
மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் (23.08.2022) வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, நிதி மற்றும் மனிதவள மேலண்மைத்துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர், வரலாற்று சிறப்புமிக்க வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் தீர சரித்திரத்தை பறைசாற்றும் வகையில் இசையார்ந்த நடன நாடகத்தை தொடங்கி வைத்து பார்வையிட்டார்கள்.
வீரம் என்ற மூன்றெழுத்தை தன் மூச்சாகக் கொண்ட வீரமங்கை வேலுநாச்சியார் அவர்கள் மருது சகோதரர்கள் ஆதரவுடனும், ஹைதர் அலி, கோபால் நாயக்கர் ஆகியோரின் உதவியுடன் சிவகங்கை மக்களை ஒன்று திரட்டி, வலுவான ஓர் எதிர்ப்புப் படையினை உருவாக்கி, ஏழு ஆண்டுகள் இடைவிடாமல் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போரிட்டு மாபெரும் வெற்றிப் பெற்று சிவகங்கை சீமையை மீட்டெடுத்தார்.
இதனைத் தொடர்ந்து 1789 ஆம் ஆண்டு வரை சிவகங்கையை ஆட்சி செய்தார். வடஇந்திய ஜான்சி ராணிக்கு 75 ஆண்டுகளுக்கு முன்பே விடுதலைப் போராட்டத்தில் ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடிய முதல் வீரப் பெண்மணி வேலுநாச்சியார் ஆவார்.
இந்திய விடுதலை வரலாற்றில் வீரம் நிறைந்த வீரமங்கை வேலுநாச்சியாருக்கு ஈடாக எவரும் இல்லை. சிவகங்கை சீமையை ஆண்ட வீரமங்கை வேலுநாச்சியார் 25.12.1796 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.
வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையில் கலைப்பண்பாட்டுத் துறை, மூலம் ஓ.வி.எம். தியேட்டர்ஸ் நிறுவனம் இணைந்து 62 நாடக கலைஞர்கள் பங்கேற்ற வீரமங்கை வேலுநாச்சியார் இசையார்ந்த நாட்டிய நாடகம் முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, சங்கம் வளர்ந்த மதுரையில் உள்ள ராஜா முத்தையா மன்றத்தில் இன்றைய தினம் (23.08.2022) வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, நிதி மற்றும் மனிதவள மேலண்மைத்துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர், ஸ்ரீராம் சர்மாவின் வேலு நாச்சியார் இசையார்ந்த நாட்டிய நாடக நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டார்கள்.
இந்த நாடக நிகழ்ச்சியில் அறுபது கலைஞர்கள் தோன்ற பதினெட்டாம் நூற்றாண்டை கண்முன்னே கொண்டு வரும் காவிய கதைகள் குறித்தும், மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் பொற்காலத் தோற்றம் குறித்தும், பிரம்மாண்டமாக அரங்கேறவிருக்கும் தமிழ் மண்ணின் ஈர வீர சரித்திரம் குறித்தும், அன்னியர்களால் மறைக்கப்பட்டு பல்லாண்டு கால உழைப்பின் பயனாக மீண்டெழுந்திருக்கும் தாய்த் தமிழ் மண்ணின் வெற்றிச் சரித்திரம் குறித்தும் காண்போர் உள்ளம் மகிழும் வகையில் எடுத்துரைக்கப்பட்டது.
மேலும், வீரமங்கை வேலுநாச்சியார் வாழ்க்கை வரலாறு குறித்த இந்த இசையார்ந்த நாட்டிய நாடகம் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 27.08.2022-அன்று கலைக் காவிரி நுண்கலைக் கல்லூரியிலும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் 28.08.2022-அன்று இந்துஸ்தான் கல்லூரியிலும், சிவகங்கை மாவட்டத்தில் 30.08.2022-அன்று அரண்மனை வளாகத்திலும் சிறப்புடன் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், மாவட்ட வருவாய் அலுவலர் ர.சக்திவேல், மதுரை மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் ஜீத்சிங் காலோன்,சட்டமன்ற உறுப்பினர்கள் ஆ.வெங்கடேசன் (சோழவந்தான்), மு.பூமிநாதன் (மதுரை தெற்கு), மதுரை மாநகராட்சி துணை மேயர் தி.நாகராஜன், முன்னாள் அமைச்சர் பொன் முத்துராமலிங்கம் அவர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.