மதுரை தமுக்கம் மைதானத்தில் இன்று முதல் 45 நாட்களுக்கு அரசுப் பொருட்காட்சி | அமைச்சர்கள் துவக்கிவைத்தனர்
Government Exhibition at Madurai Tamukkam Grounds for 45 days from today | Ministers launched

மதுரை தமுக்கம் மைதானத்தில் இன்று முதல் 45 நாட்களுக்கு அரசுப் பொருட்காட்சியினை அமைச்சர்கள் இணைந்து ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தனர்.
மதுரை தமுக்கம் மைதானத்தில் (14.05.2022) செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் முனைவர்.பழனிவேல் தியாகராஜன் ஆகியோர், மதுரை அரசுப்பொருட்காட்சி – 2022 அரங்குகளை தொடங்கி வைத்து பார்வையிட்டார்கள்.
தொடர்ந்து, செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்ததாவது:- திருவிழா நகரான மதுரையில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பாக ஆண்டுதோறும் அரசுப் பொருட்காட்சி நடத்தப்பட்டு வருகின்றது.
கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்பட்ட பல்வேறு கட்டுப்பாடுகளின் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இந்த அரசுப் பொருட்காட்சி நடைபெறாமல் இருந்தது.
இந்நிலையில், நடப்பாண்டில் அரசுப் பொருட்காட்சியினை மிகச் சிறப்புடன் நடத்திட திட்டமிடப்பட்டு தமுக்கம் மைதானத்தில் அரசுப் பொருட்காட்சி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இது தமிழ்நாடு அரசின் சார்பாக நடத்தப்படும் 212-வது அரசுப் பொருட்காட்சியாகும்.
இப்பொருட்காட்சி மைதானத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, பள்ளிக்கல்வித்துறை, இந்து சமய அறநிலையத்துறை, காவல்துறை உள்ளிட்ட 27 அரசுத்துறை அரங்குகளும், மதுரை மாநகராட்சி.
மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், ஆவின், உள்ளிட்ட அரசு சார்பு நிறுவனங்கள் மூலம் 6 அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அரங்கிலும் அரசு திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்க அந்தந்த துறைகளின் சார்பாக பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், தமிழகத்தின் விடுதலைப் போராட்ட வீரர்களின் தியாகங்களை பறைசாற்றும் வகையில் ”விடுதலைப் போரில் தமிழகம்” என்ற தலைப்பிலும், உலகப் பொதுமறையாம் திருக்குறளின் பெருமையை எடுத்துரைக்கும் வகையில் தமிழ் இணையக் கல்விக்கழகம் சார்பாக குறளோவிய கண்காட்சி அரங்கு உள்ளிட்ட சிறப்பு அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.
அதேபோல, சிறியவர் முதல் பெரியவர் வரை குடும்பத்துடன் பங்கேற்று மகிழ பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த ராட்டினங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வீட்டு உபயோகப் பொருட்கள்.
மற்றும் பல்பொருள் விற்பனை அங்காடி போன்ற 15 தனியார் அரங்குகளும், தரத்துடன் கூடிய சுகாதாரமான சிற்றுண்டி விற்பனை அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. தினந்தோறும் மாலையில் கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன.
அந்தவகையில், தமிழ்நாடு அரசு மக்கள் நலனுக்காக செயல்படுத்தி வரும் நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்கள் எளிதில் அறிந்துகொள்ளும் வகையிலும், குடும்பத்துடன் கண்டுகளித்திட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடனும் பொருட்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
இன்று தொடங்கி தொடர்ந்து 45 நாட்கள் இந்த அரசுப் பொருட்காட்சி தினந்தோறும் மாலை 4.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை நடைபெறும். அரசுப் பொருட்காட்சி நுழைவுக் கட்டணமாக பெரியவர்க்கு ரூபாய் 15/-ம், சிறியவர்க்கு ரூபாய் 10/-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அதிகளவில் வருகை தந்து இந்த கண்காட்சி அரங்குகளை கண்டுகளித்திடுமாறு மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில், செய்தித்துறை இயக்குநர் முனைவர்.வீ.ப.ஜெயசீலன், மாவட்ட ஆட்சியர் மரு.எஸ்.அனீஷ் சேகர், மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், மாநகராட்சி ஆணையாளர் மரு.கா.ப.கார்த்திகேயன், இசட்டமன்ற உறுப்பினர்கள் கோ.தளபதி (மதுரை வடக்கு), திரு.ஆ.வெங்கடேசன் (சோழவந்தான்), மு.பூமிநாதன் (மதுரை தெற்கு).
மற்றும் மாநகராட்சி துணை மேயர் தி.நாகராஜன், மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் வே.முருகன், மாநகராட்சி மண்டலத் தலைவர் அ.சரவண புவனேஸ்வரி, செய்தித்துறை இணை இயக்குநர் எஸ்.செல்வராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் ர.சக்திவேல், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அபிதா ஹனீப் அவர்கள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.