செய்திகள்போக்குவரத்து

மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் ராணுவ உடையில் தேசிய கொடி ஏற்றினார் | ஜூலை மாதம் வரை பயணிகள் ரயில்கள் வருமானம் ரூ.219.65 கோடி

Madurai Divisional Railway Manager hoisted the national flag in military uniform Passenger trains earned Rs 219.65 crore till July

தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் சார்பாக 76வது சுதந்திர தின விழா திங்கட்கிழமை (15.8.2022) அன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவில், மதுரை ரயில்வே காலனி செம்மண் திடலில் கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த்‌ தேசிய கொடியை ஏற்றி வைத்து ரயில்வே பாதுகாப்பு படை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். கோட்ட ரயில்வே மேலாளர் பிராந்திய இராணுவப் பிரிவில் உயர் நிலை அதிகாரியாக இருப்பதால் ராணுவ உடையில் இன்று தேசியக் கொடியை ஏற்றினார்.

அவர் பேசும்போது இந்த ஆண்டு ஜூலை மாதம் வரை பயணிகள் ரயில்கள் இயக்கியதன் மூலம் ரூபாய் 219.65 கோடி வருமானம் ஈட்ட ப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு காட்டிலும் 154 சதவீதம் அதிகமாகும். இதேபோல ஜூலை மாதம் வரை ரயில் சரக்கு போக்குவரத்து மூலம் வருமானம் ரூபாய் 113.45 கோடி வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 41 சதவீதம் அதிகமாகும். ஜூலை மாதம் வரை மதுரை கோட்டத்தின் ஒட்டு மொத்த வருமானம் ரூபாய் 359.05 கோடி ஆகும்.

கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூபாய் 179.44 கோடி மட்டுமே மொத்த வருமானமாக ஈட்டப்பட்டிருந்தது. சரக்கு போக்குவரத்து மூலமே அதிக வருமானம் ஈட்டப்படும் நிலையில் மதுரை கோட்டத்தில் ஜூலை மாதம் வரை 1.05 மில்லியன் டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளது. இது கடந்த நிதியாண்டைக் காட்டிலும் 44.52 சதவீதம் அதிகமாகும். ரயில் பாதைகளை மின்மயமாக்கும் பணிகளும் விரைவாக நடைபெற்று வருகின்றன.

மின்மயமாக்கல் பணிகளில், கடந்த ஆண்டில் மதுரை கோட்டத்தில் 400 கிலோமீட்டர் பாதை மின்மயமாக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் மதுரை – திருமங்கலம், திருநெல்வேலி – திருச்செந்தூர், காரைக்குடி – மானாமதுரை, மீளவிட்டான் – தூத்துக்குடி, விருதுநகர் – தென்காசி ரயில் பாதைகள் உட்பட 400 கிலோமீட்டர் ரயில் பாதையில் மின்மயமாக்கல் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் தேனி – போடிநாயக்கனூர் இடையே நடைபெற்று வரும் அகல ரயில் பாதை பணிகள் இந்த ஆண்டில் நிறைவுறும்படி திட்டமிடப்பட்டுள்ளது.

பயணிகள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் ரயில் நிலையங்களில் நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. மதுரை கோட்டத்தில் பல்வேறு ரயில் நிலையங்களில்நடைமேடைகளை உயர படுத்துதல் மற்றும் நீட்டித்தல், மேற்கூரைகள் அமைத்தல், ரயில் நிலையக் கட்டிடங்களை புனரமைத்தல், நடை மேம்பாலங்கள் மற்றும் மின் தூக்கிகள் அமைத்தல் போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன.

பொதுத்துறை நிறுவனங்கள் சமுகநல நிதியிலிருந்து வழங்கும் ஆயத்த நவீன கழிப்பறை அமைப்புகள் மேலும் 20 ரயில் நிலையங்களில் அமைக்கப்பட இருக்கிறது. கணிப்பொறி வாயிலாக இயங்கும் தானியங்கி பொது தகவல் ஒலிபரப்பு கருவிகள் மேலும் 14 ரயில் நிலையங்களில் அமைக்கப்பட இருக்கிறது.

மதுரை மற்றும் ராமேஸ்வரம் ரயில் நிலையங்களின் மறுசீரமைப்பு பணிகளுக்கான ஒப்பந்ததாரர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. மதுரை கோட்டத்தில் மேலும் திருநெல்வேலி, திண்டுக்கல், தூத்துக்குடி ஆகிய 3 ரயில் நிலையங்களிலும் மறு சீரமைப்பு பணிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த 2022 – 23 ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவித்தபடி உள்ளூர் தயாரிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு பல்வேறு ரயில் நிலையங்கள் இலவச விற்பனை நிலையங்கள் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் இதற்காக மதுரை, திருநெல்வேலி, திண்டுக்கல், ராமேஸ்வரம், ராமநாதபுரம், மணப்பாறை, பழனி, விருதுநகர், கோவில்பட்டி, தூத்துக்குடி, ஸ்ரீவில்லிபுத்தூர், திருச்செந்தூர், தென்காசி, கொட்டாரக்கரா ஆகிய 14 ரயில் நிலையங்களில் முதற்கட்டமாக தேசிய வடிவமைப்பு நிறுவன வழிகாட்டுதலின்படி நிரந்தர விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட இருக்கிறது, என்றார்.

விழாவின் இறுதியில் ரயில்வே பாதுகாப்பு படை மோப்ப நாய்கள் வழங்கிய சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. பின்பு ரயில்வே பள்ளி மாணவ, மாணவிகள் வழங்கிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் தண்ணீரு ரமேஷ் பாபு ஊழியர்கள் நல அதிகாரி டி.சங்கரன், ரயில்வே பாதுகாப்பு ஆணையர் வி.ஜே.பி. அன்பரசு ஆகியோர் கலந்து கொண்டனர்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

Hello Madurai

மதுரை குறித்த பயனுள்ள செய்திகள், கட்டுரைகள், வீடியோக்கள் ஆகியவை அடங்கிய வலைதளம். கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக Hello Madurai App பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செய்திகள் மற்றும் விளம்பரங்கள் பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் - 9566531237.
Back to top button
error: