
மதுரை மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் சட்டம் ஒழுங்கு மற்றும் விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று (25.08.2022) மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் தெரிவித்ததாவது:-மதுரை மாவட்டம் மற்றும் மதுரை நகர் பகுதிகளில் வருகின்ற 31.08.2022-அன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படவுள்ளது.
அன்றைய தினத்தில் மதுரை மாவட்டத்தில் மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் விநாயகர் உருவச் சிலைகளை வைத்து வழிபாடு செய்து அதன் பின்னர், அச்சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று, நீர்நிலைகளில் விசர்ஜனம் (கரைப்பது) செய்வது வழக்கமாக இருந்து வருகிறது.
அவ்வாறு விநாயகர் சிலைகள் மீதான வழிபாடு மற்றும் அதைத் தொடர்ந்து நடைபெறும் ஊர்வலத்தின்போது எவ்வித சட்டம் (ம) ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படாத வண்ணம் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து காவல்துறையினருடன் விவாதிக்கப்பட்டது.
வருவாய்துறையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து குறிப்பிட்ட இடங்களில் சிலைகளை வைத்து வழிபாடு செய்வதற்கு காவல்துறையின் முன்அனுமதி பெறப்படல் வேண்டும் . விநாயகர் சிலைகளை கடந்த ஆண்டுகளில் விசர்ஜனம் செய்த இடங்களிலேயே இவ்வருடமும் விசர்ஜனம் செய்யப்பட வேண்டும்.
விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் சிலை வைக்கும் இடங்கள் மற்றும் ஊர்வலம் செல்லும் பாதை ஆகியவற்றிற்கு அனுமதி வழங்கும் முன்னரே, ஊர்வலம் ஆரம்பிக்கும் நேரம் மற்றும் முடிவடையும் நேரம் ஆகியவற்றை கணித்து அதன்படி ஊர்வலம் நடத்த அனுமதி அளித்திடல் வேண்டும்.
சிலை வைத்து வழிபாடு செய்ய அமைக்கப்படும் தற்காலிக கூடாரம் கண்டிப்பாக தென்னங்கீற்று, சாமியானா மற்றும் எளிதில் தீப்பற்றும் வகையிலான பொருட்களினால் அமைந்திருத்தல் கூடாது. மாறாக தகரத்தினால், தற்காலிகமாக அமைக்கப்பட்டிருக்க வேண்டும். கூரையின் உறுதித்தன்மையினை சரிபார்த்திடல் வேண்டும்.
விநாயகர் சிலைகள் ஊர்வலமாக சாலையில் செல்லும்போது சாலையின் குறுக்கே செல்லும் மின்சார கம்பிகளின் மீது உயரமான சிலைகள் உரசி விபத்து ஏற்படாமலிருக்க வாரியத்திற்கு தகவலளித்து உரிய நடவடிக்கை எடுத்திட ஆவண செய்ய வேண்டும். சிலைகள் செய்யப்படும் இடங்களில் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுடன் தணிக்கை செய்து, சுற்றுப்புற சூழலுக்கு தீங்கு ஏதும் விளைவிக்காத வகையில் சிலைகள் செய்யப்படுகின்றனவா என்பது குறித்து திடீர்த் தணிக்கை மேற்கொண்டு, மேற்கண்ட சிலைகளின் மாதிரிகளை சேகரித்து மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுப்ப ஏதுவாக அறிக்கை செய்திடல் வேண்டும்.
சிலைகளை விசர்ஜனம் செய்திட உத்தேசித்துள்ள நீர்நிலைகளில் தண்ணீர் இல்லாமல் இருக்கும்பட்சத்தில் சிலைகளை விசர்ஜனம் செய்வதற்கு ஏற்றாற்போல் வருகிற 31.08.2022 க்கு முன்னரே சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக மேற்படி சிலைகளை விசர்ஜனம் செய்ய போதுமான அளவு தண்ணீர் நிரப்பிட தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
சிலைகளை நிறுவும் வழிபாட்டுக் குழுவினரே அச்சிலைக்கு முழுப் பொறுப்பேற்கும் வகையில் சிலை பாதுகாப்பிற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இரவு நேரங்களில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து சிலைகளைப் பாதுகாக்க வேண்டும். இதனை அனுமதி வழங்கும்போதே சம்பந்தப்பட்ட வழிபாட்டுக் குழுவினரிடம் வலியுறுத்த வேண்டும்.
மேலும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், மின்சார வாரியம், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள், தீயணைப்பு துறையினர், உதவி ஆணையர் (கலால்), மாநகராட்சியினர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் இணைந்து விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பான முன்னேற்பாடு பணிகளில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.சிவபிரசாத், மாவட்ட வருவாய் அலுவலர் ர.சக்திவேல், காவல்துறை துணை ஆணையர்கள், காவல்துறை உதவி ஆணையர்கள், காவல்துறை ஆய்வாளர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.