அமைச்சர்செய்திகள்முகாம் | மருத்துவம்

மதுரை அரசு இராசாசி மருத்துவ கல்லூரிக்கு மருத்துவ உபகரணங்கள் வாங்க ரூ.36 கோடி நிதி ஒதுக்கீடு | மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் தகவல்

Allocation of Rs.36 Crores to purchase medical equipments for Madurai Govt Information from the Minister of People's Welfare

மதுரை மாவட்டம், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி அவர்கள், நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் முனவைர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் அரசு இராசாசி மருத்துவமனையில் எலும்பு வங்கியின் மூலமாக சிகிச்சை பெற்று பயனடைந்த பயனாளிகளை நலம் விசாரித்து மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வுக்கு பின் மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்:-

மதுரை அரசு இராசாசி மருத்துவமனை பலவகையில் ஒட்டுமொத்த தென்னகத்திற்கே மிகப்பெரிய மருத்துவ பயன்பாடுள்ள மருத்துவமனையாக உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் பதவியேற்ற பின்பு பல்வேறு புதிய வசதிகள் இம்மருத்துவமனையில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மற்றும் நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் மதுரை மாவட்டத்திற்குத் தேவையான மருத்துவ கட்டமைப்பை மக்கள் நல்வாழ்வுத் துறையிடம் கேட்டு பெற்று வருகிறார்கள். இன்று காலை சுகாதார நிலையங்கள் திறப்பு விழா நிகழ்வின் போது மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் அவர்கள் கலந்துகொண்டதோடு மதுரை கிழக்கு தொகுதியில் 3 துணை சுகாதார நிலையங்கள் அமைத்துத்தரவும் கோரியுள்ளார்.

மதுரை அரசு இராசாசி மருத்துவ மனையில் கடந்த டிசம்பர் மாதம் 21-ஆம் தேதி ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் எலும்பு வங்கி திறந்து வைக்கப்பட்டது. நோயாளிகளிடமிருந்து கொடையாக பெறப்பட்ட 36 எலும்புகள் இங்கு சேமித்து வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை 7 நோயாளிகள் பயன்பெற்றுள்ளனர். அரசு மருத்துவ மனைகளில் எலும்பு வங்கிகளின் பயன்பாடு இன்றியமையாததாக உள்ளது. எலும்பு மாற்று அறுவை சிகிச்சையில் மதுரை அரசு இராசாசி மருத்துவமனை ஒரு மகத்தான சாதனை புரிந்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் 18-ஆம் தேதி ”இன்னுயிர் காப்போம், நம்மை காக்கும் 48” திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. தமிழகத்து எல்லையில் யாருக்கு விபத்து நேர்ந்தாலும் அவர்களை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கச் செய்து முதல் 48 மணி நேரத்தில் ரூ.1 லட்சம் வரை அரசு செலவில் இத்திட்டத்தின் மூலம் சிகிச்சை பெற முடியும். இந்த மகத்தான திட்டம் இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டுமே மிகச்சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டம் தொடங்கப்பட்ட நாள் முதல் மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் விபத்துகளில் சிக்கிய 3,185 நபர்கள் அனுமதிக்கப்ட்டு சிகிச்சை பெற்று நலமுடன் திரும்பியிருக்கிறார்கள். இவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக ரூ.3,05,49,175/- நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. தமிழக அளவில் இத்திட்டத்தின் மூலம் விபத்துகளில் சிக்கிய 96,807 நபர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளர். இவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக ரூ.87,34,44,609/- நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் மதுரை மாவட்டத்திற்கென்று பிரத்யேகமாக அறிவிக்கபட்ட 23 திட்டங்களின் மூலம் ரூ.110,48,00,000/- மதிப்பில் பல்வேறு பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. பல பணிகள் நடைபெறவுள்ளது. உசிலம்பட்டி மாவட்ட தலைமை மருத்துவமனையில் ரூ.2.75/- கோடி மதிப்பீட்டில் புறநோயாளிகள் பிரிவு, ஊடுகதிர் ஸ்கேன், இரத்த வங்கி மற்றும் கண் அறுவை சிகிச்சை மையம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறன்றன. மேலும் ரூ.5 கோடியே 26 லட்சம் மதிப்பீட்டில் அறுவை சிகிச்சை அரங்கம், ஆண்கள் மற்றும் பெண்கள் வார்டு, குழந்தைகள் சிகிச்சை பிரிவு அமைப்பதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன.

திருமங்கலம் அரசு மருத்துவமனையில் ரூ.25/- லட்சம் மதிப்பீட்டில் இரத்த வங்கி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சமயநல்லூர் நலவாழ்வு மற்றும் குடும்பநல பயிற்சி மையத்திற்கு ரூ.1.5/- கோடி மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் ரூ.1.75/- கோடி மதிப்பீட்டில் தாதியர் துணை செவிலியர் பயிற்சிப் பள்ளிக் கட்டிடம் கட்டும் பணியும் நடைபெற்று வருகிறது.
மதுரை அரசு இராசாசி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்காக ரூ.36 கோடியே 60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

குழந்தைகள் நல ஆராய்ச்சி மையம் 400 படுக்கை வசதிகளுடன் ஒருங்கிணைந்த ஒப்புரவு மையமாக மாற்றுவதற்கு ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மரபியல் மற்றும் மரபு சார்ந்த நோய்களுக்கான 3 ஒப்புரவு மையங்கள் ரூ.2 கோடியே 73 லட்சம் மதிப்பீட்டில் அமையவுள்ளது. கருத்தரிப்பு மையம் ரூ.2.5 கோடி மதிப்பீட்டில் உருவாக உள்ளது. மேலும் இப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று கட்டண மருத்துவ படுக்கை பிரிவும் ரூபாய் ஒரு கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட உள்ளது என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் தெரிவித்தார்.

தொடர்ந்து மதுரை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அலுமினி அசோசியேசன் சார்பில் ரூ.3 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உள்விளையாட்டு அரங்கத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்,  வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர்  மற்றும்  நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறைஅமைச்சர் அவர்கள் ஆகியோர் திறந்து வைத்தனர்.

முன்னதாக மதுரை பன்னாட்டு விமான நிலையத்தில் வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளிடம் குரங்கம்மை பற்றிய பரிசோதனை ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர்.

மேலும் பேரையூர் வட்டம் பெருங்காமநல்லூர், உத்தபுரம், மல்லபுரம் மற்றும் இ.கோட்டைபட்டி, ஆகிய நான்கு ஊர்களில் தலா ரூ.25 லட்சம் வீதம் ஒரு கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள துணை சுகாதார நிலையங்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்துவைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், மாநகராட்சி மேயர் வ.இந்திராணி, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆ.வெங்கடேசன் (சோழவந்தான்), மு.பூமிநாதன் (மதுரை தெற்கு), அரசு இராசாசி மருத்துவமை முதல்வர் மரு.இரத்தினவேல், மாநகராட்சி துணைமேயர் நாகராஜன் அவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

ரவி சந்திரன்

ஹலோ மதுரை மாத இதழின் மூத்த நிருபர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: