
மதுரை மாவட்டத்தில் இளம் மாணவர்களிடம் வாசிப்பு பழக்கத்தை தூண்டும் விதமாக பல்வேறு நிகழ்வுகளை தொடர்ச்சியாக நிகழ்த்தி வரும், மதுரை புக் கில்டின் முதலாம் ஆண்டு விழா கடந்த 30.07.2022 அன்று விஸ்வநாதபுரம் ரோட்டரி ஹாலில் (பாரதி ஸ்டோரில்) நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக மதுரை மாவட்ட ஆட்சியர் மரு.அனீஷ் சேகர் கலந்து கொண்டு, வாசிப்பு பழக்கம் குறித்து சிறப்புரையாற்றினார்.
500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணிவகள் இவ்விழாவில் கலந்து கொண்டு, இங்கு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டனர். இதில் வெள்ளி பெற்ற 150 மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி ஊக்குவித்தார்.
மாவட்ட ஆட்சியர் மரு.அனீஷ் சேகர் சிறப்புரை
இவ்விழாவில் சிறப்புரையாற்றிய மாவட்ட ஆட்சியர் மரு.அனீஷ் சேகர், மாணவர்கள் தங்கள் தனிப்பட்ட, தொழில் மற்றும் சமூக வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டும் என்றால், பள்ளி புத்தகங்களைத் தவிர்த்து அனைத்து புத்தகங்களையிம் படிக்க வேண்டும் என்று மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
அதேபோல் நல்ல தரமான புத்தகங்களைப் படிப்பது தனிநபர்களின், குறிப்பாக இளம் மாணவர்களின் ஆளுமையை வடிவமைக்க ஒரு புத்துணர்ச்சி மற்றும் மதிப்புமிக்க ஆதாரமாகும், என்றார். உண்மையில் நல்ல வாசகர்களே இறுதியில் சமூகத்தில் பல்வேறு துறைகளில் சிறந்த தலைவர்களாக மாறுகிறார்கள். நேர்மறை ஆற்றலையும், நேர்மறையான பண்பை வளர்ப்பதற்கு வலுவூட்டலையும் தரும் புத்தகங்களை வாசகர்கள் எடுப்பது மிகவும் முக்கியம் என்றார்.
மேலும், ஒரு நபர் நேர்மறைத் திறனைத் தூண்டும் புத்தகத்தைப் படிக்கும்போதெல்லாம், வாசிப்பின் செல்வாக்குடன் அவர்களின் நடத்தை மற்றும் மனநிலையும் மாறுகிறது என்பதை அவர் தானாகவே உணர முடியும் எனவும், ஒரு வளமான சமுதாயத்தை உருவாக்குவதற்கு புத்தக வாசிப்புதான் மிகவும் உதவும் எனவும், மதுரை புக் கில்டு அமைப்பு பல்வேறு தரப்பு மக்களைச் சென்றடையக்கூடிய மாபெரும் இயக்கமாக இது மதுரையில் உருவாக வேண்டும் என்று தனது வாழ்த்தினார்.
கூடுதலாக மதுரை புக் கில்டு, இளம் மாணவர்களுக்குத் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில், அவர்களின் கற்பனை திறன், எழுத்துக் கலை மற்றும் கதை புனையும் கலை ஆகியவற்றுக்கு வாய்ப்பளித்து வருவதைப் பாராட்டிய அவர், அவர்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்த கில்ட் ஒரு நல்ல நிரந்தர தளத்தை உருவாக்க வேண்டும், இது காலத்தின் தேவையாகும். புத்தகம் படிக்கும் நல்ல சூழலை மேம்படுத்துவதில் பங்களித்த புத்தகக் கழக உறுப்பினர்கள் மற்றும் விழாவை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு போட்டியில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.
புக் கில்டின் நிறுவனர் நிக்கோலஸ் பிரான்சிஸ் சிறப்புரை
இவ்விழாவுக்குத் தலைமை வகித்துப் பேசிய மதுரை புக் கில்டின் நிறுவனரும், வழிகாட்டியுமான நிக்கோலஸ் பிரான்சிஸ், கடந்த ஆண்டு கொரோனா தொற்றுநோய் காலங்களில், குழந்தைகளுக்கு மன சலிப்பை எதிர்த்துப் போராடும் வகையில், மதுரையில் புத்தகம் வாசிப்பதற்கும் எழுதுவதற்கும் இடமளிக்கும் ஒரு சமூக முயற்சியாக மதுரை கில்டு அமைப்பு உருவாக்கப்பட்டது. அது இன்ைறக்கு வளர்ந்து நிற்பது தனக்கு மகிழ்ச்சி அளிக்கின்றது.
மேலும், பொது இடங்களில் சமூக வாசிப்பு, இளம் மாணவர்களுக்கான புத்தகம் எழுதுவது குறித்த பட்டறைகள், குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையே கதை சொல்லும் அமர்வுகள் மற்றும் புத்தகங்களை வெளியிடுவதற்கான தொழில்முறை வழிகாட்டுதல் போன்ற பல செயல்பாடுகளை மதுரை புக் கில்ட் வழங்கும் என்றார்.
மேலும், முதலாம் ஆண்டு விழாவின் ஒரு பகுதியாக மதுரையில் குஹான் மெட்ரிகுலேஷன் பள்ளி, விசாகன் சிபிஎஸ்இ பள்ளி மற்றும் தெப்பக்குளம் அய்ய நாடார் ஜெயலட்சுமி அம்மாள் ஆங்கில வழிப் பள்ளி (6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்கள்) ஆகிய மூன்று பள்ளிகளில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு, கதை சொல்லுதல், சொற்பொழிவு, புத்தக விமர்சனம் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன.
மேலும், அவர் இதுகுறித்து கூறுகையில், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மரு.அனீஷ் சேகர் பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டியது மிகுந்த மகிழ்ச்சி, ஊக்கத்தை அளிப்பதாக உள்ளது என்றும், அதற்கு தங்களது அமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியருக்கு நன்றியை தெரிவித்தார்.
இவ்விழாவிற்கு வருகை புரிந்த அனைவரையும் கார்மெலிதா வரவேற்றார். மோசஸ்பியர்ஸ் மதுரை புக் கில்டு அமைப்பின் ஒராண்டு நிகழ்வுகள் குறித்து விரிவுரையாற்றினார். வாணி செங்குட்டுவன் மகத்துவ மதுரை என்ற கருத்து பற்றிய வரலாற்று நுண்ணறிவுகளை பகிர்ந்து கொண்டார். சரளா கண்ணன் புத்தக வாசிப்பின் முக்கியத்துவம் குறித்து கவிதை வாசித்தார். தரணி கேசவன் மற்றும் ப்ரீத்தி ஆகியோர் கதை சொல்லி பார்வையாளர்களை மகிழ்வித்தனர்.
மதுரையின் மூத்த பத்திரிக்கையாளர் எஸ்.அண்ணாமலை, மதுரை புக் கில்டு அமைப்பு குறித்தும், வாசிப்பு பழக்கத்தை இளம் மாணவர்களிடம் கொண்டு சேர்ப்பதினால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் வாழ்த்துரை வழங்கினார். விழா இறுதியில் அகிபா சுபஹானி நன்றியுரை வழங்கினார்.