
மதுரை மாதித்ச்சியா கூட்டரங்கில் 25.06.2022 அன்று வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலம் தொழில் முனைவோருக்கு செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து மதுரை மாவட்ட குறு மற்றும் சிறிய அளவிலான தொழில் முனைவோர் சங்க உறுப்பினர்களுடன் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.
வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை இயக்குநர் முனைவர் எஸ்.நடராஜன், கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். அவர் தனது உரையில் உணவு பதப்படுத்துதல் தொழில் முனைவோருக்கு வழங்கப்படும் திட்டங்கள் மற்றும் சலுகைகள் குறித்து எடுத்துரைத்தார்.
மேலும் வேளாண் கட்டமைப்பு நிதியில் தனியார் நிறுவனங்களின் பங்கு மிகவும் அவசியம் எனவும், சேமிப்பு கிடங்கு, குளிர்பதனக் கிடங்கு, முதன்மை பதப்படுத்தும் நிலையங்களை ஏற்படுத்துவதற்கு வழங்கப்படும் கடன் வட்டி சலுகைகள் குறித்து தெரிவித்தார்.
வேளாண் விளைபொருட்கள் ஏற்றுமதிக்கு அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்தும், துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கட்டமைப்புகளை தொழில் முனைவோர் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
மேலும், மதுரை மாவட்டத்தில் அமைக்கப்பட்டு வரும் உணவுப்பூங்கா, முருங்கை ஏற்றுமதி மண்டலம் குறித்தும் விளக்கிக் கூறினார்.
இக்கூட்டத்தில் மாதித்ச்சியா தலைவர் சம்பத், செயலாளர்கள் அரவிந்த், ஞானசம்பந்தம் உட்பட சங்க பிரதிநிதிகள், உறுப்பினர்கள், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.