
மதுரை மடீட்சியா கூட்டரங்கில் (28.06.2022) மாவட்ட தொழில் மையம் சார்பாக மாவட்ட ஆட்சியர் மரு.எஸ்.அனீஷ் சேகர், தலைமையில் ஏற்றுமதி பங்குதாரர்கள் (EXPORT STAKEHOLDERS) உடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், ஆட்சியர் தெரிவித்ததாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழகத்தில் தொழில் நிறுவனங்களை வலுப்படுத்தி உற்பத்தியை அதிகரித்திடும் நோக்கில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். உலகளவில் நமது இந்திய தேசம் பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடைந்த நாடுகளுடன் போட்டியிடும் வகையில் வளர்ந்து வரும் நாடாகும்.
இந்தியப் பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு மாநிலம் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றது. குறிப்பாக 2020-2021-ஆம் ஆண்டில் தமிழ்நாடு ரூபாய் 1.93 இலட்சம் கோடி மதிப்பீட்டில் ஏற்றுமதி செய்து இந்தியாவின் ஏற்றுமதியில் 8.97 சதவிகிதம் பங்களிப்பு செய்துள்ளது. தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோயம்புத்தூர், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்கள் உற்பத்தி துறையில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.
மதுரையில் செயல்பட்டு வரும் உற்பத்தி நிறுவனங்களில் 95 சதவிகிதம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களாக செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் ஏறத்தாழ 2 இலட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
மதுரையில் தொழில் வளர்ச்சியை மேலும் அதிகரித்திடும் நோக்கில் பெருநிறுவனங்களை முதலீடு செய்திட ஊக்குவித்திடும் வகையில் தமிழ்நாடு அரசின் மூலம் சிப்காட் மையம் தொடங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இம்மையம் அமைப்பதற்கான சரியான இடம் தேர்வு செய்யும் ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், ஒன்றிய அரசின் வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் ஏற்றுமதியை மேம்படுத்திடும் பொருட்டு தேசிய அளவில் மாவட்ட ஏற்றுமதி மையங்கள் அமைத்திட முதற்கட்டமாக 75 மாவட்டங்கள் தேர்வு செய்துள்ளது.
இதில் நமது மதுரை மாவட்டமும் ஒன்றாகும். மதுரை மாவட்டத்தில் புவிசார் குறியீடு பெற்றுள்ள மல்லி உள்ளிட்ட பல்வேறு வேளாண் உற்பத்தி பொருட்களை மதிப்புக்கூட்டி ஏற்றுமதி செய்திட நல்ல வாய்ப்புள்ளது.
அதேபோல, கைத்தறி, துணிநூல் உற்பத்தியை அதிகரித்திடவும், ஆயத்த ஆடை உற்பத்தியை ஊக்குவித்திடவும், மதுரை சுங்குடி சேலை, தென்னை நார் பொருட்கள் ஆகியவற்றில் ஏற்றுமதியை மேம்படுத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
இத்தகைய வாய்ப்புகளை மதுரை மாவட்டத்தில் உள்ள தொழில் முனைவோர் மற்றும் முதலீட்டாளர்கள், ஏற்றுமதியாளர்கள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு தொழில் வணிகத்துறை கூடுதல் ஆணையர் கிரேஸ் லால்ரிண்டிகி பச்சாவ், அயல்நாட்டு வாணிபக் கழகத்தின் இணை இயக்குநர் டி.ஸ்ரீதர், மடீட்சியா தலைவர் சம்பத் உட்பட அரசு அலுவலர்கள், ஏற்றுமதி பங்குதாரர்கள் பலர் கலந்து கொண்டனர்.