். புதிய துணை கமிஷனருக்கு கோவில் பணியாளர்கள், ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.