
மதுரை மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மதுரை மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை இணைந்து நடத்திய மாபெரும் உணவு திருவிழா மற்றும் விழிப்புணர்வு பேரணியை (23.07.2022) வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்ததாவது:- மருத்துவர்கள் தங்களை நாடி வரும் நோயாளிகளுக்கு எந்த உணவு வகைகளை சாப்பிடலாம் என்றும், எந்த உணவு வகைகளை சாப்பிடக் கூடாது என்று உணவு குறித்து விளக்குவதற்கு காரணம் தற்போது இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை விரும்பி சாப்பிட்டு வருகின்றனர்.
கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு விவசாயிகள் இயற்கை உரங்களை பயன்படுத்தி உணவு, தானியங்களை விளைவித்தனர். நெல் விளைச்சலில் மலை, காடுகளில் உள்ள இழை, தழைகளை பயன்படுத்தியும், கடலைப் புண்ணாக்கு மற்றும் வேப்பம் புண்ணாக்கு ஆகியவற்றை பயன்படுத்தி விவசாயிகள் நெல்லினை விளைவித்தனர்.
தற்போது, இயற்கையிலிருந்து மாறி விவசாயத்தில் அதிக மகசூலைப் பெற வேண்டும் என்பதற்காக விதையினை மண்ணில் விதைக்கும் காலம் முதல் அறுவடை காலம் வரை இரசாயன உரங்களைப் பயன்படுத்தி விவசாயிகள் விவசாய தொழிலை மேற்கொள்கின்றனர். அந்த வகையில், இரசாயன உரங்களைப் பயன்படுத்தி விளைவிக்கப்படும் உணவு தானியங்களை நாம் உண்பதின் மூலம் புதிது, புதிதான நோய்களுக்கு ஆளாகின்றோம்.
முற்காலத்தில் இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்ட உணவு வகைகளை உண்டதால் அவர்கள் 75 முதல் 80 வயது வரை உயிர் வாழ்ந்தனர். மேலும், தற்போது வரும் புதிது, புதிதான நோய்களுக்கும் அவர்கள் ஆளாகவில்லை. நோய்கள் வந்தாலும் அவற்றை தங்கள் கிராமங்களில் உள்ள மருத்துவக் குணங்கள் நிறைந்த இழை, தழைகளை பயன்படுத்தி தாமாகவே குணப்படுத்தி கொண்டனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் தரிசு நிலங்களில் கம்பு, கேழ்வரகு மற்றும் சோளம் ஆகியவற்றை விதைத்து அறுவடை செய்வதற்காக புதிய திட்டத்தை செயல்படுத்தி வருகிறார்கள். இந்த உணவு வகைகள் அனைத்தும் முற்காலத்தில் ஏழைகளின் உணவாக இருந்தது. தற்போது, இந்த உணவு வகைகள் அனைத்தும் வசதிபடைத்தவர்களும் உண்ணும் உணவாக மாறிவிட்டது.
எனவே, விவசாயத்தின் பெருமையை உணர்ந்து இளைய தலைமுறையினர் விவசாயத் தொழிலை செய்வதற்கு முன்வர வேண்டும். தோட்டக்கலைத்துறை மற்றும் வேளாண்மைத்துறைகளில் இயற்கை உரங்களை பயன்படுத்துதல் வேண்டும். இயற்கையாக விளைவிக்கப்பட்ட உணவு வகைகளை உண்பதால் மட்டுமே நமது உடலை நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும் என்று வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்.
வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, அன்னதான கூடத்தை சிறப்பாக பராமரித்த அழகர்கோவில் மற்றும் பழமுதிர்சோலை முருகன் கோவில் ஆகியவற்றிற்கும், உணவு கூடத்தை சிறப்பாக பராமரித்த மதுரை மத்திய சிறைச்சாலைக்கும், மதுரை மருத்துவக் கல்லூரிக்கும் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மரு.எஸ்.செந்தில் குமார், இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ்கனி, சட்டமன்ற உறுப்பினர்கள் கோ.தளபதி (மதுரை வடக்கு), மு.பூமிநாதன் (மதுரை தெற்கு), உணவுப் பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் வி.ஜெயராம பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.