தெருக்கள்மதுரை

மதுரை தெருப் பெயர் ஆய்வு – 01

Madurai Street 01

ன்றைய மதுரை நகரமைப்பின் சிறப்பில் அதன் தெரு அமைப்பே முக்கிய பங்கு வகிக்கிறது எனில் மிகையன்று. அத்தெருக்களுக்குச் சூட்டப்பட்டுள்ள தெருப்பெயர்கள் மேலும் அத்தெருக்களுக்குப் பெருமை சேர்க்கின்றன. மதுரையின் சில தெருப் பெயர்கள் மதுரைக்கும் தமிழுக்கும் உள்ள நெருங்கிய தொடர்பைக் காட்டுகின்றன. இத்தெருப்பெயர்கள் சங்ககால மதுரையை நமக்குப் படம் பிடித்துக் காட்டவல்லன. சங்க கால இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள மக்கள் வாழ்க்கையை நினைத்துப் பார்க்க இவை உதவுகின்றன.

தொழில்களை அடிப்படையாகக் கொண்ட தெருப் பெயர்களான வார்ப்புக் கண்ணாரத்தெரு, ஒட்டுக்கண்ணாரத்தெரு, அளவுக்காரத்தெரு, சுண்ணாம்புக்காரத்தெரு, எழத்தாணிக்காரத்தெரு, தென்னோலைக்காரத்தெரு, உப்புக்காரத்தெரு, அக்கசாலைத்தெரு, மஞ்சணக்காரத்தெரு, பூக்காரச்சந்து, கொட்டுக்கண்ணாரச்சந்து போன்ற பெயர்கள் அந்தந்த தொழிலைச் செய்வோர் தமது தொழிலுக்கு உறுதுணையாக ஒரே இடத்தில் கூடி வாழ்ந்ததைக் காட்டுகிறது.

நவதானியக்காரத் தெரு, பச்சரிசிக்காரத்தெரு, வெங்கலக்கடைத்தெரு போன்ற பெயர்கள் ஒரே இடத்தில் குறிப்பிட்ட பொருட்கள் விற்பனை நடந்ததைக் காட்டுகிறது. இன்றும் சில குறிப்பிட்ட தெருக்களில் ஒரே கடைகள் அமைந்திருக்கும் சிறப்பை மதுரையில் காணமுடிகிறது. கிழக்குச் சித்திரை வீதியிலும் தெற்குச்சித்திரை வீதியிலும் பெரும்பாலும் துணிக்கடைகள் அமைந்துள்ளன.

தெற்கு ஆவணி மூல வீதியில் பொன்நகை முதலியவற்றின் வாணிகம் ஒரு தொகுப்பாக அமைந்திருக்கக் காணலாம். அந்த வீதியின் மற்றுமொரு பகுதியில் வரிசையாக இரும்புச் சட்ட வேலை செய்யும் கடைகள் உள்ளன. கீழமாசி வீதியெங்கும் பல்பொருள் அங்காடிகள் நிறைந்துள்ளன. புதுமண்டபத்தின் ஒரு பகுதியில் வரிசையாகப் புத்தகக் கடைகளைக்காணலாம்.

தனித்தனி வீதிகளில் பூக்கடைகள், வளையல்கடைகள், பொம்மைக்கடைகள், பாத்திரக் கடைகள் அமைந்துள்ளதைப் பார்க்கலாம். இதெல்லாம் மதுரையில் காணப்படும்சிறப்பம்சமாகவே கருதப்படுகிறது. மதுரை என்றதுமே சிவபெருமானின் திருவிளையாடலகள் நினைவுக்கு வரும். திருவிளையாடற்புராணத்தில் வரும் கதைகளுக்கு ஏற்ற சின்னங்களை மதுரையில் காணலாம்.

