
மதுரை சிறையில் இருக்கும் மகனுக்கு கஞ்சா கொண்டு சென்று சிக்கிய தந்தையும், அவருக்கு உடந்தையாக இருந்த வாலிபரும் கைது செய்யப்பட்டனர். சிறை கைதி மதுரை பழங்காநத்தம் ஆர்.சி.தெருவை சேர்ந்தவர் யாசின் முகமது அலி (வயது 24). கடந்த ஏப்ரல் மாதம் கொலை முயற்சி வழக்கில் அவரை சுப்பிரமணியபுரம் போலீசார் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
இவர் மீது குண்டர் தடுப்புச்சட்டமும் பாய்ந்தது. சிறையில் சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களை தவிர்த்து ஏனைய நாட்களில் கைதிகளை காலை முதல் மதியம் வரை உறவினர்கள் சந்திக்க அனுமதிக்கிறார்கள். அதன்படி யாசின் முகமது அலியை சந்திப்பதற்காக மத்திய சிறைக்கு அவரது தந்தை செய்யது இப்ராகிம் (54), யாசின் முகமது அலியின் நண்பர் ஜெயசூர்யபிரகாஷ் (22) ஆகியோர் மனு வழங்கி நேற்று காலை பார்க்க வந்தனர்.
அப்போது பிரதான வாசலில் சிறை போலீசார் அவர்களை சோதனை செய்தனர். அப்போது ஜெயசூர்யபிரகாசை சோதனை செய்த போது அவரது உள்ளாடைக்குள் மறைத்து வைத்து எடுத்து வந்திருந்த 105 கிராம் எடை கொண்ட இரண்டு கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக விசாரணை நடத்தி, 2 பேரையும் மதுரை மத்திய சிறை சூப்பிரண்டு (பொறுப்பு) வசந்தகண்ணன் உத்தரவின் பேரில் சிறை அதிகாரி பாலகிருஷ்ணன், கரிமேடு போலீசில் ஒப்படைத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். போலீசார் விசாரணையில், நேற்றைய தினத்தில் சிறையில் இருந்து கைதி யாசின் முகமதுஅலி கோர்ட்டுக்கு கொண்டு செல்லப்பட இருந்தார்.
எனவே மகனுக்கு அவரது நண்பர் மூலம் கோர்ட்டு பகுதியில் வைத்து கஞ்சா கொடுக்க செய்யது இப்ராகிம் முடிவு செய்திருந்தாராம். ஆனால் சிறை அதிகாரிகள் அந்த கைதியை கோர்ட்டுக்கு அழைத்து செல்லாததால், இருவரும் அவரை சிறைக்கு சென்று பார்த்தபோது கஞ்சாவுடன் பிடிபட்டுள்ளது தெரியவந்தது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறையில் இருக்கும் மகளுக்காக கஞ்சா கொண்டு சென்ற தாய் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் மகனுக்காக அவரது நண்பர் மூலம் கஞ்சா கொடுக்கச் சென்று தந்தை சிக்கிய சம்பவம் மதுரை சிறையில் பரபரப்பை ஏற்படுத்தியது.