
சரவணா ஸ்டோர் நிறுவனத்தின் உரிமையாளர் அருள் நடித்துள்ள தி லெஜண்ட் திரைப்படம் 2500 தியேட்டர்களில் தமிழ், தெலுங்கு உட்பட ஐந்து மொழிகளில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் பிரபல எஸ்விஎஸ் கடலைமாவு நிறுவனம் சார்பில், மதுரையில் 100 மாற்றுத்திறனாளிகளுக்கு தி லெஜண்ட் திரைப்படத்திற்கான இலவச டிக்கெட் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, எஸ்விஎஸ் கடலைமாவு நிறுவனத்தின் பங்குதாரர் எஸ்.வி.சூரஜ் சுந்தர சங்கர் நம்மிடம் தெரிவிக்கையில், கடந்த ஜீலை 28ம் தேதி சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் சரவணா அருள் நடித்து வெளியான தி லெஜண்ட் திரைப்படத்திற்கு, வரும் ஜீலை 31ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மதுரை குரு தியேட்டரில் காலை 10.30 மணி காட்சிக்கு 100 மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்கும் வகையிலும், தன்னம்பிக்கை தரும் வகையிலும் இத்திரைப்படத்தை பார்வையிட எங்கள் நிறுவனத்தின் சார்பில் ஏற்பாடு செய்துள்ளோம்.
சிறிய கிராமத்தில் இருந்து சென்னை மாநகரத்திற்கு வியாபாரம் செய்யும் முனைப்போடு வந்த சரவணா ஸ்டோர்ஸ் குடும்பத்தினர், வியாபாரத்தில் கடின உழைப்பால் உயர்ந்து, தற்போது திரை உலகத்திலும் கொடிகட்டி திகழும் சரவணா நிறுவனத்தின் உரிமையாளர் அருள் அவர்களின், ஒவ்வொரு முயற்சியும் நம் அனைவருக்கும் ஆக்கத்தையும், ஊக்கத்தையும் அளித்து நம் அனைவருக்கும், முன் உதாரணமாய் சிறந்து விளங்குகிறார்.
அவரது இந்த முயற்சிக்கு எங்கள் பாராட்டுக்களையும், இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி அடைய எங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு இத்திரைப்படம் கூடுதல் ஊக்கத்தை அளிக்கும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் 100 பேருக்கு இலவச டிக்கெட் வழங்கப்படுகிறது என்று தெரிவித்தார்.