அது மாத்திரமல்ல மதுரை தெருப் பெயர்கள் சிலவும் திருவிளையாடலோடு தொடர்புடையவைகளாக அமைந்திருப்பது வேறெங்கும் காண முடியாத சிறப்பாகும். தெருக்களின் பெயர்கள் கோயில்களின் திருப்பெயரால் அழைக்கப்படுவது மதுரையின் மற்றொரு தனிச்சிறப்பாகும். சில குறிப்பிட்ட சாதியினரின் இஷ்ட தெய்வஆலயங்களையும், சிலரின் குலதெய்வ கோயில்களையும், சமய வேறுபாடின்றி யாவரும் தொழும் சில வழிபாட்டிடங்களையும் மதுரையின் தெருப்பெயர்களால் இனங்கண்டு கொள்ள முடிகிறது.

கிறிஸ்தவ தேவாலயங்களின் பெருமையையும் அவற்றின் பழமையையும் உணர முடிகிறது. ஆலய வழிபாட்டிற்கும் ஆண்டவன் தரிசனத்திற்கும் மதுரை மக்களிடம் உள்ள ஆர்வம் இதனால் விளங்குகிறது. பல வேறு சில தெருப்பெயர்கள் மதுரை நகரம் ஆட்சியாளர்களின் ஆதிக்கத்தின் கீழ் இருந்ததைக் காட்டுகின்றன.

சில தெருப்பெயர்கள் இன்று மருவி வழங்கப்படுவதால் அதன் பொருள் தெரியாது போயிற்று. அதன் பழைய உண்மையான பெயரைத் தெரிந்து கொள்ளும் போது அத்தெருவின் பெயர் மேலும் புகழடைகிறதைக் காணலாம். ஆங்கிலேய அதிகாரிகளின் பெயர்களில் அமைந்துள்ள தெருக்கள், கிறிஸ்தவ இறைத் தொண்டர்கள் பெயரில் அமைந்துள்ள தெருக்கள், சுதந்திரப் போராட்ட மதுரை தியாகிகளின் பெயர்கள் தாங்கியுள்ள தெருக்கள், மதுரை நகரவைத் தலைவர்களின் பெயர்களில் அமைந்துள்ள தெருக்கள் என மதுரைக்கு நன்மை செய்த பெரியோர்களின் பெயர்களை மறவாது நினைவு கூரும் மதுரை நகரை எவ்வளவு வாழ்த்தினாலும் தகும்!

இதுபோன்ற எண்ணற்ற உண்மைகளையும் தத்துவங்களையும், வரலாறுகளையும், இலக்கியங்களையும் உணர்த்தும் வண்ணம் அமைந்துள்ள மதுரை நகரத் தெருப் பெயர்களை ஆராய்வதே ஒரு தனி இன்பம் தரும். தமிழ்க்கலை, நாகரிகம், பண்பாடு ஆகியவற்றின் விளைநிலமாக மதுரை நகரம் அமைந்திருப்பதை அதன் தெருப்பெயர்கள் விளக்குகின்றன. இதனால் மதுரை நகரத் தெருப் பெயர்களில் மறைந்திருக்கும் மறைபொருளைக் கண்டு மகிழ்வது ஒவ்வொரு தமிழரின் கடமையாகும். மதுரை நகரத் தெருப் பெயர்களைப் பொருளுணர்ந்து உச்சரித்து மதுரையின் பழமையையும் பெருமையையும் கண்டு உணர்வது அவசியம். யாவருக்கும் இன்பம் தரும் என்பதில் ஐயமில்லை!

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
1
+1
1
+1
1
+1
0
+1
0
+1
1

Share Now

டி. தேவராஜ்

மதுரை எழுத்தாளர்கள் பட்டியலில் முக்கியமாக அறிய வேண்டிய நபர்களில் டி.தேவராஜ் அவர்களும் ஒருவர். மிகச் சிறந்த நூல்களை படைத்துள்ளார். மதுரை குறித்து பல நூல்களை வெளியிட்டிருந்தாலும், மதுரை நகர தெருப் பெயர்கள் எனும் தலைப்பில் வெளியிட்டுள்ள இவரது நூல் மதுரைக்கு பெருமை சேர்க்க கூடியது. அந்த நூலின் தொகுப்பினைத்தான் நாம் இங்கு பார்க்கின்றோம். இவர் பசுமலை உயர்நிலைப் பள்ளியின் முன்னாள் ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.
Back to top button
error: