
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வந்த 136 பணியாளர்கள் திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
கடந்த ஏப்ரல் மாதம் பணிநீக்கம் செய்யப்பட்ட அவர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். கடந்த 90 நாட்களாக போராடியவர்கள் இன்று பல்கலைக்கழக வாயில் முன்பாக கஞ்சித் தொட்டி திறந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்
போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் கூறியதாவது; கடந்த ஏப்ரல் மாதம் எங்கள் 136 பேரையும் திடீரென பணி நீக்கம் செய்தனர். இது சம்பந்தமாக பல்கலைக்கழக நிர்வாகத்திடமும், தமிழக அரசிடமும் பல்வேறு முறை கோரிக்கை வைத்தோம். எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை.
கடந்த 90 நாட்களுக்கு மேலாக போராடி வரும் சூழ்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட வடபழஞ்சி கிராமத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன் மரணம் அடைந்து விட்டார்.
இருந்தும் அரசு செவி சாய்க்காமல் இருக்கிறது. வழக்கு தொடுத்து வாதாட எங்களுக்கு பணவசதி இல்லை. எனவே, சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து அரிசி வாங்கி வந்து கஞ்சி தொட்டி திறக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.
பணி நீக்கம் செய்யப்பட்ட 136 பேர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரங்களை கருத்தில் கொண்டு, தமிழக அரசு உடனடியாக நிரந்தரமாக பணியாமர்த்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.