
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (25.05.2022) செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பாக மாவட்ட ஆட்சியர் மரு.எஸ்.அனீஷ்சேகர், 75-வது சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக மதுரை மாவட்டத்தை சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்களை போற்றி பறைசாற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ள நிரந்தர புகைப்பட தொகுப்பினை திறந்து வைத்து பார்வையிட்டார்.
இதுகுறித்து கலெக்டர் தெரிவித்ததாவது:- இந்திய தேசம் சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் “சுதந்திரத் திருநாள் அமுதப்பெருவிழா” (Aradi Ka Amrit Mahotsav) கொண்டாட்டங்கள் சிறப்புடன் நடைபெற்று வருகின்றன.
அதன்படி, மதுரை மாவட்டத்தில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக, சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்களை இன்றைய தலைமுறையினர் அறிந்து பயன்பெறும் வகையில் கலைநிகழ்ச்சிகள், மாணவ, மாணவிர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
குறிப்பாக மதுரை மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பாக இந்திய விடுதலைப் போரில் ஆங்கிலேயர்களை தீரமுடன் எதிர்கொண்ட தமிழக சுதந்திர போராட்ட வீரர்களின் பங்களிப்பை போற்றி பெருமைப்படுத்தும் வகையில் ‘விடுதலைப் போரில் தமிழகம்’ என்ற தலைப்பில் அலங்கார ஊர்தி பொதுமக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டது.
மேலும், காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் சிறப்பு புகைப்படக் கண்காட்சி தொடர்ந்து 7 நாட்களுக்கு நடத்தப்பட்டது. இது தவிர பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி, கட்டுரைப்போட்டி, மாரத்தான் போட்டி போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதேபோல, மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் அரசுப் பொருட்காட்சியில் விடுதலைப் போரில் தமிழகம் என்ற தலைப்பில் தனி அரங்கு ஏற்படுத்தப்பட்டு தமிழகத்தை சேர்ந்த விடுதலைப் போராட்ட வீரர்களின் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இதன் தொடர்ச்சியாக, விடுதலைப் போராட்ட வீரர்களின் புகைப்பட தொகுப்பினை பொதுமக்கள் அதிகளவில் பார்த்து பயன்பெறும் வகையில் 2 இடங்களில் நிரந்தர கண்காட்சி அமைத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, முதற்கட்டமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்களை போற்றி பறைசாற்றும் வகையில் புகைப்பட தொகுப்பு பொதுமக்கள் கண்கவரும் விதமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், பொதுமக்கள் அதிகளவில் கூடுகின்ற ஒரு பொது இடம் தேர்வு செய்யப்பட்டு மற்றொரு கண்காட்சி அமைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இந்த நிகழ்போது. செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இ.சாலி தளபதி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ம.கயிலைச்செல்வம் ஆகியோர் உடன் இருந்தனர்.