அமைச்சர்செய்திகள்

மதுரை குலமங்கலத்தில் ரூ.1.19 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் | அமைச்சர் பி.மூர்த்தி வழங்கினார்

1.19 crore welfare assistance in Madurai Kulamangalam | Presented by Minister P. Murthy

மதுரை மாவட்டம், மதுரை வடக்கு வட்டம், குலம்ஙகலம் கிராமத்தில் (21.06.2022) நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் தலைமையில் பல்வேறு அரசுத்துறைகளின் சார்பாக 479 பயனாளிகளுக்கு ரூபாய் 1 கோடியே 19 இலட்சத்து 65 ஆயிரத்து 971 மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.

தொடர்ந்து, அமைச்சர் திரு.பி.மூர்த்தி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாடு முழுவதும் கிராமப்புறங்களில் வசிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு அனைத்துத்துறைகளின் மூலம் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகின்றார்கள். அந்த வகையில், மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குலமங்கலம் ஊராட்சியில் இன்றைய தினம் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 479 பயனாளிகளுக்கு ரூபாய் 1 கோடியே 19 இலட்சத்து 65 ஆயிரத்து 971 மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் மகளிருக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம், இல்லந் தேடி கல்வி, மக்களைத் தேடி மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி உள்ளார்கள். மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் நடைபெற்று வரும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் தற்போது கிராமப்புறங்களுக்கே சென்று அவர்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று தகுதியான மனுக்களின் மீது அந்தந்த துறைகளின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளபட்டு தீர்வு காணப்பட்டு வருகின்றன.

மேலும், குலமங்கலம் ஊராட்சி காயம்பட்டியில் நீண்ட நாட்களாக வீட்டுமனைப்பட்டா கிடைக்கப்பெறாமல் இருந்த 58 நபர்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் மேல்நிலை குடிநீர் நீர்தேக்க தொட்டி ஏற்படுத்தப்பட்டு விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளன.

அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையை வருகின்ற 25.06.2022-அன்று வேளாண்மைத்துறை அமைச்சரால், விவசாய பெருமக்கள், விவசாய நலச்சங்கங்கள், சர்க்கரை ஆலையில் பணியாற்றும் தொழிலாளிகள் முன்னிலையில் துவக்கி வைக்கப்படவுள்ளது.

கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் வணிவரித்துறை மற்றும் பதிவுத்துறையின் மூலம் அரசுக்கு போதிய வருமானம் கிடைக்கப்பெறவில்லை. தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் நிர்வாக ரீதியாக தொடர்ந்து பல்வேறு ஆய்வுகள் நடத்தி வருவதன் மூலம் கடந்த ஓராண்டு ஆட்சிக்காலத்தில் ரூபாய் 3500 கோடி பதிவுத்துறையின் வாயிலாகவும், ரூபாய் 9 ஆயிரம் கோடி வணிகவரித்துறையின் வாயிலாகம் அரசுக்கு வருவாய் ஈட்டித் தரப்பட்டுள்ளது.

மேலும், இத்துறைகளின் மூலம் அரசுக்கு அதிகளவில் வருவாய் ஈட்டும் நோக்கில் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் ஆ.வெங்கடேசன், மாவட்ட வருவாய் அலுவலர் ர.சக்திவேல், மாவட்ட ஊராட்சித்தலைவர் சூரியகலா கலாநிதி, மதுரை வருவாய் கோட்டாட்சியர் என்.சுகி பிரமிளா, வேளாண்மைத்துறை இணை இயக்குநர் விவேகானந்தன், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் சி.குருமூர்த்தி, சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் இரா.சௌந்தர்யா, மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் வீரராகவன், குலமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவர் இராணி இராஜாராம், மதுரை வடக்கு வட்டாட்சியர் ஆர்.திருமலை உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

Hello Madurai

மதுரை குறித்த பயனுள்ள செய்திகள், கட்டுரைகள், வீடியோக்கள் ஆகியவை அடங்கிய வலைதளம். கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக Hello Madurai App பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செய்திகள் மற்றும் விளம்பரங்கள் பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் - 9566531237.
Back to top button
error: