
மதுரை மாவட்டம், நாகமலைப்புதுக்கோட்டையில் உள்ள பில்லர் மையத்தில் இன்று (22.06.2022) பள்ளிக் கல்வித்துறை சார்பாக மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பள்ளிக் கல்வித்துறை சார்ந்த அலுவலர்களுக்கு நிர்வாகத் திறன் மேம்பாட்டு பயிற்சியை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிசெய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் மாணவ, மாணவியர்களின் நலனை கருத்திற்கொண்டு கொரோனா காரணமாக குழந்தைகளுக்கு ஏற்பட்ட கற்றல் இடைவெளியை குறைத்திடும் நோக்கில் ”எண்ணும் எழுத்தும்” என்ற திட்டத்தினை தொடங்கி வைத்துள்ளார்கள்.
இத்திட்டத்தின்படி, 2025-ஆம் ஆண்டிற்க்குள் தமிழ்நாட்டில் உள்ள 8 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளும் எழுத்தறிவும், எண்ணறிவும் பெற வேண்டும் என்பதை இலக்காக கொண்டு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தி ஆசிரியர்கள் உள்ளிட்ட பள்ளிக் கல்வித்துறை சார்ந்த அனைத்துநிலை அலுவலர்களின் பங்கு மிக முக்கியமானதாகும்.
அதனடிப்படையில், இன்றைய தினம் மதுரையில் பள்ளிக் கல்வித்துறை சார்ந்த 38 முதன்மைக்கல்வி அலுவலர்கள் / துணை இயக்குநர்கள், 98 மாவட்டக்கல்வி அலுவலர்கள், 2009 மற்றும் 2012 ஆகிய ஆண்டுகளில் நேரடி நியமனம் மூலமாக நியமிக்கப்பட்ட வட்டாரக்கல்வி அலுவலர்கள் 67 பேர் ஆகியோருக்கு தலைமைப்பண்பு பயிற்சி, எண்ணும் எழுத்தும் மற்றும் கற்றல் விளைவுகள் சார்நத பயிற்சி தற்போது நடத்தப்படுகிறது.
முதலமைச்சர் தலைமையிலான அரசு குழந்தைகளின் நலனை கருத்திற்கொண்டு தமிழகத்திற்கு தேசிய கல்விக் கொள்கை தேவையில்லை என்பதை நிலைப்பாடாகக் கொண்டு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
அதன்படி, தமிழநாடு மாநில கல்விக் கொள்கையை சிறப்புடன் செயல்படுத்திடும் நோக்கில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் துறை சார்ந்த வல்லுநர்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், தமிழகத்தில் உள்ள குழந்தைகளின் கல்வி உரிமையை பாதுகாத்திடும் வகையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
தமிழகத்தில் 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தேர்வு முடிவுகள் காரணமாக குழந்தைகள் தற்கொலை போன்ற செய்திகள் மிகுந்த மனவேதனை அளிக்கின்றன. தேர்வு முடிவுகள், மதிப்பெண்களால் மட்டுமே ஒரு குழந்தையின் தனித்திறமையை அளவிட முடியாது என்பது எனது தாழ்மையான கருத்து.
எனவே பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பிற குழந்தைகளுடன் ஒப்பிட்டு மன அழுத்தம் ஏற்படுத்துவதை தவிர்த்திட வேண்டும். குழந்தைகளுக்கு மனவள ஆலோசனை வழங்குவதற்காக ஒவ்வொரு பள்ளிகளிலும் வழிகாட்டு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், குழந்தைகளுக்க ஆலோசனை வழங்குவதற்காக 14417, 1098 போன்ற கட்டணமில்லா தொடர்பு எண்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
அரசுப் பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி பெறாத குழந்தைகள், தேர்வு எழுதாத குழந்தைகளுக்கு ஜீலை மாதத்திலேயே மறுதேர்வு நடத்தப்படுகிறது. குழந்தைகள் மனம் தளராமல் இத்தேர்வில் பங்கேற்று வெற்றி பெறலாம்.
தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறையின் மூலம் மாணவ, மாணவியர்களின் நலனுக்காக பாடப் புத்தகங்கள், சீருடைகள் உள்ளிட்ட 10 விதமான பொருட்களை இலவசமாக வழங்கி வருகிறது. இதனை கட்டணத்திற்காக விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும். இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிக் கட்டடங்களில் சேதமடைந்த, பயன்படுத்த இயலாத நிலையில் உள்ள 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டடங்கள் கண்டறியப்பட்டு புதிய கட்டடங்கள் கட்டுவதற்கான ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிகத்தில் உள்ள அனைத்து மேல்நிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளிலும் நவீன ஆய்வகங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
தனியார் நிறுவனங்களில் சமூகப் பொறுப்பு நிதியிலிருந்தும் பள்ளிக் கட்டடங்களின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில், பள்ளிக்கல்வித்துறை ஆணையர் க.நந்தகுமார், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் ஆ.வெங்கடேசன், தொடக்கக் கல்வி இயக்ககம் (இயக்குநர்) முனைவர்.க.அறிவொளி, மாவட்ட ஊராட்சித்தலைவர் சூரியகலா கலாநிதி, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கா.கார்த்திகா அவர்கள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.