மதுரை ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் அம்பாசிடர் காரும்
முன்னாள் பிரதமர் வாஜ்பாயை சுமந்த மகிழுந்து

கடந்த சில நாட்களுக்கு முன்பு (24.01.2020) மதுரை ஆவின் அருகே சிவகங்கை ரோட்டில் சென்ற போது மழை சாரலில் நனைந்து கொண்டிருந்த நீங்கள் மேலே காணும் அம்பாசிடரை கண்டேன். காரின் எண் தான் என் கவனத்தை திருப்பியது. இந்த காருக்கு ஒரு காலத்தில் இருந்த மதிப்பு அதில் அமர்ந்து சென்றவர்களால் கிடைத்தது. மதுரை மாவட்டத்தில் பணியாற்றிய 21 கலெக்டர்களும், 23 ஆண்டுகளாக பயணித்த கார் தான் இது.
1983 முதல் 1985 வரை சந்திரலேகா கலெக்டராக இருந்த போது வாங்கப்பட்டது. பிற்காலத்தில் தமிழக தலைமை செயலாளராக இருந்த கிரிஜா வைத்திய நாதன் போன்றோரும் பயன்படுத்தினர். பாரத பிரதமர் வாஜ்பாய் ஒரு முறை மதுரை வந்துள்ளார். விமானத்தை விட்டு இறங்கிய அவர் இந்த காரில் அமர்ந்து வந்து விமான நிலையத்துக்கு வெளியே நின்ற வேறு ஒரு காரில் சென்றாராம்.
2007-ல் மதுரை கலெக்டராக ஜவகர் இருந்த பிறகு தான் காரின் ஆயுள் முடிந்து அரசு ஒர்க் ஷாப் மூலம் ஏலம் விடப்பட்டு இருக்கிறது. யாரோ ஒருவர் அதை எடுத்து இன்று வரை பயன்படுத்தி வருகிறார். G என்ற எழுத்து மட்டும் அழிக்கப்பட்டு இருக்கிறது. இந்த அம்பாசிடர் கார் இருந்த காலத்தில் பல புது மாடல்களில் சொகுசு கார்கள் வந்த போது கூட இந்த வாகனம் மாற்றப்படாமல் இயங்கி வந்துள்ளது. “அதற்கு காரணம் எந்த இடத்திலும் சிறிது ரிப்பேர் கூட ஆகாமல் இருந்தது” என்று 18-க்கும் மேற்பட்ட கலெக்டர்களிடம் பி.ஏ. வாக இருந்த நண்பர் ஜெயசீலன் பெருமையுடன் சொன்னார்.
இந்த அம்பாசிடருக்கு இன்னொரு பெருமை… காரின் எண் TAU 777. இதன் கூட்டு தொகை 21. இதை பயன்படுத்திய கலெக்டர்களின் எண்ணிக்கையும் 21. இந்த விசயம் பலருக்கும் தெரிந்த ஒன்ற என்றபோதும், என் பார்வையில் பட்டதை மீண்டும் ஒரு முறை உங்களோடு நினைவு கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது.
தனராஜ் – பத்திரிக்கையாளர்