
மதுரை மாவட்டம், மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வார விழா விழிப்புணர்வு கண்காட்சியினை (03.08.2022) சமூக நலன் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் திறந்து வைத்து கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து நிறைந்த மருந்து பெட்டகத்தை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், சமூக நலன் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:- தமிழ்நாடு முதலமைச்சர் அஉத்தரவுப்படி, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்பு மையங்களின் மீது அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
குழந்தைகள் குற்றங்கள் செய்திருந்தாலும் அல்லது குற்றங்கள் செய்யாமல் அவர்கள் மீது தொடுக்கப்பட்டிருக்கும் வழக்குகள் மீது சிரத்தை எடுத்து எல்லா வழக்குகளையும் வேகப்படுத்த வேண்டும். அதன்படி, தற்பொழுது குற்றங்கள் நடந்தவுடன் அக்குற்றத்திற்கான நடவடிக்கை, எப்.ஐ.ஆர், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, அவ்வழக்குகள் வேகப்படுத்தப்பட்டு வருகிறது.
குழந்தைகளை பிச்சை எடுப்பதற்காகவும், பாலியல் துன்புறுத்தலுக்காகவும், குறைவான சம்பளத்தில் வேலைக்கு அமர்த்தி அவர்களின் உழைப்பினை சுரண்டுவதற்காகவும் கடத்தபடும் குழந்தைகளை மீட்டெடுத்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் வசம் ஒப்படைக்கப்படுகின்றனர். வெளிமாநிலங்களிலும் இவ்வாறு மீட்டெடுக்கப்படும் குழந்தைகளையும் அந்தந்த மாநிலத்தின் உயர் அலுவலர்கள், ஆட்சித்தலைவர்களிடம் அந்த குழந்தைகளை அவர்களின் பெற்றோர்களிடமே ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர், தாய்ப்பாலின் முக்கியத்துவம் கருதி உலக தாய்ப்பால் வார விழாவினை சிறப்பிக்கும் வகையில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஊட்டசத்து நிறைந்த மருந்து பெட்டகத்தை வழங்குவதற்கு வழிவகை செய்துள்ளார்கள்.
கருவுற்ற நாள் முதல் தொடர்ந்து 2 வருடங்கள் ஊட்டச்சத்து நிறைந்த உணவு வகைகளை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். மேலும், பிறந்த குழந்தைக்கு 6 மாதகாலம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். 2 வருடகாலம் குழந்தைளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவினை அளித்து பேணிக்காத்தால் மட்டுமே வருங்கால சமுதாயத்தில் குழந்தைகள் ஆரோக்கியமாகவும், புத்திக்கூர்மை உடையவர்களாகவும் திகழ முடியும்.
மேலும், சட்டத்துக்கு முரணான செயல்களில் ஈடுபடும் குழந்தைகள், தானாகவே படிக்க விருப்பமில்லாமல் பள்ளிக்கு செல்லாமல் இருக்கும் குழந்தைகளை கண்டறிந்து அவர்களுக்கு இத்துறையின் மூலம் கல்வியை வழங்கி வருகின்றோம். மேலும், தொழிற்பயிற்சியில் தகுதி பெற்றவர்களுக்கு தொழில் தொடங்குவதற்கு தேவையான தொழிற்கடன் வழங்கும் திட்டத்தினை அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறையும், சமூக நலத்துறையும் இணைந்து குழந்தைகள் படிக்க விருப்பம் தெரிவிக்கவில்லை என்றாலும் அவர்களை அவர்கள் போக்கிலேயே விட்டுவிடக் கூடாது என்பதற்காக பெற்றோர்களுக்கு கவுன்சிலிங் வழங்குகிறோம். பெற்றோர்களே குழந்தைகளை குடும்ப வறுமைக்காக பிச்சை எடுக்க அனுப்புதல் தண்டனைக்குரிய குற்றமாகும். பெற்றோர்கள் தாங்கள் விரும்பும் பாடத்தினைதான் குழந்தைகள் படிக்க வேண்டும் என்று அவர்கள் மீது தங்கள் விருப்பத்தினை திணிக்கக் கூடாது.
குழந்தைகளும் இந்த பாடத்தினை படித்தால்தான் நினைத்த இலக்கினை அடைய முடியும் என்ற எண்ணத்தை தவிர்க்க வேண்டும். பெற்றோர்கள் காலச்சூழலுக்கு ஏற்றவாறு, சமயத்திற்க்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்.
எந்த பாடத்தினை படித்தாலும் தங்களால் அனைத்துத் துறைகளிலும் சாதிக்க முடியும் என்ற எண்ணம் குழந்தைகளுக்கு உருவாக்க வேண்டும் என்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் தெரிவித்தார்.
மேலும், மதுரை மானகிரியில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் மையத்தை சமூக நலன் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அமைச்சர் ஆய்வு செய்து பார்வையிட்டார்.
முன்னதாக, சமூக நலன் மற்றும் சத்துணவுத் திட்டத்துறையும், யுனிசெஃப் நிறுவனமும் இணைந்து நடத்திய குழந்தைகள் பாதுகாப்பு குறித்து காவல்துறை அதிகாரிகளுக்கு நடத்தப்பட்ட பயிற்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் ஜீத் சிங் காலோன், மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் மு.பூமிநாதன், மண்டலத் தலைவர்கள் புவனேஷ்வரி சரவணன், முகேஷ் சர்மா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.