
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (19.05.2022) நெடுஞ்சாலைத்துறை சார்பாக, மாண்புமிகு பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி முன்னிலையில், சாலை பாதுகாப்பு மற்றும் சாலை விபத்து தடுப்பு விழிப்புணர்வு தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தொடர்ந்து, மாண்புமிகு பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள்துறை அமைச்சர் வ.வேலு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-
தமிழ்நாடு அரசு சாலை விபத்துகளை தவிர்த்திடும் நோக்கில் நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்துத்துறை மற்றும் காவல்துறை ஆகிய துறைகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எதிர்பாராமல் நடக்கும் ஒரு சாலை விபத்தினால் எதிர்பாராத மருத்துவ செலவு, உயிரழப்பு.
மற்றும் ஒரு குடும்பத்தின் வாழ்வாதாரமே பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்படுகின்றது. இதனை கருத்திற்கொண்டு விபத்துகளை தவிர்த்திடும் வகையில் சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்திடவும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடவும் இக்கூட்டம் நடத்தப்படுகின்றது.
தமிழகத்தில் 2 சதவிகிதம் தேசிய நெடுஞ்சாலைத்துறையின் கீழ் 3 சதவிகிதம் சாலைகள் மாநில நெடுஞ்சாலைத்துறையின் கீழ் உள்ளன. அவற்றில் ஏறத்தாழ 30 சதவிகிதம் விபத்துகள் தேசிய நெடுஞ்சாலையிலும், 33 சதவிகிதம் விபத்துகள் மாநில நெடுஞ்சாலையிலும் ஏற்பட்டுள்ளன. 2021-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, இருசக்கர வாகன விபத்தில் 6,223 நபர்களும்.
கார் ஜீப் விபத்துகளில் 2,467 நபர்களும், லாரி போன்ற சரக்கு வாகன விபத்துகளில் 2,144 நபர்களும், அரசுப் பேருந்து விபத்துகளில் 647 நபர்களும், தனியார் பேருந்து விபத்துகளில் 302 நபர்களும், ஆட்டோ விபத்துகளில் 323 நபர்களும், வேன் போன்ற சுற்றுலா வாகன விபத்துகளில் 1,140 நபர்களும்.
மற்றும் பிற வாகன விபத்துகளில் 1,666 நபர்களும் என மொத்தம் 14,912 நபர்கள் சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளார்கள். குறிப்பாக, மதுரை மாவட்டத்தில் மட்டும் 2021-ஆம் ஆண்டில் 2,282 விபத்துகள் ஏற்பட்டு 707 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரழப்புகளை தவிர்த்திடும் நோக்கில் 108 ஆம்புலன்ஸ் திட்டத்தை தொடங்கி வைத்தார்கள். அதேபோல, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ”நம்மை காக்கும் 48 – இன்னுயிர் காப்போம்”திட்டத்தை செயல்படுத்தியுள்ளார்கள்.
இத்திட்டத்தின்கீழ், தமிழகத்தில் இதுவரை மொத்தம் 58,191 நபர்கள் விபத்துகளால் பாதிக்கப்பட்டு ரூ.51 கோடி மதிப்பீட்டில் மருத்துவ சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளனர். குறிப்பிட்ட ஒரு சாலையில் 500 மீட்டர் இடைவெளியில் 3 ஆண்டுகளுக்குள் 5 சாலை விபத்துகளோ அல்லது விபத்தின் காரணமாக 10 உயிரழப்புகளோ ஏற்பட்டால் அந்த இடத்தை கரும்புள்ளியாக (Block Spot) கருதப்படும்.
தமிழகத்தில் மட்டும் மொத்தம் 1,300-க்கும் மேற்பட்டும், மதுரை மாவட்டத்தில் மட்டும் 51 கரும்புள்ளிகளும் உள்ளன. இத்தகைய இடங்களில் கூடுதல் கவனம் செலுத்தி சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மதுரை மாவட்டத்தில் சாலை போக்குவரத்து நெரிசலை குறைத்திடும் நோக்கில், கோரிப்பாளையம் சந்திப்பில் சாலை மேம்பாலம் அமைக்க தமிழ்நாடு முதலமைச்சரால் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. மதுரை சுற்றுச் சாலை சிவகங்கை சாலை சந்திப்பில் ஒரு சாலை மேம்பாலமும் கட்டி முடிக்கப்பட்டு போக்குவரத்துப் பயன்பாட்டில் உள்ளது.
மதுரை பெரியார் பேருந்து நிலையம் முதல் யானைக்கல் வரை உயர்மட்ட பாலம் அமைக்கவும், மதுரை நெல்பேட்டை அண்ணா சிலை முதல் அவனியாபுரம் புறவழி சாலை சந்திப்பு பெரியார் சிலை வரை உயர்மட்ட பாலம் அமைக்கவும் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது.
வடக்கு வைகை ஆற்றங்கரையில் இருந்து பாத்திமா கல்லூரி சந்திப்பு முதல் கன்னியாகுமரி பைபாஸ் சாலை வரை புதிதாக சாலை அமைக்க ரூ.100.00 கோடி மதிப்பில் பிரேரணை தயாரிக்கப்பட்டு அரசிடம் நிர்வாக ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாவட்டத்தில் சாலை விபத்துகளை தவிர்த்திடும் வகையில் தேவைக்கேற்ப சுரங்கப்பாதை (Subway) அமைப்பதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்திட வேண்டும். சாலை பாதுகாப்பு தொடர்பாக பயன்படுத்தப்படும் உபகரணங்களின் தரத்தினை உறுதி செய்திட வேண்டும்.
தமிழ்நாடு அரசு சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளை சிறப்பாக செயல்படுத்தி விபத்துகளை கட்டுப்படுத்தும் மாவட்டம் மற்றும் மாநகராட்சி நிர்வாகங்களை தேர்வு செய்து மாவட்டத்திற்கு ரூ.25.00 இலட்சமும், மாநகராட்சிக்கு ரூ.15.00 இலட்சமும் பரிசாக வழங்கி ஊக்கப்படுத்தி வருகிறது.
இதனை மதுரை மாவட்ட நிர்வாகம் மற்றும் மதுரை மாநகராட்சி நிர்வாகம் பெறுகின்ற வகையில் சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளை சிறப்பாக செயல்படுத்திட வேண்டும் என மாண்புமிகு பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்கள் பேசினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் மரு.எஸ்.அனீஷ் சேகர், இமாநகர காவல் ஆணையாளர் செந்தில்குமார், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், சட்டமன்றஉறுப்பினர்கள் கோ.தளபதி (மதுரைவடக்கு), மு.பூமிநாதன் (மதுரைதெற்கு), மாநகராட்சி ஆணையாளர் மரு.கா.ப.கார்த்திகேயன்/
மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.பாஸ்கரன், மாவட்ட வருவாய் அலுவலர் ர.சக்திவேல், துரை மாநகராட்சி துணை மேயர் நாகராஜன், தலைமைப் பொறியாளர், நெடுஞ்சாலைத்துறை க(ம) இரா.சந்திரசேகர், தேசிய நெடுஞ்சாலை தலைமைப் பொறியாளர் பாலமுருகன்.
மேலும், பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் ரகுநாதன் உட்பட ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம், லாரி உரிமையாளர்கள் சங்கம், தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம், லயன்ஸ் கிளப், ரோட்டரி சங்கம், நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களை சார்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.