
தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைக்கவுள்ள மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிகழ்விற்கான பந்தகால் நடும் விழா (10.01.2021) வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடைபெற்று தெரிவிக்கையில்:
தாய் தமிழ்நாட்டின் தமிழ் சமுதாயத்தினுடைய வீரத்தின் அடையாளமாக, பாரம்பரியத்தின் அடையாளமாக மற்றும் பண்பாட்டின் அடையாளமாக இருக்கின்ற உலகப்புகழ் பெற்ற வரலாற்று சிறப்புமிக்க அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டினை தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் தங்களது பொற்கரங்களால் துவக்கி வைக்க வருகை தரவுள்ளார்கள்.
இந்தியாவில் இதுவரை நிகழ்ந்திராத தை திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு ரூ.2500 ரொக்கம், ஒரு முழுநீள கரும்பு, வேட்டி, சேலை, அரிசி, சர்க்கரை, முந்திரி, உலர் திராட்சை மற்றும் ஏலக்காய் உள்ளிட்ட சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பினை தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ளது.
அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டிற்கான அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த வருடமும் அலங்காநல்லூ ஜல்லிக்கட்டு விழாவில் சிறந்த மாடுபிடி வீரர் மற்றும் சிறந்த காளைக்கு தலா ஒரு கார் பரிசாக வழங்கப்பட உள்ளது. ஒட்டுமொத்த இளைஞர் சமுதாயமும், தமிழ்ச் சமுதாயமும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை துவக்கி வைக்க வருகை தரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோரை வரவேற்க தயாராக உள்ளது.
காலை 8.00 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டியானது துவக்கி வைக்கப்படும். மாவட்ட நிர்வாகம், காவல்துறை, மக்கள் நல்வாழ்வுத்துறை, கால்நடைத்துறை, பொதுபணித்துறை, உள்ளாட்சித்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மருத்துவ தகுதியின் அடிப்படையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பங்கேற்க 430 வீரர்களும், பாலமேடு ஜல்லிக்கட்டில் பங்கேற்க 651 வீரர்களும், அலங்காநல்லூ ஜல்லிக்கட்டில் பங்கேற்க 655 வீரர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி வாடிவாசல் முதல் காளைகள் சேகரிக்கும் இடம் வரை தடுப்பு வேலிகள் அமைக்கப்பட உள்ளது. குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, வாகன நிறுத்தம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட உள்ளன. இவ்வருடம் தனிமனித இடைவெளியோடு பார்வையாளர்கள் இருக்கைகள் அமைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் த.அன்பழகன், காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித்குமார், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் கே.மாணிக்கம், மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமாரி, வருவாய் கோட்டாட்சியர் (மதுரை) முருகானந்தம், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) சேதுராமன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) செல்லதுரை, வட்டாட்சியர் (வாடிப்பட்டி) பழனிக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.