
மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருப்பாலை அருகே உள்ள பாமா நகர் மற்றும் சாரதி நகர் பகுதிகளில் (29.05.2022) தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.பி.மூர்த்தி, 100 KVA திறன் கொண்ட இரண்டு புதிய மின்மாற்றிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்/
தொடர்ந்து அமைச்சர் பி.மூர்த்தி செய்தியாளரிடம் தெரிவித்ததாவது:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் அவர்கள் பொதுமக்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றி அவர்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்திட வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்கள்.
மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருப்பாவை பகுதி உள்ள பொதுமக்கள் சட்டமன்ற தேர்தல் நேரத்தின் போது இப்பகுதியில் சீரான மின் வினியோகம், குடிநீர் வினியோகம், சாலை வசதி மற்றும் தெரு விளக்கு வசதி போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தார்கள்.
அதன்படி தற்போது இப்பகுதியில் உள்ள பாமா நகர் மற்றும் சாரதி நகர் ஆகிய இடங்களில் 2 புதிய மின்மாற்றிகள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இப்பகுதியில் உள்ள குடியிருப்புகளில் சீரான மின் விநியோகம் உறுதி செய்யப்படும். அதேபோல சுத்தமான குடிநீர் வினியோகிப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இப்பகுதிகளில் மாநகராட்சியின் மூலம் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கடந்த 10 ஆண்டுகளில் இப்பகுதிகளில் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் அவர்கள் பொறுப்பேற்ற பின்பு பொதுமக்கள் அனைவருக்கும் அரசு நலத்திட்டங்கள் முழுமையாகச் சென்றடையும் வகையில் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு அரசின் நிதி வருவாயை அதிகரிக்கும் வகையில் வணிகவரி மற்றும் பதிவுத் துறையின் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்தாண்டில் மட்டும் வணிகவரித்துறையின் வருவாய் 13.82 சதவிதம் உயர்ந்து ரூபாய் 1,04,910 கோடி அளவில் வணிகவரி வசூல் செய்யப்பட்டுள்ளது.
அரசு வழங்கியுள்ள விதிமுறைகளை பின்பற்றாமல், வரி ஏய்ப்பு செய்யும் நிறுவனங்கள் மீது பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் ரா.சக்திவேல், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக தலைமை பொறியாளர் உமாதேவி, மேற்பார்வை பொறியாளர் அம்சவள்ளி, செயற்பொறியாளர் மோகன், மாநகராட்சி மண்டலத் தலைவர் வாசுகி சசிகுமார் அவர்கள் உட்பட அரசு அலுவலர்கள், மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.