அமைச்சர்செய்திகள்

மதுரை கீழக்கரையில் ஜல்லிக்கட்டு விளையாட்டு அரங்கத்திற்கு 66.81 ஏக்கர் பரப்பளவில் இடம் தேர்வு | அமைச்சர் எ.வ.வேலு தகவல்

66.81 acres of land for Jallikattu Sports Stadium in Madurai Lower Bank Minister AV Velu information

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கிராமப் பகுதியில் (14.07.2022) பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு அரங்கம் அமைப்பதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

தொடர்ந்து, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்:-

உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு விளையாட்டு தமிழகத்தின் பாரம்பரியம்மிக்க அடையாளமாக விளங்கி வருகிறது. தென்தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பொங்கல் பண்டிகையையொட்டி குறிப்பிட்ட சில தினங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் மிகச்சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில், தமிழ்நாடு முதலமைச்சர் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கு தமிழ்நாடு அரசு சார்பில், மதுரை மாவட்டத்தில் பிரம்மாண்டமான அரங்கம் அமைக்கப்படும் என சட்டமன்றத்தில் அறிவித்தார்கள்.

அதன்படி ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்காக பிரம்மாண்ட அரங்கு அமைப்பதற்கு அலங்காநல்லூர் அருகே கீழக்கரைப் பகுதியில் 66.81 ஏக்கர் பரப்பளவில் அரசுப் புறம்போக்கு நிலம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த அரங்கம் அமைப்பதற்கான கட்டுமான வடிவமைப்பு (Architectural Design) தயாரிக்கும் பணிகள் பொதுப்பணித்துறை மற்றும் சில முன்னணி தனியார் நிறுவனங்கள் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த டிசைன்கள் முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அவர்கள் தேர்வு செய்யும் வடிவமைப்பின்படி மிகப் பிரம்மாண்டமாக இந்த அரங்கம் அமைக்கப்படும். இந்த அரங்கில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்துவதற்கு முக்கியத்துவம் வழங்கப்படும். ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறாத பிற நாட்களில் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தேவை மற்றும் விருப்பத்திற்கேற்ப அரசு விதிகளுக்குட்பட்டு பிற விளையாட்டுப் போட்டிகள் நடத்திடவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இங்கு அமைக்கப்படவுள்ள அரங்கத்திற்கு பொதுமக்கள் சிரமமின்றி வந்து செல்ல ஏதுவாக இப்பகுதியில் ஏற்கனவே தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (NHAI) மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டம்பட்டி முதல் வாடிப்பட்டி வரையிலான புறவழிச்சாலையில் இருந்து இந்த அரங்கிற்கு 3 கி.மீ நீளம் அணுகுசாலை அமைத்திட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சாலை அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும். ஓராண்டு காலத்திற்குள் இந்தப் பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு அரங்கு பணிகள் முழுமையாக நிறைவேற்றி பயன்பாட்டிற்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், மதுரை புதுநத்தம் சாலையில் பொதுப்பணித்துறையின் மூலம் முத்தமிழறிஞர் கலைஞர் நினைவு நூலகம் கட்டுமானப் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இக்கட்டடத்தில் ஒரே நேரத்தில் சுமார் 750 பேர் அமர்ந்து பயன்பெறும் வகையில் பெரிய அரங்கு அமைத்திட முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்கள்.

அதனடிப்படையில், கட்டடத்தின் உட்புற வடிவமைப்பில் சிறு திருத்தம் மேற்கொண்டு கட்டுமானப் பணிகளை துரிதப்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்னும் 3 முதல் 4 மாதகாலத்திற்குள் இக்கட்டுமானப் பணிகள் முழுமையாக நிறைவேற்றப்படும் என பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

தொடர்ந்து, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் மதுரை புதுநத்தம் சாலையில் பொதுப்பணித்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் முத்தமிழறிஞர் கலைஞர் நினைவு நூலகம் கட்டுமானப் பணிகள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டார்கள்.

இந்த ஆய்வுகளின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், மாண்புமிகு மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.கோ.தளபதி (மதுரை வடக்கு), ஆ.வெங்கடேசன் (சோழவந்தான்), மு.பூமிநாதன் (மதுரை தெற்கு) உட்பட பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

Hello Madurai

மதுரை குறித்த பயனுள்ள செய்திகள், கட்டுரைகள், வீடியோக்கள் ஆகியவை அடங்கிய வலைதளம். கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக Hello Madurai App பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செய்திகள் மற்றும் விளம்பரங்கள் பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் - 9566531237.
Back to top button
error: