மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் வீடு முற்றுகை | நள்ளிரவில் மாணவியர் திடீர் போராட்டத்தால் பரபரப்பு
Madurai Kamaraj University Vice Chancellor's house besieged | Stirred by student sudden protest at midnight

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவிகளுக்கு குறிஞ்சி, 2-ம் ஆண்டு மற்றும் இறுதியாண்டு மாணவிகளுக்கு மல்லிகை மற்றும் தாமரை என்ற பெயரில் பல்கலைக்கழக வளாகத்தில் விடுதிகள் உள்ளன.
இந்த விடுதிகளில் சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். இங்கு அடிப்படை வசதிகள் இல்லை என்று கடந்த பல வருடங்களாக மாணவிகள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.
ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. இதற்கிடையே, தற்போது விடுதிகளில் உள்ள குளியலறையின் கதவுகள் உடைந்தும், சுவர்களில் ஒட்டப்பட்டுள்ள டைல்ஸ் கற்கள் பெயர்ந்தும் உள்ளன.
அத்துடன் விடுதி அறைகளில் உள்ள ஜன்னல் கதவுகளில் உள்ள கண்ணாடிகள் உடைந்து காணப்படுகிறது. இதனால் அறைக்குள் கொசுக்களின் தொல்லை இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் விடுதிகளில் தண்ணீர் வரவில்லை என தெரிகிறது. இதனால், குளியலறை மற்றும் கழிப்பறைகளில் துர்நாற்றம் வீசத்தொடங்கியது. அத்துடன் ஒரு மாணவியின் அறையில் பாம்பு புகுந்து விட்டது.
ஆனால், தண்ணீர் பிரச்சினை நேற்று வரை சரி செய்யப்படாததால் திடீரென்று நள்ளிரவில் சுமார் 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் துணைவேந்தர் வீடு முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், துணைவேந்தர் நேரில் வந்து மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, அவர்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதுகுறித்து மாணவிகள் தரப்பில் கூறும்போது, விடுதி கட்டிடம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. தரையில் பதிக்கப்பட்டுள்ள டைல்ஸ் கற்கள் ஆங்காங்கே பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளன. விடுதியின் உள்புற சுவர்களில் தண்ணீர் கசிந்து பாசி படர்ந்துள்ளது.
இதனால் சுவர்களில் மின் கசிவு உள்ளது. பொருள்களை குப்பை தொட்டியில் இருந்து உடனடியாக சுத்தம் செய்யாமல் தேக்கி வைக்கின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
விடுதியில் வழங்கப்படும் உணவின் தரம் மோசமாக உள்ளது.
பல மாணவிகளுக்கு இதனால் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு பல்கலைக்கழக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவது வழக்கமாகி விட்டது என்றனர். மாணவிகளின் திடீர் நள்ளிரவு போராட்டத்தால் பல்கலைக்கழக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.