
மதுரை வைகை ஆற்றின் வடகரையில் ஆல்பர்ட் விக்டர் மேம்பாலத்தின் கிழக்கே வடக்கு நோக்கி அமைந்த அந்நாளைய பிரமாண்ட கல்கட்டிடம்தான் எர்ஸ்கின் ஹாஸ்பிடல். 1842 ல் இருந்து மதுரை மக்களின் தேவைக்காக இயங்கி வந்த மருத்துவமனை தென் மாவட்ட மக்களின் மருத்துவத் தேவையை தீர்க்கும் வகையில் அந்நாளைய சென்னை மாகாண கவர்னர் லார்ட் எர்ஸ்கின் அவர்களின் பெரும் முயற்சியால் 1940 ஆம் ஆண்டு மிகப்பெரிய மருத்துவமனையாக மாற்றி அமைக்கப்பட்டது.
மருத்துவமனை அவரது பெயராலேயே அழைக்கப்பட்டு வந்தது. அறுபது ஆண்டுகள் தொடர்ந்து நடந்து வந்த ஆல்பர்ட் விக்டர் மேம்பாலம், அமெரிக்கன் கல்லூரி, கலெக்டர் அலுவலகம், எர்ஸ்கின் மருத்துவமனை கட்டுமானப் பணிகளால் வைகை வடகரையில் உருவான கட்டுமானத் தொழில் மதுரை மக்களுக்கு ஒரு புதிய தொழில் வாய்ப்பை உருவாக்கித் தந்தது. கம்பம், திண்டுக்கல், பழநி, இராமநாதபுரம் மட்டுமின்றி இந்தியாவின் கடைகோடி கன்யாகுமரியில் இருந்தும் நோயாளிகள் வந்து சிகிச்சை பெறும்சிறப்பு பெற்றதாக அமைந்தது எர்ஸ்கின் ஹாஸ்பிடல்.
1956 ல் மருத்துவக் கல்லூரியும் ஆரம்பிக்கப்பட்டு தனது சேவையை விரிவாக்கிக் கொண்டது. எர்ஸ்கின் ஹாஸ்பிடலைச் சார்ந்து தற்போது மினிபஸ் நிறுத்துமிடத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட குதிரை வண்டிகளுடன் லாயம் இயங்கி வந்ததை ஐம்பதைக்கடந்த மதுரைவாசிகள் மறந்திருக்க வாய்ப்பில்லை. அந்நாட்களில் காய்ச்சல் என்று வருபவர்களுக்கு அவர்களுடைய கையிலேயே நீரேற்றிய பென்சிலின் மருந்து பாட்டிலை செவிலியர்கள் கொடுத்து குலுக்கி வாங்கி ஊசி போடுவதை பார்த்திருக்கிறேன்.
1980 ல் அரசு ராஜாஜி மருத்துவமனை என பெயர்மாறிய எர்ஸ்கின் ஹாஸ்பிடல் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையைக் காட்டிலும் அதிகப்படியான நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துவருவதை சில மருத்துவர்கள் கூட அறிந்திருக்கவில்லை என்பதுதான் உண்மை. எர்ஸ்கின் ஹாஸ்பிடல் மதுரையின் உன்னதங்களில் ஒன்று. அதுமட்டுமல்ல மதுரை மீனாட்சி அம்மன் கோவில், புனித மரியன்னை ஆலயம், தொழுகை பள்ளிவாசல் எல்லாவற்றையும்விட அதிக பிரார்த்தனை நடைபெறும் இடம் எனச்சொன்னால் அது மிகையில்லை.
மதுரைக்காரன்.