
தமிழக அரசின் முன்னோடித் திட்டமான “பசுமைத் தமிழ்நாடு இயக்கத்தின்” ஒரு பகுதியாக மதுரையில் “மாமதுரை போற்றுதும்” என்னும் தொலைநோக்கு பார்வையுடன், தமிழகத்தில் பசுமைப் பரப்பை (Green Cover) அதிகரிக்கவும் பல்லுயிர் வளம் (Bio Diversity) பெருக்கவும் 75-வது சுதந்திர தின விழாவைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையிலும் மதுரை மாவட்டம் முழுவதும் 10 இலட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக ஆரம்பிக்கப்பட உள்ளது.
இத்திட்டத்தின் மூலம் வேம்பு, இலுப்பை போன்ற பாரம்பரிய மரங்களும் மஞ்சநத்தி, புங்கை, பூவரசு போன்ற மருத்துவ குணங்கள் மிகுந்த மரங்களும் மா, கொய்யா, நாவல் போன்ற பழமரங்களும் நடப்படும். இந்த மாபெரும் முன்னெடுப்பில் பங்கெடுக்க அரசு பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், பசுமை அமைப்புகள், குடியிருப்போர் நலச்சங்கங்கள், அரசு மற்றும் தனியார் கல்லூரிகள், பள்ளிகள், மாணவ, மாணவியர்கள் பெருந்திரளாகப் பங்கெடுக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக கேட்டு கொள்ளப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, மதுரை அனுப்பானடியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அசோக்குமார் (02.08.2022) 8 எண்ணிக்கை கொண்ட பலாக்கன்று, வேப்பங்கன்று மற்றும் புளியங்கன்றுகளை மதுரை மாவட்ட ஆட்சியர் மரு.எஸ்.அனீஷ் சேகரிடம் வழங்கினார்.